நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

மோடியை மிஞ்சுவதற்காக மதம் பிடித்தாடும் யோகி

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் கூட  ஆட்சியாளர்கள் இயல்பு நிலைக்கு வராமல் சதா சர்வ காலமும் சிறுபான்மையினரை எப்படியெப்படி எல்லாம் ஒடுக்கலாம் என ரூம் போட்டு சிந்தித்து சட்டங்கள் போட்ட வண்ணம் உள்ளனர். உ.பியின் முதல்வர் யோகியோ இதில் உச்சம்;

உத்திரபிரதேசத்தில் சிறுபான்மையினர் என்றாலே சீற்றப் பார்வையுடன் கூடிய அரசு நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தி வரும் யோகி ஆதித்திய நாத் அவர்களுக்கு இன்னும் சிறுபான்மையினர் குறித்த வெறுப்பும், அச்சமும் அகன்றபாடில்லை.

சமீபத்தில் கான்வார் யாத்திரை செல்லும் வழியில் அமைந்துள்ள கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் பெயரை கடைக்கு வெளியே எழுதி தொங்கவிட வேண்டும்.. என்ற ஒரு ஆணையை பிறப்பித்தார் முதலமைச்சர் யோகி. இதன் விளைவு என்னவாகும்…என அவருக்கு நன்கு தெரியும். அந்த கடை உரிமையாளர்கள் பெயர் இஸ்லாமியப் பெயராகவோ, கிறிஸ்துவப் பெயராகவோ இருக்கும்பட்சத்தில் அதன் விளைவு விபரீதமாகப் போகும். சென்ற முறை ஒரு சைவ உணவகத்தில் உணவு உட்கொண்ட கான்வார் யாத்திரீகர்கள் அங்கு ஒரு முஸ்லீம் சமையல்காரர் வேலை பார்ப்பதை கேள்விக்கு உட்படுத்தி, தங்கள் விரதமே பாழ்பட்டுவிட்டதாக ரகளை செய்து கடையை சூறையாடிவிட்டனர்.

சாப்பிட்டது சைவ உணவு தான். ஆனால், அதை சமைத்த குழுவில் இஸ்லாமியர் ஒருவர் இருந்ததால், அந்த உணவே தீட்டாகிவிட்டது என ஆத்திரத்தில் ஆடித் தீர்த்து விட்டனர். அப்படி ஆடியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அந்த உணவகத்திற்கே சீல் வைத்துவிட்டது யோகி அரசு. இதனால் தான் உச்ச நீதிமன்றம் விரைந்து இதில் தலையிட்டு இந்த கான்வார் யாத்திரை வழியில் பெயர் பலகை உத்தரவிற்கு தடை போட்டது.

சிறுபான்மையினர்களிடம் இவ்வளவு கெடுபிடியாக நடக்கும் போது உத்திரபிரதேசத்தில் மதமாற்றம் குறித்து யாருக்கும் சிந்திக்கும் துணிவு கூட வராது. ஆயினும், ஏதோ லட்ச லட்சமாக மக்கள் தற்போது இந்து மதங்களில் இருந்து மாற்று மதங்களுக்கு மாறுவதைப் போலவும், அதை தடுக்க அதி தீவிர சட்டம் அவசியம் என்பதாகவும் ஒரு மதமாற்றத் தடை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உபி மதமாற்றத் தடை மசோதாவானது ஒரு இஸ்லாமியரோ, கிறிஸ்துவரோ ஒரு இந்துவுடன் பழகுவதையே சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறது.

அந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவருக்கே 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூ. 50,000 அபராதம் என்கிறது.

மதம் மாறும் ஒருவர் மைனராகவோ, பெண், எஸ்.சி அல்லது எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவராகவோ இருந்தால்,  அவ்வாறு அவர் மதம் மாறக் காரணமானவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூ. 1,00,000 அபராதம் என்கிறது.

இந்த மசோதா இரண்டு புதிய வகை குற்றங்களையும் சேர்க்கிறது. முதலில், குற்றம் சாட்டப்பட்டவர்  தான் நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றிருந்தால், அவர்களுக்கு 7-14 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூ. 10,00,000 அபராதம் என்கிறது.


இரண்டாவதாக, மதம் மாறியவர் தன்னை அச்சப்படுத்தினர் அல்லது திருமணத்திற்கு உறுதியளித்தார் எனக் கூறினால், அதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கப்படலாம் என்கிறது. இதன் மூலம் மாற்று மதத்தவர்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதை குற்றமாக்கி, திருமண உறவை உறுதிபடுத்துவதை மாபெரும் கிரிமினல் செயலாக அடையாளப்படுத்துகிறது.

இந்த புதிய மதமாற்றத் தடை சட்டத்தில் உள்ள பெரிய அநீதி என்னவென்றால், இரு வேறு மதம் உள்ளவர்களின் காதலை சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தார் முழு மனதோடு ஏற்றுக் கொண்டாலும், அதை ஏற்காத யார் ஒருவர் புகார் தந்தாலும் அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்பது தான்.

உத்தரப் பிரதேசத்தின் இந்த மதமாற்றத் தடை மசோதா மிக அற்பத்தனமானது. மனித சமூகத்தில் இயல்பாக நிலவும் அன்பு, நேசம், பரஸ்பர நல்லிணக்கம் ஆகியவற்றை ஆட்சி அதிகார பலத்தால் சிதைத்துவிடலாம் என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவின் மற்ற பாஜக ஆளும் மாநிலங்கள் கூட நிறைவேற்றத் தயங்கும் ஒரு மசோதாவை ஏன் உ.பியில் மட்டும் யோகி கொண்டு வரத் துடிக்க வேண்டும் என்றால், மோடி- அமித்ஷா கூட்டணிக்கும், யோகிக்குமான அதிகார யுத்தத்தில் சிறுபான்மையினரை ஒடுக்குவதில் மோடியைக் காட்டிலும் தானே வீராதி வீரரென யோகி  நிலை நாட்டி, கட்சிக்குள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளத் துடிக்கிறார் என்பதே இந்த விவகாரத்தின் மற்றொரு பரிமாணமாகும்.

வேலை இல்லாத இளைஞர்கள் எதிர்காலம் தெளிவின்றி விழிபிதுங்கி நிற்கையில், இருக்கும் வேலை எப்போது பறிபோகுமோ என்ற நிலமைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ள ஒரு சூழலில், விலைவாசி உயர்வால் கடும் பொருளாதார நெருக்கடியை எளிய பிரிவினர் எதிர்கொண்டுள்ள தருணத்தில், சாதி ஆதிக்க சக்திகள் அடித்தட்டு பெண்களின் கற்பை சூறையாடி வரும் உ.பியில் இவை பற்றி எல்லாம் அக்கறை எடுத்து தீர்வு காண வேண்டிய ஒரு அரசு, தனது எல்லா கடமைகளையும் அலட்சியப்படுத்தி, மதவெறி தலைக்கேறி செயல்படுவதையே மேற்கண்ட மதமாற்றத் தடை சட்டம் உறுதிபடுத்துகிறது.

-சாவித்திரி கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset