நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலையாள சினிமாவை சுழன்றடிக்கும் பாலியல் புகார்கள்: மௌனம் காக்கும் கோலிவுட் தமிழ் நட்சத்திரங்கள்

மலையாளத் திரைப்படங்கள் சில அண்மையில் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டன. சாமான்ய ரசிகர்கள் மட்டுமின்றி, கமல்ஹாசன் உட்பட திரைநட்சத்திரங்களே பாராட்டியதோடு, படக்குழுவினரை சந்தித்து உரையாடி ஊக்கமளித்தனர். 

இதுபோல கொண்டாட்டமான, பாராட்டத்தக்க தருணங்களை மதிப்பிடும்போது, அதே மலையாள திரையுலகில் நடந்துள்ள பாலியல் சுரண்டலை, அதிகாரத்தை வைத்துக்கொண்டு பெண்களை, நடிகைகளை பலவந்தப்படுத்திய புகார்களுக்கு ஏன் தமிழ்த்திரையுலகம் இத்தனை மௌனம் காக்கிறதோ தெரியவில்லை.

முன்னணி நட்சத்திரங்கள் யாரும் சமூக ஊடகங்களில் கூட பதிவிடாத நிலையில், அவர்களை நேரில் அணுக முற்பட்டபோது அவர்களின் தனி உதவியாளர்களிடம் கூட பேசமுடியவில்லை என்று புதிய தலைமுறை ஊடகம் கூறியுள்ளது. 

அரசியல், சமூக விவகாரங்களில் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் எந்த கருத்து தெரிவித்தாலும் முக்கியத்துவம் பெறும்.

கடந்த வாரம் நூல் வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்கள் குறித்து ரஜினி பேசியது முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில், அவரது கருத்தை அறிய முற்பட்ட போது ரஜினி ஊரில் இல்லை தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க வாய்ப்பில்லை என செய்தி தொடர்பாளர் கூறினார்.

உலகநாயகன் கமல்ஹாசன் படப்பிடிப்பில் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் கட்சித் தொடங்கிய நடிகர் விஜய், இதுபற்றி எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. நடிகர் அஜித்தை பொறுத்தவரை அவர் பொதுவெளியில் தோன்றவும், கருத்துகூறவும் செய்ததில்லை. அவராகவோ, அவர் சார்பிலோ வெளியிடப்படும் செய்திகள்தான் எப்போதும்போல இப்போதும் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யாவின் கருத்தை அறிய முற்பட்டபோது அவர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள்சார்ந்த திரையுலகில் ஒரு பிரச்னை எனும்போது கலைஞர்கள் ஏன் குரல் தருவதில்லை? பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பாதது ஏன்? பெண்களுக்கு அளிக்கும் ஆதரவால் மட்டுமே அவர்கள் துணிந்து தங்கள் பிரச்னைகளை வெளியே சொல்லும் நம்பிக்கையைத் தரும். 

இந்த நம்பிக்கை இல்லாததால்தான் பெண்கள், தாங்கள் பிரபலமாக இருந்தாலும் தனிப்பட்டு சந்திக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளியே சொல்லும் துணிச்சலின்றி இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset