நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஒலிம்பிக்கில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது: அவர் பெண்ணா? திருநங்கையா?

(ஒரு திருநம்பி (TRANSGENDER)  பெண்களுக்கு நடக்குற ஒலிம்பிக் மேட்ச்ல ஒரு பெண்ண அடிச்சு  ஜெயிச்சுட்டாங்கனு வதந்தி பரப்பிட்ருக்காங்க 

பிரச்சனை இது தாங்க...

அல்ஜீரியாவைச் சேர்ந்த கெலிஃபுக்கும்
இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்செலா கேரினிக்கும் 66 கிலோ எடைப் பிரிவுல 
பாக்சிங் போட்டி நடக்குது

அதில் 46 நொடிகள்ல கெலிஃப் கேரினியை வீழ்த்திடறாங்க

போட்டிக்கு இறுதியில் இருவரும் கைகொடுத்துக் கொள்ள வேண்டும் இது தான் நடைமுறை.  

ஆனால் இத்தாலி வீராங்கனை கை கொடுக்கல

காரணம் அவுங்க நினைக்கிறது 
கெலிஃப் ஒரு பெண்ணே கிடையாது அவுங்க ஒரு ஆண் அல்லது திருநம்பி (TRANSGENDER).

அவுங்கள பெண்கள் கூட விளையாட அனுமதிக்கறதே தப்பு என்கிற ரீதியில் இந்த எதிர்ப்ப காட்டியிருக்காங்க... 

இந்த விசயத்தில் உண்மை என்ன? 
என்பதை சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லாஹ் விளக்குகிறார். - ஆசிரியர்)


அல்ஜீரிய வீராங்கனை கெலிஃப் 
உடலாலும் பாலின வெளிப்பாட்டாலும் ஒரு பெண் என்பதை முதலில் பதிவு செய்கிறேன்

ஒரு குழந்தை பிறக்கும் போது 
அதன் பிறப்புறுப்பை வைத்து அதற்கு பாலினம் வகுக்கப்படும் இதை GENDER ASSIGNED AT BIRTH பிறப்பால் வழங்கப்படும் பாலினம் என்று கூறுகிறோம் 

இந்த வகையில் கெலிஃப் பிறப்பால் பெண் பாலினம் என்று வழங்கப்பட்டவர். காரணம் அவருக்கு 
பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான வெஜைனா இருந்திருக்கிறது. 

அடுத்து தன்னை ஆண் என்று எங்கும் அவர் கூறிக்கொண்டதில்லை. இதை பாலின அடையாளப்படுத்துதல் ( GENDER IDENTITY) என்று கூறுகிறோம். அதாவது பெண்ணாகப் பிறந்த அவர் தன்னை பெண்ணாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இதை சிஸ் ஜென்டர்(cis-gender)  என்று கூறுகிறோம். அவர் ஒரு பெண் எனும் போது ஏன் தேவையற்ற சர்ச்சை எழ வேண்டும்?

இதற்குக் காரணம் அவரது ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான டெஸ்டோஸ்டிரோன் தான். 

2023ஆம் ஆண்டு உலக பாக்சிங் சாம்பியன்ஷிப்  போட்டியில் இவரது மிதமிஞ்சிய டெஸ்டோஸ்டிரோன் அளவுகளால் விளையாட தடை பெற்றார்

ஆயினும் தற்போது ஒலிம்பிக்கிற்கு முன்பு நடந்த பரிசோதனைகளில் ஒலிம்பிக் கமிட்டி அனுமதித்த அளவுகளை விட குறைவாக டெஸ்டோஸ்டிரோன் இருந்ததால் விளையாட அனுமதிக்கப் பட்டிருக்கிறார். 

இவ்வாறு பெண்களுக்கு ஆண்மைக்கான ஹார்மோனான "டெஸ்டோஸ்டிரோன்" அதிகமாக இருப்பதை "ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம்" HYPER ANDROGENISM என்கிறோம்

இத்தகைய நிலை பெண்களுக்கு பிசிஓடி போன்ற ஹார்மோன் குளறுபடிகளால் ஏற்படுகிறது.

 அல்லது அரிதினும் அரிதான மரபணுக் கோளாறுகளால் ஏற்படலாம். 

இந்த அல்ஜீரியா வீராங்கனைக்கும் அரிதினும் அரிதான ஸ்வேயர்ஸ் சிண்ட்ரோம் எனும் மரபணுக் கோளாறு இருக்கலாம் இதன் விளைவாக இரண்டு எக்ஸ் க்ரோமோசோம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு எக்ஸ் ஒரு ஒய் குரோமோசோம்கள் இருக்கின்றன. 

எனினும் இவரை ஆண் என்று கூற இயலாது. 

காரணம் இவர் பிறக்கும் போது வகுக்கப்பட்ட பாலினம் பெண் 
வளரும் போதும் தற்போதும் தன்னை பெண்ணாகவே வெளிப்படுத்திக் கொள்கிறார். 

எனினும் இத்தகைய அரிதினும் அரிதான மரபணுக்கோளாறில் பெண்மைக்கான ஹார்மோனை சுரக்கும் கருப்பை( ஓவரி) சரியாக உருவாகி இருக்காது. 

எனவே பூப்பெய்துவதோ மாதவிடாய் ஏற்படுவதோ இருக்காது. 

அது தான் பூப்பெய்துதலோ ? மாதவிடாய் ஏற்படவில்லையே... அப்பறம் எப்படி இவர் பெண்ணானார்? என்று கேள்வி வருகிறது தானே... 

இப்போது இதே மாதிரி பிரச்சனை ஆண்களுக்கும் ஏற்படும். 
இதை ஆண்மைக்குறைவான நிலை (HYPOANDROGENISM) என்கிறோம்

இந்த நிலையில் ஆண் குறி இருக்கும். 
இதனால் ஆண் என்று பிறக்கும் போது வகுக்கப்படுவார்.

ஆனாலும் விதைப்பைகள் வளராது. 
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் போதுமான அளவு இருக்காது

ஆனாலும் அவர்கள் ஆண்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள்
அவர்களும் தங்களை ஆண்கள் என்றே வெளிக்காட்டுவார்கள்.

இவர்களை பெண்கள் என்றோ 
திருநங்கைகள் என்று கூறுவது மருத்துவ ரீதியாகத் தவறு. 

அதே போன்றுதான் பிறப்பால் பெண்ணை, அவருக்கு இருக்கும் ஹார்மோன் பிரச்சனைக்காக ஆண் என்றோ திருநம்பி என்றோ கூறுவதோ தவறு. 

ஒலிம்பிக் கமிட்டியின் தற்கால விதிப்படி 
டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் பரிசோதிக்கப்படுகின்றன. 

குறிப்பிட்ட அளவுக்கு மேலே டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் கூடினால் தடை விதிக்கப்படுகிறது. 

அதுவே அனுமதிக்கப்பட்ட அளவிற்கு குறைவாக டெஸ்டோஸ்டிரோன் இருப்பின் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள்

இந்த விதிகளைக் கொண்டு 
கூர்நோக்கும் போது அரிதினும் அரிதான மரபணுக்குறைபாடுகளை காரணம் காட்டி ஒருவரை பெண் அல்ல ஆண் என்று கூறுவது மருத்துவ ரீதியாக தவறு. 

சரிக்கு சமமான உடல் எடை( 66 கிலோ) கொண்ட இரு வீராங்கனைகள் மோதிக் கொண்ட போட்டியில் அல்ஜீரிய வீராங்கனை வென்றுள்ளார். 

இது குறித்து அவதூறு பரப்புவதும் தவறு என்று கூறி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன் 

- Dr.அ. பஃபரூக்அப்துல்லாஹ், பொது நல மருத்துவர், சிவகங்கை

தொடர்புடைய செய்திகள்

+ - reset