நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அந்தப் பையன் நான் தான்..! - வெள்ளிச் சிந்தனை

1920-இல் நடந்த நிகழ்வு அது. இங்கிலாந்தில் நடந்த நிகழ்வு.

படித்து முடித்த புதிய மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் அது நடந்தது. 

விழாவில் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் லாயிட் ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக மேடையில் வீற்றிருந்தார். 

புதிய மருத்துவர்கள் மினுமினுக்கும் ஆடை அணிந்து பொறுமையோடும் பெருமையோடும் அமர்ந்திருந்தார்கள். எல்லோருக்கும் பட்டம் வழங்கப்பட்டு விழா இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. 

மருத்துவக் கல்லூரியின் டீன் இறுதியாகப் பேச வந்தார். 

அவையே உன்னிப்பாகக் கருத்தூன்றிக் கவனித்துக் கொண்டிருக்க தம்முடைய உரையின் ஊடே புதிய மருத்துவர்களுக்கு மருத்துவச் சேவையின் அருமையை, சிறப்பை உணர்த்துகின்ற விதத்தில் சொன்ன உண்மைச் சம்பவம் ஒன்று அவையோரை நெஞ்சம் நெகிழச் செய்தது. டீன் உரையாற்றி முடித்ததும் பிரிட்டிஷ் பிரதமர் செய்த செயலோ அந்த நிகழ்வை மறக்க முடியாததாய் ஆக்கிவிட்டது. 

பிரதமர் என்ன செய்தார் என்று தானே கேட்கின்றீர்கள்? சொல்கின்றேன். அதற்கு முன்பு டீன் சொன்னதைக் கேளுங்கள். 

மருத்துவச் சேவையின் உன்னதத்தை, சிறப்பை பலவாறு உணர்த்திய டீன் இறுதியில் தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னார் : இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. 

அது ஒரு மழைக்காலம். 

நள்ளிரவு தாண்டிவிட்டிருந்தது. என்னுடைய அறைக் கதவை யாரோ ஓங்கித் தட்டினார்கள். 

கதவைத் திறந்த போது ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். 

‘டாக்டர்! என்னுடைய பையன் ரொம்பவும் முடியாமல் இருக்கின்றான். உடல் வலியால் தவிக்கின்றான். அவனை எப்படியாவது வந்து காப்பாற்றுங்களேன், ப்ளீஸ்’ 

வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. 

நான் மறுபேச்சு பேசவில்லை. பெட்டியையும் குடையையும் எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணுடன் கிளம்பிவிட்டேன். 

மழை ஜோராக பெய்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணுடன் ஓட்டமும் நடையுமாக விரைந்தேன். ஒருவழியாக அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்தோம். 

அது ஒரு ஒற்றை அறை. 

அந்த அறையில் அவள் தன்னுடைய பையனுடன் வசித்து வந்தாள். அவளுடைய பையனோ வலியால் துடித்துக் கொண்டிருந்தான். உடலோ அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. 

நான் உடனே என்னுயை வேலையைத் தொடங்கிவிட்டேன். 

மருந்து கொடுத்த சிறிது நேரத்துக்குள் பையன் முனகுவதை நிறுத்திவிட்டான். நிம்மதியாக உறங்கத் தொடங்கிவிட்டான். 

அந்தப் பெண்ணின் முகத்தில் ஆயிரம் வாட் வெளிச்சம். 

நான் கிளம்பத் தயாரானேன். 

அப்போது அந்தப் பெண் பணத்தாள்களை பையில் வைத்து நீட்டினார். நான் அதனை வாங்க மறுத்துவிட்டேன். அவர்கள் இருந்த நிலைமையைப் பார்த்து எதனையும் வாங்குவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. 

‘உங்களுடைய பையன் முழுமையாக குணமடைகின்ற வரை நான் வந்து சிகிச்சை அளிக்கின்றேன்’ என்று வாக்குறுதி தந்தேன். 

இதனைச் சொல்லி முடித்த பிறகு சற்றே நிறுத்திய டீன் தொடர்ந்து சொன்னார்: ‘நன்றாக நினைவில் இருத்திக் கொள்ளுங்கள். இதுதான் இந்த மருத்துவத் தொழிலின் தனிச் சிறப்பு. சேவை மனப்பான்மைதான் நம்முடைய அடையாளம். பணம் சம்பாதிப்பது நம்முடைய முதன்மை இலட்சியமாக ஒருபோதும் இருத்தலாகாது. அதற்கு மாறாக, கனிவும் இரக்கமும், பரிவும் கிருபையும் கொண்டவர்களாக நாம் இயங்க வேண்டும். இறைவனுக்கு நெருக்கமான தொழில் இதுதான்.’

டீன் பேசி முடித்ததுதான் தாமதம். 

பிரதமர் லாயிட் ஜார்ஜ் துள்ளி எழுந்தார். போடியத்தை நோக்கி ஓடோடி வந்தார். டீனின் கையைப் பிடித்து முத்தமிட்டார். 

பிறகு சொன்னார் : ‘இருபதாண்டுகளாக நான் உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் குணப்படுத்திய அந்தப் பையன் நான் தான்.  ஆஹா!  என்னுடைய அம்மா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள் தெரியுமா? இப்போது அவளுக்கு மண்ணறையில் நிம்மதி கிடைத்திருக்கும். 

உங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். எங்களின் இக்கட்டான நேரத்தில் வறுமையில் நாங்கள் வாடிக் கொண்டிருந்த அந்த நாள்களில் நீங்கள் செய்த பேருதவிக்காக உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்ல வேண்டும் என்றே அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.’

1916 முதல் 1922 வரை பிரதமராகப் பணியாற்றியவர்தான் லாயிட் ஜார்ஜ். அந்தக் காலத்து இங்கிலாந்தின் மிகச் சிறந்த பிரதமர்களாக இரண்டு பேர் கொண்டாடப்படுகின்றார்கள். ஒருவர் வின்சென்ட் சர்ச்சில். இரண்டாமவர் டேவிட் லாயிட் ஜார்ஜ். 

மனிதர்களுக்கு நன்மை செய்பவர்தாம் உங்களில் சிறந்தவர் என்றே நபிகளார் (ஸல்) அறிவித்திருக்கின்றார்கள். 

கருணையும் பரிவும் கனிவும் மென்மையும் இதயத்தில் நிறைந்திருந்தால் தான் மற்றவர்களுக்கு நன்மை செய்கின்ற நற்பேறும் வாய்ப்பும் கிடைக்கும். 

அன்பை விதைப்போம். அது நன்மையை மட்டுமே தரும். அதனால் எப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும் என நம்மால் துல்லியமாகக் கணிக்க முடியாது. 

*பே லோஸ் முஹப்பத் ஹோ*

*பே பாக் சதாகத் ஹோ*

பிரதிபலன் பாராத நேசம் வேண்டும்

அச்சம் இல்லாத நேர்மை வேண்டும்

என்று மன்றாடினார் அல்லாமா இக்பால்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

- லுத்ஃபுல்லாஹ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset