நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

137 நாட்களுக்கு பின்னர் மீண்டும் மக்களவைக்குள் நுழைந்தார் ராகுல் காந்தி 

புதுடெல்லி: 

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் தகுதி இழப்பை மக்களவை செயலகம் இன்று (திங்கள்கிழமை) ரத்துசெய்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் மக்களவை எம்பி ஆகிறார். 

இதுகுறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி," நீதித்துறையின் உத்தரவுக்கு உட்பட்டு தகுதி நீக்கம் நிறுத்திவைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்துவிட்டதாக, குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதில், கடந்த மார்ச் 23ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவைப் பிரதிநிதித்துவச் சட்டப்படி மார்ச் 24-ம் தேதி மக்களவை செயலகம் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி இழப்பு செய்தது. 

இதை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, சஞ்சய் குமார் அமர்வு, "இந்த வழக்கில் விசாரணை நீதிமன்ற நீதிபதி அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துவிட்டார். 

ஒரு நாள் குறைவாக விதித்திருந்தாலும், எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு ஆகியிருக்க முடியாது. இந்த தகுதி இழப்பால் ஏற்பட்ட விளைவுகள் தனிநபர் உரிமையை மட்டுமின்றி, அவரதுதொகுதி மக்களையும் பாதித்துள்ளது. எனவே, 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்படுகிறது. 

அதேநேரம், பிரச்சார கூட்டத்தில் மனுதாரர் பேசியது சரியானது அல்ல. பொதுவாழ்வில் இருப்பவர் இதுபோல பேசக் கூடாது. மனுதாரர் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என அறிவித்தனர்.

ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைத்தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, அவரை மீண்டும் எம்பி-யாக அங்கீகரிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் திங்கள்கிழமை (ஆக.7) நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு இணங்க ராகுல் காந்தியின் தகுதி இழப்பு ரத்துசெய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பின் நகலை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலை தளத்தில் வெளியிட்டு, வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மக்களவையில் நடக்க இருக்கிற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

ராகுல் காந்தி 137 நாட்களுக்கு பின்னர் மீண்டும் மக்களவைக்குள் நுழைந்தார். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset