நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ - மம்மூட்டிக்கு வாழ்நாள் சாதனைப் படம் இது

மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’.  17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும்  நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் ஒருவர் ஆற்றைக் கடப்பதற்காக முயலும் போது வழி தவறி உயர்சாதியைச் சார்ந்த கொடுமோன் போட்டி என்பவரின் தரவாட்டுக்கு (உயர் சாதியினர் வீடு) வந்து விடுகிறார்.  கொடுமோன் போட்டி பாணனை பாடச் சொல்கிறார். அவனது இசையில் மயங்கியவர், பாணனை தன்னுடைய வீட்டிலேயே தங்கச் சொல்கிறார். தயங்கினாலும் பிறகு பாணன் சம்மதிக்கிறார்.  

அந்த வீட்டில் போட்டியைத் தவிர ஒரு சமையல்காரர் மட்டுமே இருக்கிறார்.   ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பாணன் அந்த வீட்டில் தங்கும் போது பல அமானுஷ்யமான நிகழ்வுகளைப் பார்க்கிறார்.

சமையல்காரன், பாணனிடம் போட்டியை நம்பாதே என்கிறான். அதனால் மனம் குழம்பிப் போகிறான் பாணன். பகடை விளையாட அழைக்கிறான் போட்டி. அதில், தோற்றதால் தனக்கு அடிமையாக இங்கேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான்.  ஒரு சிலந்தியைப் போல வலையில் சிக்கிக் கொள்ளும் பாணன் அந்த வீட்டிலிருந்து வெளியேற முயல்கிறான். என்ன நடந்தது? என்பது கிளைமாக்ஸ்.

இந்த எளிய கதையை வைத்துக் கொண்டு, மூன்றே மூன்று கதாபாத்திரங்களின் மூலம் ஒரு முழு நீள சினிமாவில் நம்மைக் கட்டிப் போடுகிறார் இயக்குனர் ராகுல் சதாசிவன்.  மொத்தக் கதையும் பெரும்பாலும் ஒரு வீட்டிற்குள்ளே மட்டுமே நடக்கிறது. ஆனால், நேர்த்தியான திரைக்கதையால் பார்வையாளர்களுக்கு சினிமா அனுபவத்தை தருகிறார். படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு மற்ற வண்ணங்கள் தேவையில்லை என்ற முடிவு எடுத்ததிலேயே வெற்றி பெறுகிறார் ராகுல்.

கதையின் ஊடாக நமக்கு காட்டப்படும் 17ம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்குமுறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவுக்கே உரித்தான தொன்மங்களையும் மாந்திரீக நடைமுறைகளையும் ஒடுக்குமுறை அரசியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் வசனங்கள் நறுக்கென்று வெளிப்படுகின்றன. ஒரு ‘ஹாரர்’ படத்தில் நுட்பமான கலை அம்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர்.

 

படத்தின் முக்கிய கதாபாத்திரமான கொடுமோன் போட்டி பாத்திரத்தில் அனாயசமாக நடித்திருக்கிறார் மம்மூட்டி.  அவரின் நடையும், கூர்ந்த பார்வையும், அச்சத்தை தரும் அவரது எகத்தாள சிரிப்பும் நம்மை பயத்தில் உறைய வைக்கின்றன. எப்பேர்பட்ட நடிகன் மம்மூட்டி என்பதை முதல் ஷாட்டிலேயே காட்டி விடுகிறார். அந்த வீடு முழுக்க எதிரொலிக்கும் அவரது அமானுஷ்யமான அந்தச் சிரிப்பு திரையரங்கு முழுவதும் நிசப்தத்தை தருகிறது. போட்டி என்ற அவரது தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இவரை விட்டால், வேறு யாரையும் அந்த கேரக்டருக்கு நினைத்துப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்.

பாணனாக வரும் அர்ஜூன் அசோகன் நடிப்பில் மம்மூட்டிக்கு சவால் விடுகிறார். ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர் என்பதால் அவர் காட்டும் ஒடுக்கமான உடல் மொழி, தயங்கி தயங்கி பேசுவது, அமானுஷ்யங்களை காணும் போது, திடுக்கிட்டு குழம்புவது என்று அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வேட்டி மட்டுமே உடை. அவரின் கண்களில் காணும் மிரட்சியும், பயமும் நமக்கும் தொற்றிக் கொள்கின்றன.

 

இன்னொரு பாத்திரமான சமையல்காரனாக சித்தார்த். மம்மூட்டியுடன் முரண்படும் போதும், அலட்சியமாக பாணனை நடத்தும் போதும் மிக நிதானமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் தூண் எனில், அது ஒளிப்பதிவு தான்.  படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை வண்ணங்களில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.  இந்த கதைக்கு தேவையான ஒரு உணர்வு நிலையை இதுவே உருவாக்கி விடுகிறது. கருப்பு வெள்ளை என்பதால் பார்வையாளருக்கு சிதறல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. கதாபாத்திரங்களின் உணர்வுகளின் மீது நமது கவனம் முழுமையாக குவிகிறது. குறிப்பாக அவர்களின் கண்களின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. படம் முழுக்க ஒரே வீட்டிற்குள் நடந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் கோணங்களும், ஒளியமைப்பும் புத்துணர்வைத் தருகின்றன. மிக மெதுவாக நகரும் காட்சிகளின் மூலம் அந்தந்த காட்சிகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறார்.

படத்தின் இசையும், ஒலிக் கோர்ப்பும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. சிறு சிறு ஓசைகளை கூட துல்லியமாக பதிவு செய்திருப்பதன் மூலம் அமானுஷ்யத்தை உணர்த்துகிறார்கள்.  பாணன் பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. 

ஹாரர் படம் என்பதற்காக திடுக்கிட வைக்கும் ஒலிகளோ, இசையோ இல்லாமல், இயல்பாக காட்சியோடு இணைந்திருக்கின்றன. படத்தின் கொண்டாடப்படப் வேண்டிய இன்னொரு அம்சம் கலை இயக்கமும், ஒப்பனையும். பழைய கால தரவாட்டு வீட்டை அதன் புழங்கு பொருள்களோடு, உருவாக்கி இருக்கிறார்கள்.  சின்னச் சின்ன பொருட்களில்கூட அவ்வளவு மெனக்கெடலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.  ‘பாதாள அறைகளும், மாடங்களும், நெல் குதிர்களும், மதுப் பானைகளும் கலை இயக்கம் என்ற ஒன்று நிகழ்ந்தது போலவே இல்லை’ என்ற நேர்த்தியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பு காட்சியோடும், ஒலியோடும், இசையோடும் இணைந்து ஒரு ரிதத்தை உருவாக்கி இருக்கிறது. ‘திடுக் திடுக்’ என்று ‘ஜம்ப் கட்’களை செய்து செயற்கையான திகிலை உருவாக்காமல், மொத்த திரைக் கதையின் நீட்சியாக அமானுஷ்யத்தை ஒரு அனுபவமாக நமக்குள் செலுத்துகிறது எடிட்டிங்.

படத்தில் பத்து பேர் நடித்திருந்தாலும், மூன்றே மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஒரு தொன்மம் சார்ந்த கதையை வரலாற்று பின்புலத்தில் திகில் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகுல். நடிகர் மம்மூட்டிக்கு இது ஒரு வாழ்நாள் சாதனைப் படம். மாபெரும் அனுபவத்தை தரும்  பிரமயுகம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

திரைவிமர்சனம்: அறம் தயாளன்
தொடர்புக்கு: +9198422 98600
நன்றி: அறம் இணைய இதழ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset