செய்திகள் சிந்தனைகள்
அதானிக்காக அண்டை நாடுகளை பகைக்கும் மோடி அரசு
உலக நாடுகள் அனைத்திலும் அதானியின் தொழில் முதலீடுகளை நிறுவுவதே மோடி அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது. அதானியின் முதலீடுகளால் வங்கதேச மக்கள் இந்தியாவிற்கு எதிரானது போல.., இலங்கையிலும், நேபாளிலும், பூடானிலும், மாலத் தீவிலும் கொந்தளிப்பு நிலை உருவாகி வருகிறது.
இந்திய அரசின் தேசீய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை Colombo Security Conclave என்ற மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்வதாக அங்கு சென்று அந்த நாட்டின் அரசியல் கட்சி முக்கியஸ்தர்களை- சிங்கள , தமிழ் மற்றும் இஸ்லாமிய தமிழர் தலைவர்களையும் , இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் சந்தித்துள்ளார்.
அஜித் தோவல் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனேயை சந்தித்து இரு நாடுகளின் கூட்டுறவிற்கு தனியார் துறையின் பங்கீட்டின் அவசியம் குறித்து பேசியதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு நம்மை சுதாரிக்க வைத்தது.
உண்மையை உடைத்து கூறினால், இரு நாட்டு அரசுகளோ, இரு நாட்டு மக்களோ இந்த கூட்டுறவிலும் வளர்ச்சியிலும் பங்கு பெறவில்லை. தனியார் துறையான அதானியின் பங்கீட்டால் இரு நாடுகளின் கூட்டுறவு உயர்ந்து வளர்வதாக நம்மை நம்ப வைக்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்கேவுடன் அஜித் தோவால்
தமிழர் தலைவர்கள், மலையகத் தமிழர் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகளையும் அஜீத் தோவல் சந்தித்துள்ளதன் பின்னணியில் அதானி முதலீட்டை எதிர்க்காமல் இருக்க செய்த சமரச முயற்சி எனத் தெரிய வருகிறது.
வங்க தேசம் (பங்களா தேஷ்) நேபாளம் , பூட்டான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இலங்கையிலும் அதானி நிறுவனம் பல்வேறு எரிசக்தி திட்டங்களை (multiple power projects) காற்றாலை மற்றும் எரிவாயு (LNG) உற்பத்தி திட்டங்களை இந்திய அரசு அந்த நாடுகளுக்கு தரும் அழுத்தத்தின் மூலம் நிறுவி உள்ளது.
இலங்கையிலுள்ள கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை அதானி பொறுப்பில் விட காய்கள் நகர்த்தப்படும் நிலையில், அதானி கிரின் எனர்ஜி நிறுவனம் மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ 2022ல் இலங்கை அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு, அதானி நிறுவனத்திடமிருந்து மின் சக்தியை இலங்கை கொள்வரவு செய்வதற்கு கடந்த ஜூலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இலங்கையில் அதானியின் முதலீடுகள்
இதனால், அஜித் தோவலின் சமரச முயற்சிகளை புறந்தள்ளிவிட்டு இத்தகைய ஒப்பந்தத்தை எதிர்த்து இலங்கையிலுள்ள எதிர்கட்சிகள் அனைத்தும் போர்க் கொடி தூக்கி உள்ளனர். இவ்வொப்பந்தம் இலங்கை நலன்களுக்கு இலங்கை மக்களின் நலன்களுக்கு ஊறு விளைவிக்க கூடியது என்பதே அவர்களின் குற்றச்சாட்டாகும் .
இந்தச் சூழலில் பாதுகாப்பு ஆலோசகர் அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவமானப்பட வேண்டிய அவசியம் என்ன?
அதானி நிறுவனத்தின் வளர்ச்சியும், ஆதிக்கமும் இந்திய மக்களின் வளர்ச்சி ஆகுமா? அல்லது இலங்கை வாழ் மக்களின் வளர்ச்சி ஆகுமா?
இவ் விரு நாடுகளின் நலன் என்பது அதானி நிறுவனங்களின் வளர்ச்சியில் தான் உள்ளதா?
ஆகஸ்டு மாதம் 4 -ந்தேதி வங்க தேச மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா ஓடி வந்தாரே, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா? அங்கு என்ன நடந்தது?
