
செய்திகள் சிந்தனைகள்
கவிஞர் சீனி நைனா முகம்மதின் அரிய தமிழ்ப் பணி
நினைவில் வாழும் பெருமகனார் கவிஞர் ஐயா சீனி நைனா முகம்மது கைவண்ணத்தில் உருவாகி, அன்னாரின் மறைவிற்குப் பிறகு தமிழ்க்கூறு நல்லுலகத்திற்குக் கிடைத்த அரிய நூல்கள் ‘நல்ல தமிழ் இலக்கணம்’, ‘புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்’.
தொல்காப்பிய உரைகளை ஆய்வு செய்து இலக்கண நூல் எழுதிய ஆசிரியர்களுக்கு இடையில், தொல்காப்பியச் செய்யுள்களையே நேரடியாக ஆய்வு செய்து இவ்விரு நூல்களையும் படைத்தவர் கவிஞர் அவர்கள்.
அதனால்தான், தமிழ் இலக்கணம் என்றாலே கடினம் என்றெண்ணி ஓடி ஒளிந்தோரிடையே, அதனை எளிமையாகவும் இனிமையாகவும் இவ்விருநூல்களால் கொண்டு சேர்க்க முடிகின்றது.
இன்றைய இளம் தலைமுறை மாணவர்களிடத்தில் இலக்கணத்திற்குப் பெரிய வரவேற்பு இல்லாமல் போனதற்கு மாணவர்களுக்கு இலக்கணத்தின் மேல் உண்டான பயமே முதன்மைக் காரணம்.
எடுத்த உடனேயே தொல்காப்பியத்தையும் நன்னூலையும் சூத்திரங்களையும் ஆசிரியர்கள் கொண்டு போகும் போது அவர்கள் பயம் கொள்கிறார்கள்.
அவர்களிடத்தில் அப்பயத்தைப் போக்க வேண்டிய கடப்பாடு ஆசிரியப்பெருந்தகைகளுக்கு உண்டு. அக்கடப்பாட்டைச் செவ்வனே செய்ய இவ்விரு நூல்களும் ஒவ்வொரு தமிழாசிரியருக்கும் உற்ற துணைவனாய் இருக்கும் என்பது திண்ணம்.
இவ்விரு நூல்களும் பழைய விதிகளைச் சுருக்கி தற்கால நடைமுறைக்கு ஏற்ற காட்டுகளை முன்வைத்து மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி விளக்கம் கொடுக்கின்றன. குறிப்பாக, ‘புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்’ நூல், நடப்பில் இருக்கும் ஏறத்தாழ 40 விதிகளைச் சுருக்கி, அதை பத்தே விதிகளில் முழுமையாகவும் எளிமையாகவும் விளக்கம் கொடுக்கின்றது; சொற்புணர்ச்சிக்கான காரணங்களையும் அவற்றின் முறைளையும் விளக்குகின்றது.
தமிழ் இலக்கணத்தின் ஆணிவேராகிய புணர்ச்சியை இத்துணை எளிமையாக எந்தவோர் இலக்கண நூலும் தமிழுலகத்திற்குக் கொடுத்ததில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.
இவ்விரு நூல்களும் புதிதாகத் தமிழ் கற்க தொடங்கியவர் தொட்டு ஆழ்ந்த தமிழறிவு கொண்டவர் வரை அனைவருக்கும் ஏற்றதாய் அமைந்துள்ளன.
இந்த நூல்களைக் கொண்டு மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிக்கும் போது, அதனை அவர்கள் விரும்பி கற்கின்றனர். இலக்கணப் புரிதல் ஏற்படும் போது, அவர்கள் அதன் இனிமையை உணரத் தொடங்குகின்றனர்.
இவர்கள் பின்னாளில் எந்தவொரு துறையில் கால் பதித்திருந்தாலும், தானாகவே தொல்காப்பியத்தையும் நன்னூலையும் ஆய்வு செய்து இலக்கணச் சுவையைப் பருகும் எண்ணத்தையும் ஆற்றலையும் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறான இளம் தலைமுறைப் பிள்ளைகளை ஆற்றுப்படுத்தி உருவாக்கும் வல்லமை இவ்விருநூல்களுக்கும் உண்டு.
தான் இருக்கும் வரை, தமிழ் இலக்கணத்தில் எழும் ஐயங்களை உடனுக்குடன் கைப்பேசியில் அழைத்துத் தெளிவு பெற்றுக் கொண்ட தமிழாசிரியர்களுக்கு, தன் காலத்திற்குப் பிறகும் வழிகாட்ட இவ்விரு நூல்களையும் அன்னார் நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார் என்பது எனது கருத்து. இன்று அன்னார் நம்முடன் இல்லையென்றாலும், அவர் பிறப்பின் பயனாக இத்தமிழ்க்கூறு நல்லுலகிற்கு அவர் வழங்கி சென்ற இம்மாபெரும் கொடை என்றென்னும் அவர் பெயரை ஓங்கி ஒலிக்கும்.
கட்டுரையாளர்: சிவபாலன் திருச்செல்வம்
ஆசிரியர், இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 6:20 pm
அன்னை தெரசா பல்கலைக் கழகமும் எம் ஜி ஆரும்
August 15, 2025, 8:57 am
உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை
August 8, 2025, 8:18 am
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
August 6, 2025, 11:13 pm
ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்
July 25, 2025, 9:32 am
ஹலால்- ஹராம் - வெள்ளிச் சிந்தனை
July 18, 2025, 12:18 pm
கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் காட்டும் மனித விழுமியங்கள்: டாக்டர் கிருஷ்ணன் மணியம்
June 29, 2025, 11:24 am