நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டதால் மலாக்காவில் பிரச்சாரத்தை ரத்து செய்தார் ரபிசி

கோலாலம்பூர்:

பெருநிறுவன மாபியா, கெஅடிலான் உதவித் தலைவர் ஆர். ரமணன் மீதான தனது குற்றச்சாட்டுகள் குறித்து போலிசாரிடம் வாக்குமூலம் அளிப்பதற்காக ரபிசி ரம்லி நாளை நடைபெறவிருந்த தனது மலாக்கா மாநிலத் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குற்றவியல் அவதூறு, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அறிக்கைகள் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 500, 505 பிரிவுகளின் கீழ் நடைபெறும் விசாரணைக்கு உதவுவதற்காக, நாளை காலை 10 மணிக்கு புக்கிட் அமானில் ஆஜராகுமாறு தனக்கு ஓர் அறிவிப்பு வந்ததாக முன்னாள் பொருளாதார அமைச்சர் தெரிவித்தார்.

விசாரணை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டபடி தங்கள் கடமைகளைச் செய்து வருவதை நான் மதிக்கிறேன்.

எனவே, நான் கோலாலம்பூருக்குத் திரும்பி, நாளை பிற்பகல் மலாக்காவில் நடைபெறவிருந்த எனது பிரச்சார நிகழ்வை ரத்துசெய்து, ஒரு வாக்குமூலம் அளிக்க ஆஜராவேன் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு செலயாங்கில் அவர் ஆற்றிய உரை தொடர்பாக அக்டோபர் 22 தேதியிட்ட போலிஸ் அறிக்கையைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

டத்தோஸ்ரீ ரமணனுக்கு 9.5 மில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது, பெருநிறுவன மாஃபியா தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அந்த போலிஸ் அறிவிப்பு குறிப்பிட்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset