
செய்திகள் சிந்தனைகள்
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
கற்பொழுக்கம் குறித்தும் கண்ணிய நடத்தை குறித்தும் பேசும்போதெல்லாம் பெரும்பாலும் அங்கே பெண்கள்தான் பேசுபொருளாக இருக்கின்றனர். ஏன் ஆண்கள் குறித்து பேசுவதில்லை?
கற்பொழுக்கத்தை இஸ்லாம் இருபலருக்கும் பொதுவில் வைக்கிறது. ஆம், ஆணுக்கும் கற்புண்டு என்று இஸ்லாம் கூறுகிறது. கற்பொழுக்கம் மிக்கவன்தான் ஆண்மகன் என்று வலியுறுத்துகிறது.
ஆணாதிக்கம்.. சுயநலமாக பெண்ணுக்கு மட்டும் கற்பெனும் விலங்கு பூட்டி அடிமைப்படுத்துகிறது. ஆனால் இஸ்லாம் அதையே ஒழுக்கப் பயிர் காக்கும் வேலியாக ஆணுக்கும் சேர்த்துக் கூறுகிறது.
நபிகளாரிடம் ஓர் இளைஞர் வந்து, "இறைத்தூதரே! விபச்சாரம் செய்வதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்'' என்று கேட்கிறார்.
ஆச்சரியம்! இவ்வளவு தெளிவாகவா? பகிரங்கமாகவா? அதுவும் அனைவரும் இருக்கும் சபையில்?
அவரை அருகே அழைத்த அண்ணலார் கேட்டார்கள்: "உனது தாய் விபச்சாரம் செய்வது உனக்கு விருப்பமா?''
அதிர்ந்தார் அந்த அப்பாவி இளைஞர். "இல்லை. இல்லை. நான் அதைப் பொருந்திக்கொள்ள மாட்டேன்'' என்று வேகமாகத் தலையாட்டினார்.
"மனிதர்கள் அனைவரும் அவ்வாறுதான். தன் தாய் விபச்சாரம் செய்வதை எவரும் விரும்புவதில்லை'' என்று பதில் கூறினார்கள் நபிகளார்.
பின்னர், "உனது சகோதரி விபச்சாரம் செய்வது உமக்கு விருப்பமா?'' என்று மீண்டும் நபிகளார் கேட்க, மீண்டும் அதிர்ச்சியுடன் தலையாட்டினார் அந்த இளைஞர்.
பின்னர், "உனது தாயின் சகோதரி? தந்தையின் சகோதரி?'' என்று நபிகளார் கேட்கக் கேட்க, அவர் அதிர்ச்சியில் உறைந்தவாறே, "இல்லை.. இல்லை..'' என்று திகிலுடன் சொல்லிக்கொண்டிருக்க...
நபிகளார்: "உன் மனம் எதை விரும்புகிறதோ அதையே நீ பிறருக்கும் விரும்பு. உன் மனம் எதை வெறுக்கிறதோ அதையே நீ பிறருக்கும் வெறுப்பாயாக!'' என்று உபதேசித்தார்கள். (அஹ்மத்)
தவறை உணர்ந்துகொண்டார் அந்த இளைஞர். தவ்பா செய்து மீண்டார்.
அந்நியப் பெண்ணிடம் ஒருவன் அத்து மீறுகிறான் என்றால் அவள் யாரோ ஒருவருடைய தாயாகவோ, யாரோ ஒருவருடைய சகோதரியாகவோ, மகளாகவோ, மனைவியாகவோதான் இருப்பார். எனில் அதுவே தன்னுடைய தாயாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ இருந்து, வேறொருவன் அவர்களிடம் அத்துமீறினால் அதை அவன் சகித்துக்கொள்வானா?
திருத்தப்படாத நிலம் களை மண்டிக் கிடக்கும். தடுக்கப்படாத வெள்ளம் தாளாத துன்பம் தரும். இரண்டு கரைகளுக்குள் அடங்கி நடக்கும் ஆறுதான் நாட்டுக்கு நன்மை பயக்கும்.
சுய கட்டுப்பாடுதான் நாகரிகத்தின் அடையாளம். புலனடக்கம் கொண்ட ஆணும் பெண்ணும் வாழும் சமூகத்தில்தான் அமைதியும் இன்பமும் நிலவும்.
ஆம். ஆணுக்கும் கற்புண்டு! ஒழுக்கமே சுதந்திரம்!
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am