
செய்திகள் சிந்தனைகள்
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
“மூன்று தீய பழக்கங்களில் (பொய், திருட்டு, விபச்சாரம்) ஏதேனும் ஒன்றைத்தான் விடமுடியும். எதை விடுவது?”
அந்த இளைஞன் இப்படிக் கேள்வி கேட்டது யாரிடம் தெரியுமா?
அகிலத்திற்கே ஓர் அருட்கொடையான அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம்.
ஜாஹிலிய்யா- அறியாமைக் கால கட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞன் நபிகளாரின் சத்திய அழைப்பால் கவரப்பட்டுக் கலிமா மொழிந்துவிட்டான்.
ஆனால் அவனிடம் தொற்றிக்கொண்ட அந்த மூன்று தீய பழக்கங்களும் அவனை விடாமல் துரத்தின.
ஏதேனும் ஒரு பழக்கத்தையாவது விட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தான்.
எதை விடுவது?
குழம்பினான்.
துணிந்து நபிகளாரிடமே வழி கேட்டு வினாவை முன்வைத்தான்.
நபிகளார்(ஸஸ்) சிறிதும் சினம் கொள்ளவில்லை.
புன்னகைத்தபடி, “பொய் சொல்வதை விட்டுவிடு” என்றார்.
அவனும் “பொய் சொல்ல மாட்டேன்” என்று வாக்குறுதி அளித்தான்.
இரவு நேரம்.
வானில் இனிய நிலா.
சிலுசிலுவெனக் காற்று.
அவன் வழக்கமாகச் செல்லும் விலைமகளின் வீடு அருகில்தான் இருந்தது.
அவளின் அழகை நினைத்து இருப்பு கொள்ளாமல் தவித்தான்.
ஆர்வத்துடன் கிளம்பினான்.
வழியில் திடீரென்று மனத்தில் ஓர் உதிப்பு.
“இறைத்தூதர் அவர்கள் நாளை என்னைப் பார்க்கும்போது ‘நேற்று என்ன செய்தாய்’ என்று கேட்டால் என்ன மறுமொழி சொல்வது?
“பொய் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளேன்.
“முறையற்ற பாலுறவில் ஈடுபட்டேன் என்று சொன்னால் அதற்குரிய தண்டனையைத் தாஹா நபி தந்துவிடுவாரே? ஐயோ, அந்தக் கடும் தண்டனையை யார் தாங்குவது?”
அதிர்ந்து போய் அப்படியே திரும்பிவிட்டான்.
அன்றோடு தவறான பாலுறவு எனும் தீய பழக்கம் அவனிடமிருந்து அடியோடு மறைந்தது.
திருட்டுப் பழக்கமும் அப்படித்தான்.
“திருடினேன்” என்று சொன்னால் திருநபி தண்டிக்காமல் விடுவாரா?
கையே போய்விடுமே.
பொய், திருட்டு, தவறான பாலியல் உறவு ஆகிய மூன்று தீய செயல்களில் இருந்தும் முழுமையாக விடுபட்டான்.
இறையச்சத்துடன் வாழத் தொடங்கினான்.
“ஒழுக்கம்தான் உயிர்” எனத் தெரிந்தான், தெளிந்தான்.
- சிராஜுல் ஹஸன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am