
செய்திகள் சிந்தனைகள்
உணர்வு. உறுதி. உத்வேகம். மாற்றம்! - மௌலானா அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) - வெள்ளிச் சிந்தனை
நபிகளார்(ஸல்) இந்த உலகத்துக்கு வந்த நேரத்தில் இந்த வாழ்க்கை நதி எந்தத் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது? அப்போது உலகம் முழுவதும் இறைமறுப்பும் இணைவைப்பும் மேலோங்கி இருக்கவில்லையா?
கொடுமையும் அக்கிரமமும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கவில்லையா?
பிறப்பின் அடிப்படையிலும் வர்க்கத்தின் அடிப்படையிலும் குலம், கோத்திரங்களின் அடிப்படையிலும் மனிதர்கள் கூறு போடப்பட்டு மனித சமூகமே கறை படிந்து நிற்கவில்லையா?
மனித நடத்தையிலும் ஒழுக்கத்திலும் ஆபாசத்தின் ஆதிக்கம் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கவில்லையா? மனித சமூகங்களில் கடைந்தெடுத்த சுயநலமும் போட்டியும் பொறாமையும் மிகைத்திருக்கவில்லையா?
பொருளியல் களங்களை முதலாளிகள் வளைத்துப் போட்டிருக்கவில்லையா?
சட்டத்துறையும் நீதித்துறையும் சமநிலை தவறித் தடுமாறிக் கொண்டிருக்கவில்லையா?
என்றாலும் ஒரே ஒரு ஒற்றை மனிதர் அவற்றுக்கு எதிராக களம் இறங்குகின்றார். ஒட்டுமொத்த உலகத்துக்கும் அறைகூவல் விடுக்கின்றார்.
அந்த நேரத்தில் உலகத்தில் நடைமுறையில் இருந்த தவறான சிந்தனைகள், நடைமுறைகள் அனைத்தையும் முற்றாக ஒதுக்கித் தள்ளினார்.
ஓயாமல் ஒழியாமல் மக்களை சத்தியத்தின் பக்கம் அழைத்தார். அசத்தியத்துக்கு எதிராக ஜிஹாத் செய்தார்.
சில ஆண்டுகளுக்குள்ளாகவே மனித வாழ்வின் நதியின் போக்கையே மாற்றியமைத்துவிட்டார். காலத்தின் வர்ணத்தையே முற்றாக மாற்றி விட்டார்.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் உலகம் போய்க் கொண்டிருக்கின்ற திசையை எவராலும் மாற்றிவிட முடியாது என்பதல்ல. காலம் போகின்ற போக்குக்கு ஏற்ப தம்மைத்தாமே வளைத்துக்கொள்வதைத் தவிர வேறு போக்கிடம் இல்லை என்பதும் சரியல்ல.
நம்மால் எதுவுமே செய்ய இயலாத கையறு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்றோ சூழல்களின் நிர்ப்பந்தங்களால் கட்டுண்டு கிடக்கின்றோம் என்றோ அழுது புலம்பிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக நம்முடைய பலவீனங்களை உணர வேண்டும். அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் பலவீனமானவர்களுக்கு இந்த உலகத்தில் எந்தக் கொள்கையும் இருக்காது, எந்தக் கோட்பாடும் இருக்காது, எந்தச் சித்தாந்தமோ வாழ்க்கைநெறியோ இருக்காது என்பதை உணர்வீர்கள். வலிமை கொண்டு அடக்குபவர்களின் அழுத்தங்களுக்கெல்லாம் அவர்கள் வளைந்து கொடுப்பார்கள் என்பதையும் சக்திபெற்றவர்களுக்கு முன்பெல்லாம் சரணடைந்து கொண்டிருப்பார்கள் என்பதையும், மேலோங்கி ஆட்டம் போடுபவர்களின் இழுப்புக்கெல்லாம் இணங்கிப் போவார்கள் என்பதையும் உணர்வீர்கள்.
பலவீனமானவர்களால் எந்தவொரு கொள்கையையோ, கோட்பாட்டையோ, வாழ்க்கை நெறியையோ பேணி நடக்கவே இயலாமல் போகும் என்பதையும், ஒருவர் மற்றவர்களின் கொள்கைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டே போவாரெனில் அவருக்கென தனிக் கொள்கையோ, மதமோ, மார்க்கமோ எதுவுமே எஞ்சி இருக்காது என்பதையும் உணர்வீர்கள்.
இந்த உணர்வுதான் 'பலவீனங்களைவிட்டு மேலெழ வேண்டும்; போதாமைகளை வென்று பலம் பெற வேண்டும்' என்கிற உறுதியான எண்ணத்துக்கும் தீரத்துக்கும் வழிவகுக்கும். அந்த உறுதியும் தீரமும்தாம் வலிமைகளைப் பெருக்கிக் கொள்கின்ற இராஜபாட்டையின் பக்கம் உத்வேகத்துடன் உங்களை உந்திச் செலுத்தும்.
- மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am