
செய்திகள் சிந்தனைகள்
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்களுக்குப் பிறகு உலகில் எந்த நபியும் தோன்றவில்லை.
முந்தைய வேதங்கள் முன்னறிவித்த இறுதித்தூதரின் வருகைக்காக உலகமே காத்திருந்தது.
அந்த நாளும் வந்தது.
கி.பி.571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ஆம் தேதி திங்கட் கிழமை அதிகாலையில் பிறந்தார்.
அவருடைய பிறப்பைப் பற்றி உலகப் புகழ் பெற்ற நபி வரலாற்று நூலான ‘ரஹீக்’ பின்வருமாறு கூறுகிறது:
“குழந்தையைப் பெற்றெடுத்ததும் தாய் ஆமினா அந்த நற்செய்தியை அப்துல் முத்தலிபுக்குத் தெரிவித்தார்.
அவர் மகிழ்ச்சியுடன் தம் பேரரைக் கஅபா ஆலயத்திற்குத் தூக்கிச் சென்று இறைவனுக்கு நன்றி செலுத்தி அவருக்காகப் பிரார்த்தித்தார்.
குழந்தைக்கு ‘முஹம்மத்’ என்று பெயரிட்டார். இந்தப் பெயர் இதற்கு முன் வேறு எவருக்கும் சூட்டப்படவில்லை.” (பக்.75)
அன்றைய வழக்கப்படி குழந்தைகள் பிறந்ததும் கிராமப்புறங்களில் உள்ள செவிலித் தாய்களிடம் சில ஆண்டுகள் வளர்க்கக் கொடுத்துவிடுவார்கள்.
அதே போல் குழந்தை முஹம்மத், ஹலீமா எனும் செவிலித் தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஹலீமா மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
போதிய உணவில்லாததால் அவருடைய மார்பகங்கள் வற்றியிருந்தன.
அவருடைய சொந்தக் குழந்தைக்குப் புகட்டுவதற்கும்கூட அவரிடம் பால் சுரந்ததில்லை.
அவர்களுக்குச் சொந்தமாக ஒரு மெலிந்த ஒட்டகம் இருந்தது. அது பால் தருவதே அபூர்வம்.
ஆனால் குழந்தை முஹம்மதை வளர்க்கும் பொறுப்பு ஹலீமாவிடம் வந்தவுடன் இந்த வறுமை நிலைமை அடியோடு மாறத் தொடங்கியது.
அந்த அதிசயத்தை அன்னை ஹலீமாவே கூறுகிறார்:
“அந்தக் குழந்தையை என் மடியில் வைத்தவுடன் என் மார்புகளில் பால் சுரந்தது.
குழந்தை வயிறு நிரம்ப பால் அருந்தியது....
என் கணவர் எங்களின் கிழ ஒட்டகத்தை நோக்கிச் சென்றார்.
அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது.
அதைக் கறந்து நானும் என் கணவரும் பசி தீரக்குடித்தோம். அன்றிரவை நிம்மதியாகக் கழித்தோம்.
காலையில் என் கணவர், ‘ஹலீமாவே, இறைவன் மீது ஆணையாக! நீ மிகவும் அருள்வளம் மிக்க குழந்தையை அடைந்திருக்கிறாய்” என்றார்.
அதற்கு நான் ‘அப்படித்தான் நானும் நினைக்கிறேன்’ என்றேன்.” (ரஹீக், பக்77)
ஆம்..! உண்மையில் அந்தக் குழந்தை உலகிற்கே ஓர் அருட்கொடையாகத்தான் விளங்கியது..!
“நபி பிறந்தார்...எங்கள் நபி பிறந்தார்..
நல்ல பேரொளி பிறந்ததம்மா
தூதர் பிறந்தார்..எங்கள் தூதர் பிறந்தார்- இருள்
துயரங்கள் மறைந்ததம்மா”
அஞ்ஞான இருள் சூழ்ந்த நேரம்
அகிலமெல்லாம் அடைந்ததுவே சோகம்
மெஞ்ஞான கதிரவனாய் வந்து
முஹம்மது நபி பிறந்தனரே!
நானிலத்தை வாழ வைக்க
நாயகம் பிறந்தார்
நபி நாயகம் பிறந்தார்
மாநிலத்தின் ரஹ்மத்தாக
நாயகம் பிறந்தார்
மாந்தருக்கு தீபமாக
நாயகம் பிறந்தார்.
வானம் பூமி யாவும் போற்றும்
நாயகம் பிறந்தார்!
“(முஹம்மத்) இறைவனின் தூதராகவும் இறுதிநபியாகவும் இருக்கிறார்” (குர்ஆன் 33:40)
- சிராஜுல் ஹஸன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm