நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மனு கொடுக்கும்போது தடுமாறி கீழே விழுந்த முதியவர்: பதறிய முதல்வர் ஸ்டாலின்

மதுரை: 

மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சாலைகளில் பொதுமக்கள் மனுக்களுடன் காத்திருந்ததை பார்த்து காரை விட்டு கீழே இறங்கி மனுக்களை பெற்றார். 

அப்போது பெரியவர் ஒருவர் மனு கொடுக்க முயன்றபோது தடுமாறி கீழே விழுந்ததைப் பார்த்து முதல்வர் பதறினார்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மதுரை வந்தார். 

நேற்று முன்தினம் மதுரையில் காவல்துறையினர், தொழில்துறையினர், விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

மாலை கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இரவு அவர் அழகர் கோவில் சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

தொடர்ந்து நேற்று காலை மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 

இந்த கூட்டத்ததில் பங்கேற்பதற்காக நேற்று காலை 9 மணியளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். முதல்வர் வருவதால் இந்த சாலையில் அவரது வருகைக்கு 10 நிமிடங்களுக்கு முன் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் வந்த சாலையில் பொதுமக்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர். 

அப்படி ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே முதல்வரை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருந்தனர். 

அவர்களை போலீஸார் ஓரமாக நிறுத்திவிட்டு முதல்வரை பாதுகாப்பாக ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுப்பும் பணிகளில் மும்முரமாக இருந்தனர். காரில் வந்த முதல்வர் நுழைவு வாயில் அருகே நின்ற பொதுமக்களை பார்த்ததும், அவர்கள் அருகே காரை போக சொல்லி டிரைவரிடம் கூறினார்.

காரில் இருந்தபடியே அவர்கள் அருகே சென்று அவர்கள் வழங்கிய மனுக்களை பெற்றார். அப்போது 80 வயது முதியவர் ஒருவர் ஒரு மனுவை முதல்வரிடம் கொடுத்தார். அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்தார். 

உடனே பதறிய முதல்வர், பார்த்து பார்த்து என்று கூறியபடி போலீஸாரை பார்த்து அந்த முதியவரை தூக்கிவிட சொன்னார். பிறகு அருகில் நின்ற பொதுமக்களே முதியவரை தூக்கிவிட்டு மீண்டும் முதல்வரிடம் மனுவை கொடுக்க வைத்தனர்.

அதுபோல், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தை முடித்துவிட்ட வந்தபோதும் முதல்வரை பார்க்க ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ஏராளமான மக்கள் மனுக்களுடன் குவிந்தனர். 

உடனே காரை விட்டு கீழே இறங்கிய முதல்வர், அவர்கள் அருகே சென்று ஒவ்வொரிடமும் மனுக்களை பெற்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கினார். 

பொதுமக்களை கண்டதும் காரை விட்டு இறங்கிவந்து மனுக்களை பெற்ற சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் முதல்வருக்கு நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தது.

- Y. ஆன்டனி செல்வராஜ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset