செய்திகள் சிந்தனைகள்
பாஜக பாதையில் திசை மாறிய திமுக அரசு: ஹிந்துத்துவா அரசியலில் நீயா நானா போட்டி
பாஜகவிற்கு போட்டியாக திராவிட மாடல் ஆட்சி முத்தமிழ் முருகன் மாநாட்டை அரசாங்க செலவில் பிரம்மாண்டமாக நடத்துகிறது. ”இந்துத்துவ அரசியலா பேசுகிறாய்..? நீ மட்டும் தான் வேல் யாத்திரை நடத்துவாயோ..? இதோ நான் உன்னையே மிஞ்சுகிறேன் பார்..” என மு.க.ஸ்டாலின் முருகனின் வேலை தூக்கி உள்ளதன் பின்னணி என்ன?
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இதை நடத்துகிறாராம் முதல்வர் ஸ்டாலின்.
திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல், தமிழக அரசின் இந்து அற நிலையத் துறை வாயிலாக ஒரு இந்துத்துவ அரசியலை பாஜகவிற்கு போட்டியாக கட்டமைத்து வருகிறது என்பதை நமது அறம் இதழில் தொடர்ந்து எழுதி வருகிறோம். அந்த வகையில் இது வரை எந்த ஒரு தமிழக ஆட்சியாளரும் செய்திராத வகையில் கடந்த மூன்றே ஆண்டுகளில் சுமார் 1,800 கோவில்களுக்கு குடமுழுக்குகளை கோலாகத்துடன் நடத்தி உள்ளது திமுக அரசு.
இதில் நாம் குற்றம் காணவில்லை. ஆனால், கோவில் குட முழுக்குகள் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் சரி பாதி முக்கியத்துவம் தந்து நடத்தப்பட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்திரவை முற்றிலுமாக மீறி, முற்ற முழுக்க சமஸ்கிருத வேத மந்திரங்கள் மட்டுமே ஒலிக்கவும், பார்ப்பன அர்ச்சகர்களால் யாக, வேள்விகள் கொண்டுமே நடத்தி வருகிறது திமுக அரசு. பழனி முருகன் கோவிலும் இதற்கு விதிவிலக்கல்ல.
இப்படி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே வழிபாட்டுத் தலங்களில் அதி முக்கியத்துவம், பண்டிகை காலங்களிலும், திருவிழாக்களிலும் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு விதவிதமான சலுகைகள், பரிசு பொருட்கள், மரியாதைகள் எனத் தன் சனாதன விஸ்வாசத்தை சதா சர்வ காலமும் வெளிப்படுத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, தற்போது பாஜகவிற்கு போட்டியான ஓட்டு வேட்டைக்கு பக்தி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து முருகன் மாநாடு நடத்துகிறது.
மறுபக்கம் தன் மனைவி துர்கா கோவில்,கோவிலாக சென்று யாக வேள்விகள் நடத்துவதும், சமஸ்கிருத ஸ்லோகங்களை பூஜை அறையில் சொல்வதாக பேட்டிகள் தருவதும் கூட இந்துத்துவ ஓட்டு வேட்டைக்கு உதவுவதாகவே ஸ்டாலின் நினைக்கிறார்.
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரவுள்ள ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் நடத்துவது தொடர்பாக கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக தமிழக அரசு நிர்வாகம் முழு மூச்சுடன் இறங்கி வேலை செய்து கொண்டுள்ளது. இதற்காக கடந்த பிப். 27-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து. அதற்காக 20 பேரை உள்ளடக்கிய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
குழுவின் தலைவராக அமைச்சர் சேகர் பாபு,, உறுப்பினர்களாக அறநிலையத் துறை அதிகாரிகளுடன் திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம், மயிலம் பொம்மர ஆதீனம் , சிவஞான பாலய சுவாமிகள், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் மு.வெ.சத்தியவேல் முருகனார், சுகி.சிவம், தேச.மங்கையர்க்கரசி, ந.ராமசுப்பிரமணியன்.. உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ் பெற்ற முருகன் திருக் கோயில்களின் கண்காட்சி அரங்குகள் எல்லாம் சினிமா ஆர்ட் டைரக்டர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.
வேல் கோட்டம் என்பதாக மாநாடு அமைக்கப்படுவதோடு, சமய பெரியோர்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இம்மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும், செலவுகளையும் கூட தமிழக அரசே செய்கிறது. பல லட்சம் பக்தர்கள் இந்த மாநாட்டிற்கு வரக் கூடும் என திமுக அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
வட நாட்டில் புகழ் பெற்ற ராமன் பெயரை தன் அரசியலுக்கு பயன்படுத்தி வரும் பாஜகவிற்கும் தமிழ்நாட்டில் தமிழ்க் கடவுள் என அறியப்பட்ட முருகன் செல்வாக்கை தன் அரசியலுக்கு பயன்படுத்தும் திமுகவிற்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால், அவர்களிடம் உள்ள இஸ்லாமிய துவேஷம் திமுகவிடம் இல்லை என்பது மட்டுமே.
தமிழ் நாட்டில் முருக கடவுளுக்கு என்று பெரும் பக்தர் கூட்டம் உள்ளது. அந்த பக்தர் கூட்டத்தை தன் பக்கம் ஈர்க்க பாஜக செய்த வேல் யாத்திரை முயற்சிகள் பெரிய பலனைத் தரவில்லை. காரணம், ‘ஊரை அடித்து உலையில் போடும் அரசியல்வாதிகள் யாரும் உண்மையான ஆன்மீகவாதியாக இருக்க முடியாது’ என்ற புரிதல் இயல்பாகவே தமிழ் மக்களுக்கு உண்டு. பாஜகவின் பி டீம் என திமுகவினரால் குற்றம் சாட்டப்படும் சீமான் ஏற்கனவே முருகன் புகழ் பாடி வருகிறார். ”எங்க முப்பாட்டன், எங்கள் மூதாதை..” எனக் கொண்டாடி வருகிறார்.
சீமான் முருக பக்தன் என்பதற்காக அவருக்கு தமிழ் மக்களின் எட்டு சதவிகித ஓட்டுகள் கிடைக்கவில்லை. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை, பெருமைகளை, உணர்வுகளை அவர் பிரதிபலிக்கிறார் என்பதும், இன்றைய திமுக ஆட்சியின் ஊழல் முறைகேடுகளை துணிச்சலாக அவர் பேசுகிறார் என்பதும் அவருக்கு ஒரு மவுசை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதேயன்றி, முருக பக்தியல்ல.
நாம் சொல்ல விரும்புவதெல்லாம் இது தான். முருகன் பெருமைகளைச் சொல்லி புகழ்பாட ஏகப்பட்ட ஆதீனங்கள், அமைப்புகள், ஆன்மீகவாதிகள், சொற்பொழிவாளர்கள் உள்ளனர். பாஜகவிற்கு போட்டி அரசியல் செய்வதற்காக திமுக அரசு மக்கள் வரிப்பணத்தை அள்ளி இறைக்க வேண்டுமா…? என்பதே. திமுகவின் இந்த பக்தியாளர்களை ஈர்க்கும் முன்னெடுப்பை அந்தக் கட்சியின் முன்னோடிகள் பலருமே கூட விருமபவில்லை.
அரசாங்கம் அக்கறை செலுத்தி தீர்வு காண வேண்டியவைகள் ஆயிரம் இருக்கிறது. ஆனால், இந்த அரசோ, முருகன் குறித்த ஆய்வு கட்டுரைகளை கேட்கிறது. அப்படி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை வாசித்து சிறந்ததை தேர்ந்தெடுக்க ஒரு நிபுணர் குழுவாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகளாம். இவை தவிர முருகத் தொண்டில் ஈடுபடும் சிலருக்கு விருதுகள் வேறு வழங்கப்படுகிறதாம்.
இப்படித்தான் பக்கத்தில் உள்ள தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் பாஜகவிற்கு போட்டியாக பக்தி பரவச அரசியல் நடத்தினார். கோவில்களுக்கும், திருவிழாக்களுக்கும் பணத்தை அள்ளி இறைத்தார். உண்மையான சங்கிகளே, ”ஐயோ, இவர் நம்மையும் விஞ்சிவிட்டாரே..”என மிரண்டனர். ஆனால், தேர்தலில் மக்கள் சந்திரசேகர ராவிற்கு படுதோல்வி தந்ததனர்.
இதன் படிப்பினை என்னவென்றால், நாங்கள் ஒரு அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது நேர்மையான நிர்வாகத்தை தான். அரசு அலுவலங்களுக்கு சென்றால், லஞ்சம் கொடுக்காமல் நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான். அது இல்லாமல் போனதாலும், சந்திரசேகர ராவின் குடும்ப அரசியல் காரணமாகவும் மக்கள் அவரை புறக்கணித்துவிட்டனர். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியும் பாஜகவின் பாணியையே பின்பற்றி பார்த்து பெரும் தோல்வி அடைந்திருக்கிறார்.
டெல்லியின் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஒரு தீவிரமான அனுமார் பக்தர். அவர் அனுமார் பக்திக்காக இது வரை அரசு பணத்தை செலவழித்ததில்லை. அவர் செலவழித்தெல்லாம் நல்ல தரமான கல்வி தரும் பள்ளிக் கூடங்கள், தரமான சிகிச்சை தரும் அரசு மருத்துவமனைகள் ஆகிய இரண்டிற்கும் தான். குடி நீர் வரிகள், மின்சாரம் இரண்டையும் முறைப்படுத்தினார். அரசு அலுவலங்களில் ஊழல் முறைகேடுகள் இன்றி மக்கள் பிரச்சினைகள் நிறைவேற வழி வகுத்தார்.
இதனால் தான் பாஜகவின் பணபலம், அதிகார பலம் ஆகியவற்றை மீறி அவரை மக்கள் மீண்டும், மீண்டும் முதலமைச்சர் ஆக்குகிறார்கள்.
தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் பலவற்றுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை. சுமார் 80,000 ஆசிரியர்கள் பற்றாக்குறையுடன் அரசு பள்ளிகள் இயங்குகின்றன. அதே போல அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்து, மாத்திரைகள் இல்லை. போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. மூன்று மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு மருத்துவரே இருந்து சமாளிக்கிறார்.
ஐந்து செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே செவிலியர் வேலை பார்த்து சமாளிக்கிறார். இப்படி ஒவ்வொரு துறையிலும் ஆயிரம் அடிப்படை தேவைகளை அலட்சியப்படுத்திவிட்டு வெறுமனே முருகன் புகழ் பாடுவதால் பாஜக வளர்ச்சியை தடுத்து மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏறிவிடலாம் என திமுக அரசு நினைக்கிறது. அந்தோ பரிதாபம்.
இப்படி மக்களை பக்தி மயக்கத்தில் ஆழ்த்துவதன் மூலம் ஆட்சியின் ஊழல் முறைகேடுகள், இயற்கை வளச் சுரண்டல்கள், உத்தமர்கள் போல காட்டும் பாசாங்குதனம் ஆகியவற்றை அறிந்து கொள்ளாமல் திசை திருப்பி, தங்கள் ஊழல் ஆட்சியை தொடரலாம் என நினைப்பது சாணக்கியர் காலத்தில் இருந்தே ஆட்சியாளர்கள் செய்யும் சூழ்ச்சி தானே.
- சாவித்திரி கண்ணன்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am