நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அபிவிருத்தி - பரக்கத் என்றால் என்ன? - வெள்ளிச் சிந்தனை 

இருபத்துநான்கு மணி நேரம் வியாபாரம் செய்து அடையும் இலாபமா? 

வெள்ளிக்கிழமை பாங்கு சொன்னவுடன் தொடர்ந்து வேலை / வியாபாரம் செய்து கிடைக்கும் இலாபமா? 

இரவு உறங்காமல் விழித்திருந்து வேலை செய்து கிடைக்கும் வருமானமா? 

மற்றவர்களிடம் கையேந்தி பெற்ற நன்கொடை / தர்மங்கள்/ யாசகம் அதனால் வரும் பயன்களா?

செலவழிக்காமல் சேர்த்து வைத்துப் பெறும் மகிழ்ச்சியா? 

நம் வாழ்வில், வயதில்,பிள்ளைகளில், வியாபாரத்தில், அன்புக்கினியவர்களின் மகிழ்வில் பரக்கத்தை விரும்புகிறோம்.

பரக்கா என்ற வார்த்தை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் புதிதல்ல.

மொழி,  இனம், நாடுகள் கடந்து  பரக்கா , பாரகல்லாஹ், முபாரக் என்று  தினமும் நாம் சொல்வதில் இருந்து நமது நாக்கு தப்ப முடியாது.

முஸ்லீம்கள் ஒருவருக்கொருவர் தெரிவிக்கும் சலாம்- வாழ்த்து முதல், முஹம்மது நபி ஸல் அவர்களின் ஏராளமான பிரார்த்தனைகள் வரை எங்களுக்கு கற்றுக் கொடுத்தது.  தினசரி பிரார்த்தனைகளில் அல்லாஹ்விடம் பரக்கத்தைக் கேளுங்கள் என்பதே! 

உண்மையில் பரக்கா என்றால் என்ன?

பரக்கா.  அதிலிருந்து உருவான வார்த்தைகள் (எ.கா. முபாரக், பரக்காத்) குர்ஆனில் முப்பத்திரண்டு முறை வருகிறது. அவை அனைத்தும் இறைவன் அருளும் பாக்கியம் என்று விளங்குகிறோம். 

இது நன்மையின் தொடர்ச்சி.

நன்மையின் அளவில் அதிகமும், அதன் வளர்ச்சியும் ஆகும்.
எளிமையாகச் சொல்வதென்றால், பரக்கத் என்று நாம் கூறினால், அது நீண்ட காலத்திற்குத் தொடரக்கூடியது. காலப்போக்கில் வளரக்கூடிய ஏராளமான நன்மைகளைக் கொண்டிருப்பதன் மூலம் அல்லாஹ் பாக்கியம் தருகிறான்  என்று அர்த்தம்.

பல குழந்தைகளைக் கொண்ட  பெற்றோர், கிடைக்கும் சிறிய வருமானத்தில் நல்ல முறையில் பிள்ளைகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு ஒரு நல்ல கண்ணியமான வாழ்வை அமைத்துக் கொடுப்பது பரக்கத்தான வாழ்க்கை .

 அறிஞர் ஒருவர்  எளிய ஆய்வுக் கட்டுரையை எழுதி, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், உம்மத் அதன் வழியாக பயனடைந்தால் அது பரக்காவின் அடையாளம். 

இருபது பேர்களுக்கான உணவுகள் இருந்து அதை முப்பது, நாற்பது பேர்கள் சாப்பிட்டு விட்டு திருப்தியுடன் அல்ஹம்துலில்லாஹ் சொன்னால் அதில் பரக்கத் நிரம்பி வழிந்தது என்று அறியலாம். 

பசியோடு இருக்கும் பிள்ளைகளை வீட்டில் வைத்துக் கொண்டு அன்றைய ஒரு நாள் செய்த வேலையில் கிடைத்த வருமானத்தில் அரிசி வாங்கி கஞ்சி காய்ச்சி ஊறுகாய் அல்லது துவையல் செய்து சாப்பிட்டு விட்டு அல்ஹம்துலில்லாஹ் சொன்னால் அதிலும் பரக்கத் நிரம்பி வழிகிறது என்றே பொருள். 

சே!  என்னடா இது வாழ்க்கை என்று அலுத்துக் கொண்டால் அங்கே பரக்கத் தானாக வெளியேறும். பிள்ளைகள் மனம் வெதும்பும். மனைவி கணவனிடம் சண்டை பிடித்து பற்றாக்குறை தான் வாழ்க்கை என்று அலுத்துக் கொள்வாள். 

பரக்கத் எனும்  அல்லாஹ்வின் அருள் பெற்ற ஒருவன் தனது பற்றாக்குறையிலும், இருண்ட நாட்களிலும் தனது பாதையை வெளிச்சமாகவே காண்பான். இதற்கு மாற்றாக ஆடம்பரத்தை அனுபவிக்கும் ஒருவர், ஆனால் பரக்கத்  இல்லாதவர், மகிழ்ச்சியற்ற, மோசமான நிலையைக் காண்பார், அவருடைய செல்வம் அவரது வீழ்ச்சிக்கு ஒரு படிக்கட்டு மட்டுமே என்பதை விரைவில் கண்டுபிடிப்பார்.

 நமது பொது நல்வாழ்வுக்கு பராக்காவின் இருப்பு மிகவும் முக்கியமானது, நபி ஸல் அவர்கள், ஒருவர் தன்னைக் கவர்ந்திழுக்கும் பொருளை வேறொருவர் வைத்திருப்பதைக் கண்டால் தனக்காக அதே போன்று பரக்கத் செய் என்று அல்லாஹ்விடம் துஆ செய்வதை தடை செய்தார்கள். 

முஸ்லிமின் நம்பிக்கையில் பரக்கத் - அபிவிருத்தி எவ்வளவு உயர்வாக மதிக்கப்படுகிறது என்பது அதன் மதிப்பை அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.அது எவ்வளவு மதிப்பு என்பதை அறிந்து, பராக்காவைத் தேடுவதை நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அறுவடை செய்ததில் இருந்து சிலவற்றை நபி ஸல் அவர்களின் முன் வைத்து அதில் பரக்கத்திற்காக தோழர்கள் துஆ செய்யுங்கள் என்று கேட்பார்கள். நபி ஸல் அவர்களும் துஆ செய்வார்கள்.

பரக்கா என்பது நம் கையில் இல்லை. அது அல்லாஹ் தரும் பாக்கியம்; அருட்கொடை. அதை தான் விரும்பியவர்களுக்கு வாரி வழங்குவான். விரும்பியவர்களுக்கு இறுக்கிப் பிடிப்பான். 

மற்றவர்களிடம் கையேந்தி வாழ்பவனிடம் இருந்து முதலில் பிடுங்கப் படுவது பரக்கத். கையேந்தும் காலம் வரை அவன் வாழ்வு பற்றாக்குறை தான். அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சும்மா இருந்து விடாமல் நேர்மையாக உழைத்து, கிடைத்ததை வைத்து மகிழ்ந்து இறைநம்பிக்கையுடன் ,  பொறுமையுடன்,  தொழுகையை தொடர்ந்து தொழுது வருபவர்களின் வாழ்க்கையில் பரக்கத் தானாக வந்து நிரம்பி வழியும்.

- மௌலவி ஹாஜி முபாரக் அலி, பினாங்கு 
(புனித மதீனாவிலிருந்து நம்பிக்கை வாசகர்களுக்கு அனுப்பிய ஆக்கம்) 

தொடர்புடைய செய்திகள்

+ - reset