நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இந்தியச் சமுதாயத்தின் ஒப்பற்றத்தலைவர் துன் வீ.தி.சம்பந்தன்

(ஜூன் திங்கள் 16 துன் சம்பந்தனின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பட்டது.)

ஒவ்வொரு கால கட்டத்திலும் தலைவர்கள் வருவார்கள்;போவார்கள்.ஆனால்,மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பவர்கள் ஒருசிலரே.அப்படி காலம் கடந்து மட்டுமின்றி தலைமுறைகள் கடந்தும் மக்களின் மனங்களில் வாழும் உன்னத தலைவர்தான் துன் வீ.தி.சம்பந்தன் ஆவார்.அவர் இந்நாட்டின் முதன்மை தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தாலும் காலத்தை வென்ற இந்தியச் சமுதாயத்தின் ஒப்பற்றத் தலைவராவார்.

இந்தியச் சமுதாயத்தின் வரலாற்றையும் இந்நாட்டு அரசியலோடு இந்நாட்டின் வரலாற்றையும் எழுத வேண்டுமானால் துன் சம்பந்தன் என்னும் பெயரையும் அவரது வாழ்வியல் பங்களிப்பையும் மறுத்துவிட்டு சொல்லிவிட முடியாது.அதுபோல்,அவர் சார்ந்திருந்த ம இ காவின் வரலாற்றைப் பேசும் போது துன் சம்பந்தனுக்கு முன் துன் சம்பந்தனுக்கு பின் என இருவகையாக பிரிக்கலாம்.

யாரையும் வெறுத்துப் பேசாத இயல்பு,மனிதமும் இனவுணர்வும் மேலோங்கியிருந்த சிறந்த தலைவரான துன் சம்பந்தன் கட்சியில் தன்னோடு இருந்தவர்களை உயர்த்தில் உயர்த்தி வைத்து அழகு பார்த்த பெரும்தலைவர் இவர்.ம இ காவின் வளர்ச்சியில் எத்தகைய பங்களிப்பை இவரது செயல்பாடுகள் கொண்டிருந்ததோ அதுபோலவே இந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் துன் சம்பந்தனின் ஆற்றல் என்பது வார்த்தைகளில் விவரிக்க முடியாத பெரும் அர்ப்பணிப்பு மிகுந்ததாகும்.

இந்தியச் சமுதாயத்தை சிறந்த இலக்கை நோக்கி இட்டுச் செல்ல சிந்தித்த துன் சம்பந்தன் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு அடித்தலம் இட்டதொடு மலேசியர்களிடையே ஒற்றுமையும் ஒருமைபாடும் மேலோங்க தன்னால் இயன்ற அத்துணை முயற்சிகளையும் ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்ட பெருமகனார் இவர்.

May be an image of 3 people and crowd

மேலும்,தனது தலைமைத்துவத்தின் கீழ் ஆற்றலும் திறனும் மிக்க புதிய தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களை தலைமைப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்த தன்னலமற்ற நனிச் சிறந்த தலைவர்.அதன் சான்றாக தனது 19ஆண்டுக்காலம் தன்னோடு டான்ஶ்ரீ மாணிக்கவாசகத்தை துணைத்தலைவராகவும் அமைச்சராகவும் உயர்த்திய உன்னதத் தலைவர்.இதுநாள் வரை எந்த தலைவரும் செய்திடாத தனித்துவம் இதுவாகும்.

அதுமட்டுமின்றி,எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருக்காத துன் சம்பந்தன் திறமையானவர்களிடம் அப்பொறுப்பினை ஒப்படைத்து சிறப்பு சேர்த்துள்ளார்.(எண்ணுதல் நடத்தல் வேண்டும்...நல்லதே எண்ணியல் வேண்டும்).
 அவரது கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட இன்றைய ம இ காவின் தலைமையகத்தின் கட்டிடக்குழு தலைவராக டான்ஶ்ரீ மாணிக்கவாசகத்தை நியமித்து அதனை சிறப்பாகவும் செய்து முடித்துள்ளார். (இதனை இதனால் இவன் முடிக்க என்றாய்ந்து..அதனை அவன் கண் விடல் ; குறல்)

தன் வாழ்நாள் முழுவதும் இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலத்தை சிந்தித்த துன் சம்பந்தன் அன்றைய பிரதமரும் தேச தந்தையுமான துங்கு அப்துல் இரஹ்மானின் நம்பிக்கையை பெற்றவர்களில் முதன்மையானவர் எனலாம்.நாட்டின் மீது அவர் கொண்டிருந்த விசுவாசமும் அரசாங்கத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றும்தான் அவரை ஒருநாள் பிரதமராகவும் இம்மண்ணில் வரலாறு படைத்துள்ளது.

இந்தியச் சமுதாயம் மட்டுமின்றி இந்நாட்டின் பல்லின மக்களும் தலைவர்களும் உன்னதமாக ஏற்றுகொண்ட தலைவராக விளங்கிய துன் சம்பந்தன் தாம் பொறுப்பேற்றிருந்த அமைச்சின் வாயிலாக அந்தந்த துறைகளில் நனிச் சிறந்த சேவையை ஆற்றியுள்ளதோடு அத்துறைகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நிகரற்ற பங்களிப்பையும் செய்துள்ளார்.

நம் சமுதாயம் உழைத்து கொடுக்கும் சமுதாயமாக மட்டுமே இருந்து விடக்கூடாது.வருங்காலத்தில் இந்நாட்டில் மற்ற இனங்களுக்கு ஈடாக பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என அவர் உருவாக்கிய தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் இன்று வரை சிறந்த தலைமைத்துவத்தால் நம் சமுதாயத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது.

துன் சம்பந்தன் காலத்தால் அழியாத பெரும் தலைவர்.அவர் ம இ கா என்னும் அரசியல் கட்சியை கடந்து இந்நாட்டின் ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தின் தலைவராக உலா வந்தவர்.அவரை ஒரு கட்சியின் அடையாளத்துக்குள் சிறைவக்காமல் நாட்டில் இன்று எல்லாரும் அவரது நினைவுநாளையும் பிறந்தநாளையும் நினைவுக்கூர்வதும் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதும் அத்தலைவனுக்கு உரிய மாபெரும் அங்கிகாரம் என்றால் அது மிகையல்ல.

காலம் கடந்தாலும் நாட்டின் தலைநகரில் அவர் பெயரை சுமந்து நிற்கும் வானுயர கட்டிடமும் நாட்டில் ஆங்காங்கே அவரது பெயரிலே இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளும்,சாலைகளும் அவரது பெயரையும் புகழையும் தலைமுறைகள் தாண்டி கொண்டுச் செல்லும்.அவர் மறைந்து 45ஆண்டுகள் எட்டிவிட்டது.ஆனால்,அவரது திர்ருபுகழ் இன்னமும் ஓங்கி ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.

மண்ணில் மறைந்து விண்ணில் வாழும் துன் சம்பந்தன் மக்கள் மனங்களில் நீங்காத ஒப்பற்றத் தலைவராக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது 105வது பிறந்தநாளில் அவரது சேவையையும் அர்ப்பணிப்பையும் போற்றி அவரது புகழ் ஓங்க நினைவுக்கூறுவோம்.

ஆக்கம்: கி.மணிமாறன், சுங்கை சிப்புட்

தொடர்புடைய செய்திகள்

+ - reset