நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை

அறிஞர் லுக்மான் தம் அன்பு மகனுக்குச் சொன்ன அறிவுரைகள் பலவற்றைக் குர்ஆன் நமக்கு எடுத்துரைக்கிறது. 

 முதல் அறிவுரை இது -

“அன்பு மகனே, 

நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கி விடாதே. உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமம் ஆகும்.” (குர்ஆன் 31:13)

ஒரு தந்தைக்கு இந்த உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் விட நேசத்துக்குரியவர்கள் தம் பிள்ளைகள்தாம். 

பிள்ளைகளுக்கு நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் கற்பித்து, அவனைச் சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை அல்லவா.

“உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வழங்கும் செல்வங்களிலேயே சிறந்த செல்வம் நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதுதான்” என்று நபிகளார் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்.

ஆகவே தத்துவ மேதை லுக்மான் தம் மகனுக்கு அறிவுரைகள் வழங்கியது இயல்பானதுதான் என்றாலும் அவர் எடுத்துரைத்த அறிவுரைகளின் முக்கியத்துவம் கருதி இறைவன் அவற்றைத் தன் வேதத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

“மகனே, ஏக இறைவனை மட்டுமே வழிபடு. 

அவனை விடுத்து வேறு யாரையும் வழிபடாதே. 

அவ்வாறு செய்வது அக்கிரமங்களிலேயே மிகப் பெரும் அக்கிரமம் ஆகும்” என்று கூறினார்.

இணைவைப்பு  எவ்வளவு பெரும் அநீதி என்பதைக் குர்ஆனின் வேறுபல வசனங்களும் எடுத்துரைக்கின்றன. 

ஏகப் பரம்பொருளையே வணங்க வேண்டும் என்று திருமறை எந்த அளவுக்கு அழுத்தம் தருகிறதோ-

 அதே அழுத்தம் அந்த ஏக இறைவனை விடுத்து வேறு யாரையும் வணங்கக் கூடாது என்பதற்கும் தருகிறது.

மறுமையில் இறைவனைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆசை எந்த அடியாருக்குத்தான் இருக்காது? 

அப்படியானால் அவர் என்ன செய்யவேண்டும்?

இதோ, திருமறை வழிகாட்டுகிறது.

“எவர் தம் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கிறார்களோ அவர் நற்செயல்கள் புரியட்டும். அடிபணிவதில்  தம் இறைவனுடன் யாரையும் இணையாக்காதிருக்கட்டும்.” (குர்ஆன் 18:110)

படைத்த இறைவனைச் சந்திக்க வேண்டும் எனில் அதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. 

1. நற்செயல்கள். இதில் வழிபாடுகள் தொடங்கி இதர மனிதர்களுக்கும் படைப்பினங்களுக்கும் செய்ய வேண்டிய அனைத்தும் அடங்கிவிடும்.

 2. இறைவனுக்கு இணை கற்பிக்காமல் இருத்தல்.

இறைவனுக்கு இணை கற்பித்துவிட்டால் வீடுபேறு கிடைக்காது என்பது உறுதி. 

தம் அன்பு மகனுக்கு வீடுபேறு கிடைக்காத நிலை வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் அறிஞர் லுக்மான் முதல் அறிவுரையாக, “இறைவனுக்கு இணை வைக்காதே” என்று எச்சரிக்கிறார். 
 

“எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையை இணைவைப்பு எனும் அநீதியால் மாசுபடுத்தவில்லையோ அவர்களுக்கே அமைதி உண்டு. அவர்களே நேர்வழி அடைந்தவர்கள்” (குர்ஆன் 6:82)

- சிராஜுல் ஹஸன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset