
செய்திகள் இந்தியா
வயநாட்டில் குவியல் குவியலாக சடலங்கள்: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு
* 250க்கும் மேற்பட்டோரை காணவில்லை
பலி எண்ணிக்கை உயரும் அபாயம்* 350க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
திருவனந்தபுரம்:
வயநாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை பகுதியில் மட்டும் 350க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டாற்று வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 250 பேரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.நேற்று முன்தினம் அதிகாலை இங்குள்ள சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் வீடுகளோடு காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்தவுடன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். ஆனால் அவர்களால் பல பகுதிகளை நெருங்க முடியவில்லை.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அங்கு விரைந்தனர். கேரள அரசு உடனடியாக ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியை கோரியது. சூலூரிருந்து விமானப்படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும், அரக்கோணம், பெங்களூரு, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து ராணுவத்தினரும், கண்ணூர் எழிமலையிலிருந்து கடற்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நேற்று முன்தினம் காலநிலை மிகவும் மோசமாக இருந்ததால் மாலை 6 மணிக்குப் பின்னர் ஹெலிகாப்டரை மிகவும் சவாலான அப்பகுதியில் இறக்கி நிலச்சரிவில் சிக்கிய பலரை விமானப்படையினர் மீட்டனர்.
ராணுவத்தினர் சூரல்மலையிலும், முண்டக்கையிலும் சகதிக்குள் புதைந்து கிடந்த ஏராளமான உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு வரை 156 உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று காலை 6 மணி முதல் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் மீட்புப் பணியை தொடங்கினர்.
தற்காலிக பாலம் வழியாக முண்டக்கை பகுதிக்கு சென்று சகதிக்குள் புதைந்திருந்த ஏராளமான உடல்களை மீட்டனர். இடிந்து கிடந்த வீடுகளில் இருந்தும் பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நேற்று மேலும் 114 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முண்டக்கை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததாக ஊராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் இப்போது 50க்கும் குறைவான வீடுகள் மட்டுமே இங்கு காணப்படுகின்றன. மீதமுள்ள 350க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.
இந்த வீடுகளில் இருந்த அனைவரும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது.
சூரல்மலை பகுதியில் 50க்கும் குறைவான வீடுகள் மட்டுமே நிலச்சரிவில் சிக்கின. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டுமே 150ஐ தாண்டிய நிலையில் சூரல்மலை பகுதியில் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதியைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 9:47 pm
ரயில் நிலையத்தில் ஜி பே செயல்படாததால் வாட்சை பறித்துக்கொண்ட சமோசா விற்ற நபர்: வீடியோ வைரலானதால் கைது
October 20, 2025, 10:40 am
தீபாவளி பண்டிகைக்காக அயோத்தியில் 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 5:33 pm
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
October 18, 2025, 2:50 pm
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
October 18, 2025, 2:14 pm