செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருமண மண்டபங்களில் மது பரிமாறும் சட்டத்திருத்தம் நீக்கம்: எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பால் பணிந்தது தமிழ்நாடு அரசு
சென்னை:
வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் அரசிதழில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளே இதற்கு.கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு பணிந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுடெல்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு, தமிழ்நாட்டிலும் வழங்கிட 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் (Commercial Complexes) உள்ள மாநாட்டு மையங்கள் (Convention centres), கூட்ட அரங்குகள் (Conference Halls) ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள், சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல், பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.
அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கப்படுவதாகவும், அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் எனவும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் வெளியானது.
மதுபானம் பரிமாற ஆண்டு மற்றும் நாள் அடிப்படையிலான அனுமதிக்கான கட்டணமும் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் தெரிவித்துள்ளது. பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி என இதற்கான அனுமதி கட்டணங்கள் மாறுபடுகின்றன. நாள் ஒன்றுக்கு நகராட்சி என்றால் ரூ.11,000. பேரூராட்சி என்றால் ரூ.7,500. மற்ற இடங்கள் என்றால் ரூ.5,000 என அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 15, 2025, 4:12 pm
அமித்ஷா போன்றவர்களுக்கு நம்மீது எரிச்சல் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?: தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி
December 14, 2025, 7:17 am
UNITED ECONOMIC FORUM - ஐக்கிய பொருளாதார பேரவையின் வர்த்தக மாநாடு
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 12, 2025, 3:55 pm
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
December 11, 2025, 9:38 am
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
