நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று..! - வெள்ளிச் சிந்தனை

அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்: அன்பு, நபிகளார் (ஸல்) கூறினார்கள்:

‘எவர் தம்முடைய நாவைப் பூட்டி வைத்தாரோ அல்லாஹ் அவருடைய குறைகள் மீது திரை வைத்து மூடிவிடுகின்றான். 

எவர் தம்முடையக் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாரோ அல்லாஹ் மறுமைநாளில் அவரிடமிருந்துத் தன்னுடைய வேதனையைத் தடுத்துக்கொள்வான். 

எவர் இறைவனிடம் தம்முடையக் குற்றங்கள் குறித்து மனம் வருந்தி முறையிடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய முறையீட்டை ஏற்றுக்கொள்கின்றான்.’
நூல் : பைஹகி

இறைவன் அடியானிடம் எப்படி நடந்துகொள்வான் என்பது அந்த அடியான் தன் அதிபதியுடன் எப்படி நடந்து கொள்வான் என்பதையும், தன் அதிபதியின் அடியார்களுடன் எப்படிப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்கின்றான் என்பதையும் பொறுத்ததாகும். 

ஒரு மனிதர் மற்றவர்களின் குற்றங்குறைகளை அவர்களுக்குப் பின்னால் சொல்வதுமில்லை; அவர்களை இழிவுபடுத்தி அவர்களின் மனம் புண்படச் செய்வதுமில்லை எனில், அந்த மனிதரின் குற்றங்குறைகளை இறைவனே திரையிட்டு மறைக்கின்றான். இல்லையேல் இறைவன் ஒருவரின் குற்றங்குறைகளை அம்பலப்படுத்த முற்படுவானேயானால், ஒட்டுமொத்த படைப்புகளுக்கு மத்தியிலும் அந்த மனிதர் கேவலப்பட்டு, அவமானப்பட்டு நிற்பார். 

இதே போன்று ஒருவர் சகித்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு சீண்டப்பட்டாலும் மக்கள் மீது தம்முடைய கோபத்தை வெளிப்படுத்துவதில்லை; அதற்கு மாறாக தனக்குள் பொங்கி வருகின்ற *கோபத்தை இறைவனின் உவப்பைப் பெறுவதற்காக விழுங்கிக்கொள்கின்றார்* எனில், இறைவனும் அவருடன் அவ்வாறே நடந்துகொள்கின்றான். அந்த மனிதரைத் தனது கோபத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் பாதுகாக்கின்றான். 

இதே போன்று ஒருவர் வாய்மையான உள்ளத்துடன் பாவமன்னிப்புக் கோர, தான் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுமாறு இறைவனிடம் முறையிட  இறைவன் அவரை மன்னிக்காமல் விட்டுவிடுவதற்கான சாத்தியமே இல்லை.

பாவமன்னிப்புக்கான முறையீடுகளை இறைவனை விட அதிகமாக ஏற்றுக்கொள்பவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது.

ஒரே ஒரு நிபந்தனை என்ன வெனில் அந்த முறையீடும் பாவமன்னிப்புக்கான பிரார்த்தனையும் சடங்குத்தனமாகச் செய்யப்பட்டிருக்கக் கூடாது. அதற்கு மாறாக உளத்தூய்மையுடன் மனம் வருந்தி இறைவனிடம் *பிழைபொறுத்தலுக்காக முறையிட்டிருக்க வேண்டும்.*

- லுத்ஃபுல்லாஹ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset