நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கனமழையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: 

தொடர் கனமழை எதிரொலியாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம், மயிலாடுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஆகிய இரண்டு தாலுக்காக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் மிக கனமழை எச்சரிக்கை நிலவுவதால் மழை மீட்பு, நிவாரணப் பணிகளுக்குத் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1913 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு: தொடர் மழை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

10 மாவட்டங்களில் இன்று கனமழை: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவ.16-ம் தேதி நிலவக்கூடும்.

இதுதவிர, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால், சென்னை மற்றும் புறநகர், டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தொடர் மழையால் இன்று 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset