நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஹலோ! "நீங்கள் சாப்பிட்டீர்களா?" - வெள்ளிச் சிந்தனை

தென் கொரியாவில், ஒருவர் மற்ற நபரை சந்தித்தால், "எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்பதற்குப் பதிலாக, "நீங்கள் சாப்பிட்டீர்களா?" என்றுதான் கேட்பார்களாம். 

காரணம், பசி என்பது மனித மனநிலையுடன் தொடர்புடையது என்று அவர்கள் நம்புகின்றனர். (காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு) என ஏதாவது ஒன்றை தவறவிடுவதை உளவியலைப் பாதிக்கும் ஓர் அபாய எச்சரிக்கை என்றே அவர்கள் நம்புகின்றனர். 

"சாப்பிடவில்லை" என்று நீங்கள் பதிலளித்தால், நீங்கள் மோசமான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று உங்களை உங்கள் பாட்டிற்கு  அவர்கள் விட்டுவிடுவார்கள். அல்லது முடியுமானால் உங்களுக்கு உணவைக் கொண்டு வந்து தருவார்கள். 

இந்த வழக்கம் வருவதற்கான வரலாற்றுக் காரணம் என்னவெனில், 1950 களின் முற்பகுதியில், கொரியப் போருக்குப் பிறகு பெரும் பட்டினியும் பஞ்சமும் அங்கு ஏற்பட்டது.

அவர்கள் யாரைச் சந்தித்தாலும் "நீங்கள் சாப்பிட்டீர்களா?" என்று கேட்பது வழக்கமாகியது. அவர் ஆம் என்று பதிலளித்தால், அவர் நலமாக இருப்பதாக தெரிந்துகொள்வார்கள் என்ற இம்ரான் பாரூக் அவர்களின் பதிவை  முன்வைத்து

நம்மைச் சுற்றியும்  "நீங்கள் சாப்பிட்டீர்களா? என்று கேட்டுக்கொள்வதுதானே மிகவும் பொருத்தமாக இருக்கும்?

ஆனால், பாருங்கள் விருந்தோம்பல் பண்பாடு நபிமார்களின் வழிமுறை 
முஸ்லிம்களிடம் மறைந்து வருகிறது.

வீட்டிற்கு வருபவர்களிடம் உணவு உண்ணுங்கள் என்று கேட்பதே இல்லை.

எப்போது வந்தாலும் அன்புடன் உபசரித்து உணவளிக்கும் மனசு அருகி வருகிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்த அந்த நாகரிகம் எங்கே போனது? 

எளியவர்களுக்கு ஒரு முகம் . வலியவர்களுக்கு ஒரு முகம்  காட்டுகிறோம்.

வீட்டிற்கு யார் வந்தாலும் உபசரிக்கும் மனம் பெற்றவர்கள் இறைவனின் 
அருளுக்கு உரியவர்கள்.

உங்களிடம் யாராவது கேட்டு வந்தால் கொடுக்கும் நிலையில் இருந்தால் 
கொடுத்து விடுங்கள். ஏனெனில் உங்கள் பாவங்களை போக்க இறைவன் 
வழங்கிய வாய்ப்பை மறந்தும் தட்டிவிட்டு கைசேதப்பட வேண்டாம்.

அண்ணலார் அவர்கள் இறைச்சி சமைத்தால் அந்த குழம்பில் சற்று நீர்விட்டு குழம்பை அதிகமாக்கி அண்டை வீட்டுக்கு வழங்கினார்கள் என்று இமாம்கள் கூற கேட்டுள்ளோம். ஆனால் பிறரின்  தேவை கருதி  அவர்கள் அதனை வழங்கவில்லை. 

விருந்தும் உணவளிப்பதும் பிற மனிதர்களின் தேவை கருதி 
கொடுப்பது அல்ல. மாறாக அது கருணையுடன் நல்ல உள்ளத்துடன் அன்பின் நேசத்துடன் தொடர்புடையது.

நெருங்கிய உறவினர்கள்,  அண்டை வீட்டு மனிதர்களிடம் இருந்து இதனை துவங்குவோம். அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் முஸ்லிம் அல்ல என்பது நபிமொழி.

எனவே வீட்டிற்கு வருபவருக்கு தேநீருடன் மனிதர்களை அனுப்பாமல் 
தேனீக்கள் போல நெருங்கி வாழ சற்று நீங்கள் சமைத்த உணவை கொடுத்துப் பாருங்கள். உறவு தேனாய் இனிக்கும். 

பசித்தவர்களுக்கு உணவளிப்போம் இஸ்லாமிய வாழ்வியலைப் பேணுவோம்.

- அபூ ஷேக் முஹம்மத்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset