
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ் வாழ வரம் தந்தவர் நம் தமிழவேள் கோ. சாரங்கபாணி
இன்றிருக்கும் மலாயாப்பல் கலைக்கழகத் திற்கே
எத்தனைபேர் விரும்பிச்செல் கின்றார்கள் ; எண்ணில்
குன்றிவிடும் மகிழ்வெல்லாம் எனச்சொல்லும் வண்ணம்
குறைவான மாணவர்தாம் தமிழ்கற்கின் றார்கள்
என்றமனக் குமுறலிலே தமிழறிந்த மூத்தோர்
இருப்பதனைக் கேட்டாலே நெஞ்சில்முள் பாயும் !
அன்றிருந்த தமிழவேள்நம் சாரங்க பாணி
இன்றிருப்பின் இக்கணமே இறந்திருப்பார் ; உண்மை !
ஏனென்றா கேட்கின்றீர் சொல்கின்றேன் கேளீர் !
இன்றிருக்கும் மலாயாப்பல் கலைக்கழகம் அன்று
தான் சிங்கப் பூரினிலே இருந்ததொரு நாளில்
தமிழுக்கு மாற்றாக சமற்கிருத மொழியைப்
கூன்மனத்தால் பரிந்துரைத்தார் வையாபுரிப் பிள்ளை !
கொடுஞ்செய்தி இதைக்கேட்ட சாரங்க பாணி
தான்கொதித்தார் ; தமிழ்தானே பயிற்றுமொழி யாகத்
தனிப்பெருமை பெறவேண்டும் என்றுரைத்தார் அந்நாள் !
சொல்லிவிட்டுப் படுத்துறங்கும் சோம்பேறி போன்று
சும்மாவென் றிருக்காமல் சாரங்க பாணி
சொல்லியடித் திட்டஅர்ச்சு னனைப்போல தமிழ்வேள்
சொற்றமிழால் தமிழ்முரசில் செய்திசொன்ன தாலே
சொல்லாமல் பெய்கின்ற மழைபோலோர் நாளுள்
சொடுக்கிட்டுத் திரட்டிவிட்ட இருபத்தா யிரத்து
வெள்ளிகளைத் தந்ததினால் சட்டென்றே அன்னார்
பல்கலையில் தமிழும்,தமிழ் நூலகமும் கண்டார் !
ஒருவேளை சாரங்க பாணியன்று அந்த
இருபத்தா யிரவெள்ளி திரட்டியிரா விட்டால்
ஒருக்காலும் மலாயாப்பல் கலையினிலே இந்நாள்
ஒண்டமிழும் பயிற்றுமொழி ஆகியிருக் காதே !
ஒருமொழியாம் பேச்சுவழக் கிழந்தமொழி யதுவாம்
மறுகேள்வி இல்லாமல் சமற்கிருதம் இந்நாள்
உருவெடுத்தே பல்கலையில் பயிற்றுமொழி யாக
உட்கார்ந்தே போயிருக்கும் ஐயய்யோ ஐயோ !
இந்தவர லாற்றினையே தெரிந்துள்ள தமிழர்
எவருக்கும் மலாயாப்பல் கலைக்கழகம் தன்னில்
எந்தவழி கண்டேனும் தமிழ்நிலைக்கச் செய்ய
ஏராள மாணவர்கள் தமிழ்கற்க வைப்பார் !
அந்தவரம் சாரங்க பாணியவர் அன்று
தந்தவரம் தமிழ்வரத்தைத் தமிழர்களே அழிக்கும்
சிந்தனைக்குத் தீவைத்துப் பல்கலையில் தமிழும்
சிறப்புடனே கோலோச்சத் தமிழ்கற்பீர் தமிழீர் !
- பாதாசன்
(அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் 120 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு இயற்றப்பட்ட கவிதை இது )
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
May 5, 2025, 8:36 am