நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜகவுக்கு எதிராக 17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன

பாட்னா: 

இந்தியாவில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ், திமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட 17 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தன.

பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் அவர்கள் கூடி இதற்கான முடிவை அறிவித்தனர்.

ஹிமாசல பிரதேச மாநிலம், சிம்லாவில் அடுத்த மாதம் அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் அதில் பொதுவான செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியாக திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது.

மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்ற ஒருங்கிணைந்து செயலாற்றுவோம் என்றார்.

பிற தலைவர்கள் பேசியதாவது:

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி:

எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நெகிழ்வுத்தன்மையுடன் பணியாற்ற தீர்மானித்துள்ளோம்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி:

சர்வாதிகார பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எதிர்காலத்தில் தேர்தலே நடைபெறாது. எனவே, நாங்கள் ஒருங்கிணைந்து, பாஜகவை எதிர்கொள்வோம். நாட்டின் வரலாறு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்:

ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்துக்கு கிடைத்ததைப்போல் எங்களது ஒற்றுமை அணிக்கும் மக்களின் ஆசி கிடைக்கும்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்:

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதே மக்களின் விருப்பம். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். என்னால் பிரதமர் மோடியை எதிர்கொள்ள முடியும்.
சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்: நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என்ற செய்தியை, பாட்னா கூட்டம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்:

இன்றைய தொடக்கம், தேச நலனுக்கான மைல்கல்லாக அமையும். நேர்மறை சிந்தனையுடன் அனைத்து தலைவர்களும் முன்னோக்கி செயலாற்ற வேண்டும்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா:

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 17 கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது, ஆட்சி அதிகாரத்துக்காக அல்ல; கொள்கைகளுக்காக.

மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி:

மதச்சார்பற்ற ஜனநாயகம் எனும் நமது நாட்டின் பண்பை மாற்ற பாஜக விரும்புகிறது. மதச்சார்பற்ற ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா:

பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி, நாட்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு பேரழிவையும் தீங்கையும் விளைவித்துள்ளது.

பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி:

மகாத்மா காந்தியின் இந்தியா, கோட்ஸை இந்தியாவாக மாற அனுமதிக்க முடியாது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset