நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

உங்கள் பிரச்சினைகளை பின்னிரவுத் தொழுகையில் சொல்லுங்கள்: மனம் உருகப் பிரார்த்தனை செய்யுங்கள் - வெள்ளிச் சிந்தனை

நாள்தோறும் ஐவேளைத் தொழுகைகளைத் தாண்டி, பின்னிரவு நேரத்தில் எழுந்து இறைவனைத் தொழுவதை இஸ்லாமிய வாழ்வியல் பெரிதும் ஊக்கப்படுத்துகிறது.

உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அந்த அமைதியான பின்னிரவு வேளையில் எழுவது எளிதான செயலன்று. 

யாருடைய இதயத்தில் இறைநேசமும் இறைப்பற்றும் ஆன்மிக உணர்வும் அலையென வீசிக் கொண்டிருக்கின்றனவோ அவர்களால்தாம் அந்த நேரத்தில் எழுந்து இறையைத் தொழ முடியும்.

நபிகள் நாயகம்(ஸல்) பின்னிரவுத் தொழுகைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். 

பாதங்கள் வீங்கும் அளவுக்குக்கூட இரவு நேரங்களில் நின்று தொழுதிருக்கிறார். 

இறுதிவேதம் திருக்குர்ஆனும் தஹஜ்ஜுத் எனும் இந்தப் பின்னிரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுமாறு உற்சாகப்படுத்துகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழர் ஒரு சுவையான தகவலைச் சொல்கிறார்.

“நபியவர்கள் தஹஜ்ஜுத் எனும் பின்னிரவுத் தொழுகைக்காக எழுந்ததும் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்” என்று கூறி அந்தப் பிரார்த்தனையின் முழுவடிவத்தையும் தந்துள்ளார்.

“அல்லாஹும்ம லக்கல் ஹம்து...” என்று தொடங்குகிறது அந்த துஆ- பிரார்த்தனை.

“இறைவா, உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே.

“இறைவா, உனக்கே புகழ் அனைத்தும். வானங்களின் ஆட்சியும், பூமியின் ஆட்சியும், அவற்றில் உள்ளவற்றின் மீதான ஆட்சியும் உனக்கே உரியன.

“இறைவா, உனக்கே அனைத்துப் புகழும். வானங்களின் ஒளி நீயே. பூமியின் ஒளி நீயே. அந்த இரண்டிலும் உள்ளவற்றின் ஒளியும் நீயே.

“இறைவா, உனக்கே புகழ் அனைத்தும். வானங்களின் அரசனும் நீயே. பூமியின் அரசனும் நீயே.

“இறைவா, உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மை.

உன் வாக்குறுதி உண்மை.

உன்னைச் சந்திக்க இருப்பது உண்மை.

உன் கூற்று உண்மை.

சொர்க்கம் உண்மை.

நரகம் உண்மை.

நபிமார்கள் உண்மை.

முஹம்மத் உண்மை.

மறுமை உண்மை.

“இறைவா, உனக்கே கட்டுப்பட்டேன். 

உன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். 

உன்னையே சார்ந்துள்ளேன். 

உன்னிடமே திரும்புகிறேன். 

உன்னிடமே வழக்காடுவேன். உன்னிடமே நீதி கேட்பேன். 

எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்த, ரகசியமாய்ச் செய்த, வெளிப்படையாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக.

 நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.”(ஆதாரம்- புகாரி நபிமொழித் தொகுப்பு- எண்-1120)

இரவின் அமைதியில், 

ஆழ்ந்த ஆன்மிக உணர்வுடன்,

 இதயம் உருக, 

கண்களில் நீர் மல்க, 

இரு கை ஏந்திப் பிரார்த்தித்து மன்றாடும்போது கிடைக்கும் நிம்மதிக்கு ஈடு ஏது?

இப்படித் தன்னை நினைந்து உருகும் இறையடியார்களை இறைவன் நேசிக்காமல் இருப்பானா? 

தன் அருட்கொடைகளை வாரி வழங்காமல் இருப்பானா?

பின்னிரவில் எழுவோம். இறைவனைத் தொழுவோம்.

“இரவில் தஹஜ்ஜுத் தொழுகையைக் கடைப்பிடியுங்கள். இது நீங்கள் செய்ய வேண்டிய அதிகப்படியான தொழுகையாகும்.” (குர்ஆன் 17:79)

-சிராஜுல் ஹஸன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset