
செய்திகள் சிந்தனைகள்
ஐந்து வகை மனிதர்களுடன் ஒருபோதும் சேர்ந்திருக்கக்கூடாது
உறவைப் பேணி வாழுமாறு அறிவுறுத்தல், உறவைப் பேணி வாழ்வதன் சிறப்பு ஆகியவற்றுடன் உறவைத் துண்டிப்பதோ மிகக் கடுமையான பாவம் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உறவைத் துண்டித்தல் - அதாவது உறவினர்களுடன் மோசமாக நடந்துகொள்ளுதல், அவர்களைச் சந்திப்பதையும் அவர்களுடன் பழகுவதையும் நிறுத்திக் கொள்ளுதல் எத்தகைய அருவருப்பான செயல் எனில் அதில் ஈடுபடுபவர்கள் சுவனத்துக்குள் நுழைய தகுதியில்லாதவர்களாய் அறிவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஜுபைர் இப்னு முத்இம் தம்முடைய தந்தையாரிடமிருந்து அறிவிக்கின்றார்கள் : என் தந்தை கூறினார்: நபிகளார்(ஸல்) கூறினார்கள் : ‘உறவினர்களுடன் தொடர்பையும் உறவையும் துண்டிப்பவரும், அவர்களுடன் மோசமாக நடந்துகொள்பவர்களும் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்’. *(திர்மிதி, முஸ்லிம் 4996)*
*இமாம் ஜெய்னுலாப்தீன் அலீ(ரஹ்)* அவர்களின் மகனார் முஹம்மத் அறிவிக்கின்றார்:
‘ஐந்து வகையான மனிதர்களுடன் ஒருபோதும் சேர்ந்திருக்கக்கூடாது என்று என்னுடைய தந்தை எனக்கு இறுதி அறிவுரை (வசியத்) செய்திருந்தார்’.
‘யார் அந்த ஐவர்?’ என நான் வினவினேன்.
அவர் சொன்னார்: *‘முதலாமவன் ஃபாசிக்* - இறைவனுக்குக் கீழ்ப்படிய மறுத்து அதன் எல்லைகள் அனைத்தையும் மீறுபவன்’. அவன் உம்மை ஒரு கவள உணவுக்காக அல்லது அதற்கும் குறைவான விலைக்காகவும் விற்றுவிடுவான்’. நான் கேட்டேன்: ‘அதனை விடக் குறைவான விலையுள்ளது எது?’ அவர் சொன்னார்: ‘ஒரு கவள உணவு கிடைக்கும் என எதிர்பார்த்திருக்க அதுவும் கிடைக்காமல் போவது’.
*‘இரண்டாமவன் யார்?* என நான் கேட்டேன்.
அவர் சொன்னார்: *‘கஞ்சன்.* அவன் உமக்கு இன்றியமையாத தேவையாக இருக்கின்ற பொருளை உம்மிடமிருந்து அகற்றிவிடுவான்’.
*‘மூன்றாமவன் யார்?’* என நான் வினவினேன்.
அவர் சொன்னார்: *‘மகா பொய்யன்.* அவன் கானல் நீரைப் போன்று நெருக்கத்தை உம்மை விட்டு தொலைவாக்கிவிடுவான். மேலும் தொலைவை நெருக்கமாக ஆக்கிவிடுவான்’.
நான் கேட்டேன்: *‘நான்காமவன் யார்?’*
அவர் சொன்னார்: *‘முட்டாள்.* அவன் உமக்கு நன்மையைத் தர விரும்புவான். ஆனால் அதற்கு நேர்மாறாக உமக்கு இழப்பையே ஏற்படுத்தி விடுவான்’.
நான் கேட்டேன்: *‘ஐந்தாமவன் யார்?’* அவர் சொன்னார்: ‘உறவினர்களுடன் தொடர்பைத் துண்டிப்பவன். உறவினர்களுடன் மோசமாக நடந்துகொள்பவன். அத்தகைய மனிதர்கள் மீது இறைவன் சபிப்பதை நான் குர்ஆனில் மூன்று இடங்களில் பார்த்திருக்கின்றேன்’.
உறவைப் பேணி வாழ்வது மறுமையில் நற்கூலி கிடைப்பதற்கான வழிவகையாய் அமைவதைப் போன்றே இந்த உலகிலும் ஏராளமான பயன்களையும் நன்மைகளையும் அளிப்பதாய் அமைவதைப் போன்று உறவைத் துண்டித்தலும் மறுமையில் மிகப் பெரும் இழப்புக்கு வித்திடுகின்ற அதே வேளையில் இந்த உலகிலும் அது மனிதர்களுக்குத் தண்டனையும் இழப்பும் கிடைத்திட வித்திடுகின்றது.
அபூபக்ரா(ரலி) அறிவிக்கின்றார்: ‘நபிகளார்(ஸல்) கூறினார்கள் : ‘மற்றெல்லாக் குற்றங்களை விட ‘இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்து வரம்புகளை மீறுவதும் உறவுகளைத் துண்டித்தலும்’ எத்தகைய குற்றங்கள் எனில் அவற்றைச் செய்பவர்கள்தாம் இறைவனால் இந்த உலகிலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். அவர்களுக்காக மறுமையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற தண்டனை தனி.’ (அபூ தாவூத்)
- அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am