அங்கும் அதானி நிறுவனம் உள் நுழைந்து மின்சக்தி அளிக்கும் ஒப்பந்தம் போட்டது அல்லவா?
2010ம் ஆண்டு வங்க தேச நாட்டிற்கு மின்சக்தி வழங்க இந்திய அரசு நிறுவனமான என் டி பி சி (National Thermal Power Corporation) வங்க தேசத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து , மோடி அரசு
அதானி பவர் நிறுவனத்துடன் வங்க தேசம் ஒப்பந்தம் போட அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனாவை நிர்பந்தித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவிலுள்ள அதானி நிலக்கரி சுரங்கங்களிலிருந்து கொணரப்படும் நிலக்கரி மூலம் , ஜார்க்கண்ட் மாநிலம் கோடா வில்
உள்ள அதானிக்கு சொந்தமான கோடா அனல்மின் நிலையத்தில் (Godda Thermal Power Station) மின் உற்பத்தி செய்து அதை வங்க தேசத்திற்கு ‘அதீத’ விலைக்கு விற்க திட்டம் தீட்டப்பட்டு அதில் வெற்றியும் கண்டார் அதானி. இதற்கு உற்ற துணையாக இருந்தது மோடி அரசு என்பதை மறுப்பதற்கில்லை.
பங்காளதேஷில் அதானியின் முதலீடு
இதனால் வங்க தேசத்தின் நிதி நிலை மோசமாகி, தொழில்கள் நசுங்கி , வேலையின்மையும் அடக்குமுறையும் தலை விரித்தாடியதை மறுக்க முடியுமா? இன்று வங்க மக்களின் வெறுப்பை இந்திய நாடே சம்பாதித்து இருப்பது விரும்பக் கூடிய நிகழ்வா?
பூட்டானிலும் இதே நிலைமைதான்!
மாலத் தீவுகளிலும் அதானியை நுழைத்தது மோடி அரசு, இதற்காக உள்நாட்டு அரசியலில் தலையிட்டு மோடி அரசு “ கட்ட பஞ்சாயத்து” செய்ததன் விளைவாக இன்று மாலத்தீவுகளில் இருந்து இந்திய ராணுவ அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட வெட்ககரமான நிகழ்வு நடந்துள்ளது.
நேபாள நாட்டிலும் , திரிபுவன் ஏர்போர்ட் அதானிக்கு போதாது என்று அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கும்,நேபாள அரசிற்கும் நிர்ப்பந்தம் கொடுத்து, பைரஹாவா விமான நிலையத்தையும், பொகாரா விமான நிலையத்தையும் அதானி வசம் ஒப்படைக்க இந்திய அரசு முயல்வதை நேபாளிய பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றனவே , இந்த போக்கு எதைக் காட்டுகிறது?
நேபாளத்தின் திரிபுவனத்தில் அதானியின் சர்வதேச விமான நிலையம்
இந்திய மக்களின் நலனையோ, அல்லது அண்டை நாட்டு மக்களின் நலன்களையோ கணக்கில் கொள்ளாமல், தனியார் நிறுவனமான அதானி குழுமத்தின் நலன்களை மட்டுமே கணக்கில் கொண்டு நாட்டின் அயலுறவுக் கொள்கைகள் தீர்மானிக்கப்படுவதை மோடி விரும்புகிறார் என்பதற்கு மேற் கூறிய நிகழ்வுகள் சாட்சி!
இந்தியாவின் நலனும் இந்திய முதலாளிகளின் நலனும் ஒன்றா? மோடியின் நெருங்கிய நண்பர்களான குஜராத்தை சார்ந்த அதானி மற்றும் அம்பானிகளுக்காக மோடி அரசு எவ்வாறுசட்டங்களை மாற்றுகிறது, விதிகளை திருத்துகிறது, ஒழுங்குமுறை ஆணையங்களை பல் பிடுங்கப்பட்ட பாம்புகளாக மாற்றி இருக்கிறது என்பதை செபி , சி.பி .ஐ., டி ஆர் ஐ (Director of Revenue Intelligence) நீதி மன்றங்கள், ஆகியவை அதானி மற்றும் அம்பானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எவ்வாறு விசாரித்து எவ்வாறு தீர்ப்பளித்தன என்பதில் இருந்து விளங்கும் .
ஹிண்டன்பரக் எழுப்பிய குற்றச் சாட்டுகளுக்கு இந்திய அரசும், செபி அமைப்பும் ஆற்றிய எதிர்வினை, செபி தலைவரே (மாதவி புச்) அதானி குழுமத்தில் முதலீடு செய்த விவகாரம்,
அதானிக்கு விதிகளை தளர்த்தி விமான நிலையங்களை துறைமுகங்களை , சுரங்கங்கள “தாரை” வார்த்த விவகாரம் ஆகியவற்றால் மோடி அரசின் “சார்பு நிலை” விளங்கும்.
ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் உழன்று வந்த அனில் அம்பானியை காப்பாற்ற மோடி அரசு ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை (Dassault Reliance Aerospace Ltd ) இழுத்து வலிய நுழைத்ததும் , 30,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை அம்பானிக்கு மோடி அளித்ததும் கேவலமான அணுகுமுறைகளாகும்.
அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவன போர்டை மத்திய ரிசர்வ் வங்கி 2021ல் கையகப்படுத்திய பின்பும் அனில் அம்பானியை வங்கிகள் நெருங்க விடாமல் பாதுகாத்த மோடி அரசு, 53 வங்கிகளில் மொத்தம் 43,000 கோடிகள் கடனாக சுருட்டிய அனில் அம்பானியிடமிருந்து வெறும் 455 கோடிகள் மட்டும் NCLT மூலம் பெற்றுக் கொண்டு, (0.92 %) தப்பியோட விட்ட மோடி அரசு, திருடனுக்கு சேவை செய்வதையே பாக்கியமாக கருதுகிறது.
23/08/2024ல் செபி நிறுவனம் அனில் அம்பானி மற்றும் 25 நபர்களை பங்குச் சந்தையில் நுழையத் தடை விதித்துள்ளது “குதிரை ஓடிய பின்பு லாயத்தை பூட்டும்” மோடி அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதை உணர்த்துகிறது எனலாம். யாருக்காக அஜித்தோவாலை அண்டை நாடுகளுக்கு விஜயம் செய்விக்கிறார் மோடி. அதானிக்காக உழைப்பதற்கே அவதாரம் எடுத்துள்ளரா மோடி!
அதானியின் காலடி , வங்க தேசம், நேபாளம், மாலத்தீவு மற்றும் இலங்கையில் பதிந்து வளருவது ஏதோ இந்திய நாட்டின் நலன்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. மாறாக அண்டை நாடுகள் இடையிலான நட்பில் கசப்பையே உருவாக்கும்.
உண்மையில் மோடி குஜராத்தி பகாசுர முதலாளிகளை முன்னிறுத்தி கொள்கைகளை வகுக்குத்து இந்திய அரசினை நடத்துகிறார் .
இதை மறைக்க 5 டிரில்லியன் எகனாமி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் விஸ்வகுரு, என்று ஏதேதோ உளறுகிறார் .
ருஷய உக்ரைன் போரை நிறுத்தப் போகும் “விஸ்வாமித்திரன்” என்று இப்போது உலக வலம் போகிறார் மோடி!
மின்னுவதெல்லாம் பொன்னல்ல! உலகிற்கு புரிந்தது, உள் நாட்டிலும் புரிந்து கொள்ளப்படும்!
கட்டுரையாளர்: ச. அருணாசலம்
ஆதாரம்: அறம் ஆன்லைன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am
கவிஞர் சீனி நைனா முகம்மதின் அரிய தமிழ்ப் பணி
August 30, 2024, 7:56 am
ஹலோ! "நீங்கள் சாப்பிட்டீர்களா?" - வெள்ளிச் சிந்தனை
August 23, 2024, 8:11 am
மறுமை இல்லையா? - வெள்ளிச் சிந்தனை
August 19, 2024, 1:46 pm
பாஜக பாதையில் திசை மாறிய திமுக அரசு: ஹிந்துத்துவா அரசியலில் நீயா நானா போட்டி
August 6, 2024, 8:16 am
ஒலிம்பிக்கில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது: அவர் பெண்ணா? திருநங்கையா?
August 5, 2024, 5:46 pm