நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

4 மாநில தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது

புதுடெல்லி: 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி அறிவித்தது. 5 மாநிலங்களிலும் நவம்பர் 7 முதல் 30-ஆம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது. 

இதன்படி, சத்தீஸ்கரில் நவ.7, 17 ஆகிய தேதிகளிலும், மிசோரமில் நவ.7, மத்திய பிரதேசத்தில் நவ.17, ராஜஸ்தானில் நவ.25, தெலங்கானாவில் நவ.30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.
 
இந்த 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு, மலேசிய நேரப்படி காலை 10.30 தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இன்று மதியம் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிசோரமில் தள்ளிவைப்பு: மிசோரமில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு 78.4% வாக்குகள் பதிவானது.

இம்மாநிலத்தில், மற்ற 4 மாநிலங்களுடன் சேர்த்து டிச.3-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மிசோரமில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நிலையில், அவர்களின் புனித நாளான ஞாயிற்றுக்கிழமையில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரம் என்ஜிஓ ஒருங்கிணைப்புக் குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. 

மேலும் இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையை டிச.4-க்கு (நாளை) தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset