நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

பிளாக்செயின் தொழில் நுட்பம் (BLOCKCHAIN TECHNOLOGY): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி - இரா. ஆறுமுகம்

தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு முன்னேறிய தொழில்நுட்பமாக உருவாகி வளர்ந்து வருவதோடு மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் செல்வாக்கு செலுத்தப் போகும் ஒன்று இருக்கிறதென்றால் அது பிளாக்செயின் தொழில்நுட்பம்தான். 2008ஆம் ஆண்டு குறியீட்டு நாணய முறையான (Cryptocurrency) பிட்காயின் (Bitcoin) தோன்றியபோது, அதனோடு உருவானதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம்.

சடோஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என்ற பெயரில் ஒருவரோ அல்லது ஒரு குழுவோ இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் இதை உருவாக்கிய சடோஷி நாகமோட்டோ என்ற பெயருள்ளவரை யாரும் இதுவரை அடையாளம் காணவில்லை.
 
குறியீட்டு நாணயம் என்பது ஒரு டிஜிட்டல் சொத்து (Digital Asset) எனக்கொள்ளலாம்.‌ அதாவது ஏற்கெனவே புழங்கப்பட்டு வரும் காகித நாணயம் (Paper currency) போலன்றி, தரம் வாய்ந்த பாதுகாப்பு குறியீடுகளை பயன்படுத்தி (Cryptography) கணினியால் உருவாக்கப்பட்ட தரவுத்தொகுப்பினை (Database) அடிப்படையாகக் கொண்டு, பரிமாற்ற கணக்கு புத்தகத்தில் (Ledger) பதிவு செய்யப்படும் ஒரு வகை நாணயம்.

பிட்காயின் என்னும் குறியீட்டு நாணயம் 2009ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. தற்போது ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இத்தகைய குறியீட்டு நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றோடு, இவற்றை மேலாண்மை செய்ய உதவும் பிளாக்செயின் தொழில் நுட்பமும் வளர்ந்திருக்கிறது.

பிளாக்செயின் என்பது என்ன?

பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையே தகவல்கள் நகலெடுக்கப் படக்கூடாது - பகிரப்பட மட்டுமே வேண்டும் என்பதுதான். நேர முத்திரை இடப்பட்ட தொடர்களால் (Time stamped series) ஆன மாற்ற முடியாத தரவுகளின் பதிவுகள் தனிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு சொந்தமில்லாத ஒரு கணினி தொகுப்பினால் நிர்வகிக்கப்படுவது பிளாக்செயின் என வரையறை செய்யலாம்.

தரவுகளின் ஒவ்வொரு தொகுதியும் (Block) மற்ற தொகுதிகளுடன் குறியீட்டு முறையை பயன்படுத்தி இணைக்கப்பட்டிருக்கும். அதனால்தான் இந்த தொழில்நுட்பம் பிளாக் செயின் அதாவது தொகுதிகளின் சங்கிலி இணைப்பு என்னும் பொருள்பட அழைக்கப்படுகிறது.

பிளாக்செயின் எப்படி செயல்படுகிறது?

பிளாக்செயின் தொழில்நுட்பம் ஒரு சனநாயக பூர்வமாக இயங்குகின்ற தொழில்நுட்பம். ஏற்கனவே பயன்படுத்திவரும் சர்வர்-கிளையன்ட் முறைக்கு நேர்மாறானது இது. சர்வர் கிளையண்ட் முறையில் உங்களுக்கு ஒரு தகவல் வேண்டும் என்றால் நீங்கள் சர்வருக்கு தகவல் அனுப்பி பின் பதிலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதைப்போல பலரும் தகவல் பெறவேண்டுமென்றால் ஒவ்வொருவரும் அந்த சர்வரோடு தனித்தனியாக தொடர்புகொண்டு பெற வேண்டியதிருக்கும்.

ஆனால் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் அந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து கணினிகளும் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாற்றம் செய்து தேவையான தரவுகளை புதுப்பித்தல் (update) செய்து கொள்ளும்.

இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் கணினியில் அடிக்கடி பயன்படுத்தும் எக்சல் கோப்புகளை (Excel Files) எடுத்துக்கொள்ளலாம். அதை புதுப்பித்தல் செய்வதற்கான தரவுகள் பலரிடம் இருப்பதாக கொண்டால், நாம் அந்த கோப்பினை ஒருவருக்கு அனுப்பி அவர் புதுப்பித்த பிறகு மற்றவருக்கு அனுப்பி இதைப்போல தொடர்ச்சியாக பகிர்ந்து மட்டுமே அந்த கோப்பினை முழுமையாக புதுப்பிக்க இயலும்.

ஆனால் பிளாக்செயின் தொழில் நுட்பத்தைப் பொருத்தவரை அது ஒரே ஒரு எக்ஸெல் கோப்பு அனைவரிடமும் இருப்பதுபோன்ற ஒரு தொழில்நுட்பமாகும். இதன் காரணமாக யாரெல்லாம் அந்த இணைப்பில் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் அங்கங்கே அதில் தரவுகளை புதுப்பித்துக்கொள்ள முடியும்.
 
ஒரு பிளாக்செயின் வலைப்பின்னலுக்கு மூன்று முக்கிய பகுதிகள் அவசியமானவை.

1. கணினிகளின் அல்லது பங்கு பெறுபவர்களின் ஒரு வலைப்பின்னல் (Network)
2. வலைப்பின்னலுக்கான ஒரு நெறிமுறை (Protocol)
3. ஒருமித்த கருத்துக்கான பொறியமைவு (Consensus mechanism)

ஒருமித்தக் கருத்துக்கான சோதனையில் ஒருவர் தேறினால் மட்டுமே அவர் பிளாக்செயினில் பிளாக்குகளை இணைக்க முடியும். இப்படி தேறி வருவதை மைனிங் (Mining) என அழைக்கிறார்கள்.

பிளாக்செயினின் சிறப்பியல்புகள் என்ன?

பிளாக்செயினின் தரவு, தொகுதிகளில் ஒரு தனித்த இடத்தில் சேமித்து வைக்கப் படுவதால் அது அனைவருக்கும் பொதுவானதாகவும் எளிதில் சரிபார்க்கக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த தகவல்கள் மத்தியத்துவப் படுத்தப்படாத வடிவத்தில் இருப்பதால் ஹேக்கர்கள் (Hacker) அதை சிதைக்க (corrupt) முடிவதில்லை. இலட்சக்கணக்கான கணினிகளால் அந்தத் தரவுகள் பராமரிக்கப்படுவதால் இணையத்தில் உள்ள எவருக்கும் அது கிடைக்கக்கூடியதாக ஆகிவிடுகிறது.

வெளிப்படைத் தன்மை என்பது பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான சிறப்பியல்பு ஆகும். ஒரே நேரத்தில் தனிநபரின் தகவல்களை பாதுகாக்கவும், அதே நேரத்தில் வெளிப்படையாகவும் செயல்படுகிறது இந்த தொழில்நுட்பம். தனிநபரின் அடையாளம், ஒரு சிக்கலான கணிதக் குறியீடு மூலம் பாதுகாக்கப்பட்டு, அவர்களது பொது முகவரி வாயிலாக மட்டுமே வெளியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஒருவரின் உண்மையான அடையாளம் பாதுகாப்பாக இருந்தாலும் அவர்களது பரிமாற்றங்களை பொது முகவரியின் மூலம் நீங்கள் பார்க்க முடியும். இது ஒருவகையில் பெரிய நிறுவனங்களை பொறுப்புள்ளவர்களாக ஆக்குவதற்கு கட்டாயப்படுத்தும்.

மற்றொரு சிறப்பியல்பு, தரவுகளை மாற்ற முடியாத தன்மை (immutability). இதற்கு காரணம் இது குறியீட்டு வடிவம் கொண்ட ஹேஷ் செயல்பாட்டினை (Hash function) பயன்படுத்துவதால்தான். பிளாக்செயின் என்பது தரவுகளும், இந்த ஹேஷ் குறியீடும் (Hash pointer) இணைந்து, தொகுதிகளின் ஒரு சங்கிலித்தொடராக உருவாகும் பட்டியல். இந்த ஹேஷ் குறியீடு இதற்கு முந்தைய தொகுதியோடு தொடர்பு கொண்டிருக்கும். அதாவது இதற்கு முந்தைய தொகுதியின் முகவரியை மட்டும் அல்லாது, முந்தைய தொகுதியின் தரவுகளின் ஹேஷ் குறியீட்டையும் கொண்டிருக்கும்.

இந்த ஒரு சிறு ஏற்பாடுதான், பிளாக் செயின்களை மிகவும் நம்பகத் தன்மை கொண்டதாகவும், புதுமையானதாகவும் மாற்றுகின்றது. ஏனெனில் ஒரு ஹேக்கர் ஒரு குறிப்பிட்ட தொகுதியை தாக்கும்போது அது அடுத்த தொகுதியையும் தாக்கி அப்படியே தொடர்ச்சியாக தாக்கிக் கொண்டே போகும். இப்படியாக அந்த தொடர் சங்கிலி முழுவதையும் பாதிக்கும் விஷயம் நடப்பது சாத்தியமில்லை. இதன்காரணமாக பிளாக் செயின்கள் மாற்ற முடியாததாக ஆகிவிடுகின்றன.

உடனடி பரிமாற்றம் என்பது பிளாக்செயின் பரிமாற்றத்தின் மிக முக்கியமான ஒரு சிறப்பம்சமாகும். அதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று இடைத்தரகர்கள் இல்லாதது. மற்றொன்று அந்த பரிமாற்றத்தினை தானே சரி பார்த்துக் கொள்ளும் தன்மை.

ஒரே பணத்தை இரண்டு முறை செலவழிக்க வாய்ப்பு இருப்பதை வங்கிகள் கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் மூலம் தவிர்க்கின்றன. அதே விஷயத்தை பிளாக்செயின் வேறுமாதிரியாக மிகவும் திறமையாக சமாளிக்கிறது அனைத்து பரிமாற்றங்களும் வெளிப்படைத் தன்மை கொண்டிருப்பதால் இரட்டை பரிமாற்றம் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும்

மற்ற பரிமாற்றங்களைப்போலல்லாமல், பிளாக்செயின் பரிமாற்றங்கள் எந்த செலவையும் ஏற்படுத்துவதில்லை. அதை நிறுவுவதற்கு மட்டுமே செலவுகள் ஏற்படும்.

எந்த துறைகளில் பயன்படுகிறது?

இணையத்தை பயன்படுத்துவதற்கு இணைய தொழில்நுட்பம் அனைத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது போல், பிளாக்செயின் பற்றிய தொழில்நுட்பத்தையும் அதைப் பயன்படுத்துவதற்கு அறிந்திருக்க வேண்டியது இல்லை.

நிதித்துறைதான் (Financial Sector) தற்போது பிளாக்செயின் தொழில்நுட்பம் அதிகமாக பயன்படுத்தும் துறையாக இருக்கிறது. பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்துவதால் மிகப்பெரிய நன்மை, அதில் இடைத் தரகர்கள் தவிர்க்கப்படுவதுதான்.

ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் (smart contracts): பகிர்ந்தளிக்கப்படும் கணக்கு புத்தக தொழில்நுட்பமானது (distributed ledger technology) சிறிய சிறிய ஒப்பந்தங்களை கணினி மயமாக்குவதில் உதவுகிறது. உதாரணத்திற்கு, ஒரு நிதி பத்திரம் (Financial instrument) ஒரு குறிப்பிட்ட அளவை அடையும் போது அதற்குண்டான வருமானத்தை (derivative) செலுத்த வேண்டும் என்பது போன்ற ஒப்பந்தங்களை பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் உருவாக்கலாம்.

பகிரப்படும் பொருளாதாரம் (shared economy): சமீபத்தில் தோன்றிய கிராப் (Grab),  ஊபர் (Uber) போன்ற தொழில்கள் வெறுமனே தனி நபர்களையும் சேவையாளர்களையும் இணைக்கும் ஒரு ஊடகமாக மட்டுமே இருக்கிறது. அதற்கு பதிலாக நேரடியாக பயனரும் சேவையாளரும் இணையத்தில் இணையும் போது இதுபோன்ற நிறுவனங்களுக்கான கட்டண சேவை இல்லாமல் போய்விடும். உதாரணமாக, ஓபன் பஜார் (Open Bazaar), இதுபோன்ற பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையிலான நேரடி தொடர்பினை ஏற்படுத்தி பரிமாற்ற கட்டணத்தை முற்றிலும் தவிர்க்கிறது.

கூட்ட நிதியம் (Crowd funding): தொழில் தொடங்குவதற்கு தேவையான மூலதனத்தை மக்களிடம் இருந்து நேரடியாகப் பெறுவதற்கான ஒரு வழி முறையாக பிளாக்செயின் பயன்படும். 2016 ஆம் ஆண்டு டி.ஏ.ஓ என்னும் அமைப்பு 200 மில்லியன் டாலர்களை இரண்டு மாதத்தில் சேகரித்திருக்கிறது.

அரசு நிர்வாகத்திலும் இது பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தேர்தல்களில் முழு வெளிப்படைத் தன்மையை தனது தொடர்ந்து அளிக்கப்படும் தரவுத் தொகுப்பு தொழில்நுட்பத்தின் மூலமாக கொண்டுவரும். நிறுவனங்கள் முடிவுகள் மேற்கொள்வதையும் நடைமுறைப் படுத்துவதையும் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுத்த உதவும். நிறுவனங்கள் தங்களது டிஜிட்டல் சொத்துக்களையும், தகவல்களையும் மேலாண்மை செய்வதற்கு பயன்படும்.

நுகர்வோர்கள் எப்போதுமே தாங்கள் வாங்கும் பொருட்கள் தரமாக உள்ளவையா, உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்த பயன்படும். அதை இந்த பகிர்ந்தளிக்கப்பட்ட கணக்குப் பதிவுகள், ஒரு பொருளின் உண்மைத் தன்மைக்கு சான்று அளிக்கக்கூடிய தகுதி படைத்ததாக இருக்கும். அதற்கு காரணம், பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு பரிமாற்றத்தின் நேரமும், இடமும் ஒவ்வொரு தடவையும் அதில் இடப்பட்டு இருப்பதுதான். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புரொவெனன்ஸ் (Provenance) என்ற நிறுவனம் ஜப்பானின் சுஷி உணவகங்களில் இந்தோனேசியாவிலிருந்து தருவித்து பயன்படுத்தப்படும் மீன்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பிடிக்கப்பட்டதுதானா என்ற தரச் சான்றினை ஈதரியம் (Ethereum) என்னும் பிளாக்செயினை பயன்படுத்தி தருகிறார்கள்.

கோப்புகளின் சேமிப்பு:

மையப்படுத்தப்பட்ட கிளையன்ட் - சர்வர் உறவினை மாற்றியமைத்து, ஒரு முற்றிலுமாக பரவலாக்கப்பட்ட இணையதளங்கள் மூலமாக கோப்புகள் பரிமாறப்படுவது அதன் வேகத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

ஊக சந்தையிலும் (Prediction market) பிளாக்செயின் தொழில்நுட்பம் பெரும்பாலானோரின் அறிவினைக் கொண்டு செயல்படும்போது ஓரளவு சரியான ஊகங்களை செய்ய முடிவதால் அதில் பங்கு பெறுபவர்களுக்கு அதிக வருமானத்தினை ஈட்டித்தரும்.

டிஜிட்டல் தகவல்கள் தற்போது உள்ள இணைய வசதியின் காரணமாக மறுபடி மறுபடி உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. இது இலவசமான தகவல் பொருட்களுக்கு நன்மை பயத்தாலும், காப்புரிமை பெற்றவர்களுக்கு உபயோகமானதாக இல்லை. அவர்கள் தங்களது அறிவுசார் சொத்துடமையின் மீது கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றனர். அதன்மூலம் அது தரும் நிதி வருமானத்தையும் இழந்து விடுகின்றனர்.

மைசிலியா (Mycelia) போன்ற நிறுவனம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இசையினை பகிரும் ஒரு முறையாக உருவாகியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாடகர் இமோஜென் ஹீப் (Imogen Heap) அவர்களால் உருவாக்கப்பட்ட மைசீலியா, இசையமைப்பாளர்கள் தங்களது பாடல்களை நேரடியாக தங்களது பார்வையாளர்களுக்கு வினியோகிக்க வழிவகை செய்து கொடுக்கிறது. மின் புத்தகம் (Ebook) மற்றும் திரைப்படங்களும் பயனர்களின் நேரடித்தொடர்பில் பகிரப்படும் காலம் விரைவில் வந்துவிடும்.

Building Automation Systems to the Rescue: Creating a Remote World |  2020-11-30 | Engineered Systems Magazine

பொருட்களின் இணையம் (Internet of Things) என்று சொல்லப்படும் புதிய தொழில் நுட்பத்திலும் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மூலமாக தொலைவு அமைப்புகளின் தானியங்கி தொழில் நுட்ப மேலாண்மையிலும் (Remote Systems Automation) பயனுள்ளதாக இருக்கும்

சிறு அளவில் தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) மின்சாரத்தை வாங்குவதற்கும் விற்பதற்கும் பிளாக்செயின் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மூலமாக எளிதாக செயல்படுத்த முடியும்.

அடையாள மேலாண்மை (Identity Management) இணையத்தில் மிக முக்கியமான ஒன்று. இதை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் பிளாக்செயின் தொழில்நுட்பம் மிகவும் அவசியமான ஒன்றாக ஆகிவிடும்.

தரவு மேலாண்மை: தற்போது நமது தனிப்பட்ட தரவுகளை நாமே தருவதன் மூலம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் பயன்கள் இலவசமாக பெறப்படுகிறது. எதிர்காலத்தில் பயனர்கள் இதுபோன்ற ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் உருவாக்கப்படும் தங்களது தரவுகளை மேலாண்மை செய்வதற்கும், விற்பதற்கும் வாய்ப்பு இருக்கும். ஏனெனில் அந்தத் தரவுகள் சிறிய அளவில் பிரித்து பகிர முடியும். இதுபோன்று தரவுகளை சிறிய அளவில் பிரித்து விற்பதற்கும் பிளாக்செயின் தொழில் நுட்பம் பயன்படும்.

சொத்துரிமை: பொதுவெளியில் எளிதில் அணுகக்கூடிய கணக்குப் பதிவுகளை கொண்டிருப்பதால் பிளாக்செயின்கள் பதிவுகளை பராமரிப்பதில் திறமை வாய்ந்தவையாக இருக்கின்றன. சொத்துரிமை அப்படிப்பட்ட ஒரு பதிவேடு தேவைப்படும் ஒரு துறையாகும். தற்போது அதை பராமரிப்பது செலவினம் கூடியதாகவும், மனித உழைப்பு அதிகம் தேவைப்படுவதாகவும், தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இருக்கின்றது.

பிளாக்செயின் அடிப்படையில் இந்த சொத்துரிமை மேலாண்மை செய்யப்படும்போது அத்தகைய இடர்பாடுகள் இல்லை. சில நாடுகள் அதை தற்போது பயன்படுத்த ஆரம்பித்து விட்டன. ஹோண்டுராஸ் நாடு 2015இலேயே இத்தகைய திட்டத்தை ஆறிமுகப்படுத்தி விட்டது. ஸ்வீடனும் இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறது.

பங்குச் சந்தையில் இதன் நுழைவானது கிளியரிங் ஹவுஸ் (clearing House), தணிக்கையாளர்கள் போன்ற அனைத்து இடை நிலை செயல்பாட்டார்களையும் அந்த இயக்கப் போக்கிலிருந்து நீக்கிவிடும். இப்போது ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் இத்தகைய பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் பங்குச்சந்தைகள் சோதனை முறையில் வந்துவிட்டன.

காப்பீட்டுத்துறை, மருத்துவம், உணவு மற்றும் குளிர்பான தொழில் துறைகள் அனைத்திலும் கூட இதன் பயன்பாடு இருக்கின்றது.

பாதக அம்சங்கள் என்ன?

பிளாக்செயின் வலைப்பின்னலில் இணைய ஒவ்வொரு நிறுவனமும் தங்களது பாதுகாப்பு நெறிமுறைகளில் (protocols) சில தளர்வுகளை செய்ய வேண்டியதிருக்கும். பெரும்பகுதி பரிமாற்றங்கள் திறந்தவெளி தன்மையோடு இருப்பதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். பிளாக்செயின் ஒட்டுமொத்தமாக குறியீட்டு முறையில் இருப்பதால் அதைப் பாதுகாப்பது எளிது. ஆனாலும் அதில் ஒவ்வொரு தரவுத் தொகுதிக்குள்ளும் உள்ள பதிவுகள் குறியீட்டு தன்மையில் உருவாக்கப்படவில்லை.

பிளாக்செயின் இப்போது தான் வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம். எனவே அரசாங்கங்கள் அதை எப்படிக் கையாள்வது என்ற ஒரு முடிவுக்கு இன்னும் வரவில்லை. அதற்கான ஒழுங்கு முறைகளும் (Regulations), சட்டங்களும் இதுவரை எழுதப்படவில்லை. எனினும் விரைவில் அவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பிளாக்செயின் பாதுகாப்பானதாக இருந்தாலும், பாதுகாப்பான பரிமாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தாலும், ஹேக்கர்களால் தாக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு வங்கி தனிப்பட்ட முறையில் ஹேக்கர்களால் தாக்கப்பட்டால் அதன் வருமானம் மட்டுமே பாதிக்கப்படும். ஆனால் ஒரு பிளாக்செயின் ஹேக்கர்களால் தாக்கப்படும்போது 40 வங்கிகளின் கணக்குகள் கூட பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தை எளிதில் விளக்க முடியாது. மிகவும் சிக்கலான தொழில்நுட்பம் என்பதால் அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் கடினமானது. இதனாலேயே பொதுவெளியில் பிளாக்செயின் தொழில்நுட்பம் பிரபலமாவது மிக மெதுவாக இருக்கிறது.

பிளாக்செயினின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

நிதி சார்ந்த சேவைகள் துறையில் ஏறக்குறைய பிளாக்செயின் தொழில்நுட்பம் அதிக அளவில் பரவியிருக்கிறது. பல நாடுகளில் மூன்றில் ஒரு நிறுவனம் விரைவில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளன.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சந்தை மதிப்பு மிக விரைவாக கூடிக்கொண்டு வருகிறது. அது 2023 வாக்கில் கிட்டத்தட்ட 23.3 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பெரும்பகுதி நிதி துறையிலிருந்து வரும் என கணிக்கப்படுகிறது. சிறு வணிகம் கூட அதை விரைவில் ஏற்றுக் கொள்ளும் காலம் விரைவில் வரும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கான தேவையும் கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சியும் அதற்கான மனித சக்தி தேவைகளும் பெருகி வளரும். தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒரு புரட்சிகர தொழில்நுட்பமாக பிளாக்செயின் தொழில்நுட்பம் மாறும் என்பதில் சந்தேகமில்லை.

(நன்றி: blockgeeks.com, theconversation.com, medium.com, fundera.com, en.wikipedia.org, கீற்று இணைய தளங்கள்)

இரா. ஆறுமுகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset