நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கப்பல் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை மூடுவதற்கு எதிரான மனு: அக்டோபர் 23இல் உயர்நீதிமன்றத் தீர்ப்பு

கோலாலம்பூர்: 

கப்பல் நிறுவனமான மேரிடைம் நெட்வோர்க் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு நீண்டகால வங்கிக் கணக்குகளை ஆர்எச்பி வங்கி மூடுவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலத் தடை மனு மீதான தீர்ப்பு அக்டோபர் 23ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

மேரிடைம் நெர்வோர்க் நிறுவனம் தொடர்ந்துள்ள முழு வழக்கு முடிவுக்கு வரும் வரை, சம்பந்தப்பட்ட இரு கணக்குகளையும் மூடுவதிலிருந்து ஆர்எச்பி வங்கிக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் வழக்கறிஞர் பி. தனேஸ்வரன், வங்கியின் வழக்கறிஞர் கான் கோங் அய்க் ஆகியோரின் வாதங்களைக் கேட்ட நீதித்துறை ஆணையர் எலிசபெட் பாயா வான், தீர்ப்புக்கான தேதியை நிர்ணயித்தார்.

மேரிடைம் நெட்வோர்க் நிறுவனம் விதிமுறைகள் அல்லது தேவைகளை மீறியதாக ஆர்எச்பி வங்கி நிரூபிக்கத் தவறிவிட்டதாக தனேஸ்வரன் வாதிட்டார். 

வங்கிக்கு மேரிடைம் நிறுவனத்தின் நிறுவனத்தின் மீது நம்பிக்கை சார்ந்த கடமையும் கவனக் கடமையும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை மறுத்த வங்கித் தரப்பு வழக்கறிஞர், வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான உறவு கடனாளி மற்றும் கடன் வழங்குநருக்கு இடையிலான உறவாக மட்டுமே இருப்பதால், நம்பிக்கை சார்ந்த உறவோ கவனக் கடமையோ ஏற்படாது என வாதிட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், நிறுவனத்தின் முழுமையான தடையுத்தரவு மனு விசாரிக்கப்படும் வரை இரு கணக்குகளையும் மூடக்கூடாது என RHB வங்கிக்கு உயர்நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்திருந்தது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, மேரிடைம் நிறுவனம் 2005-ஆம் ஆண்டு முதல் ஆர்எச்பி வங்கியில் பல நாணயக் கணக்கு, நடப்புக் கணக்கை வைத்துள்ளது.

2025 அக்டோபர் 1ஆம் தேதியிட்ட கணக்கு முடிப்பு அறிவிப்பை அந்நிறுவனம் அக்டோபர் 6ஆம் தேதி பெற்றது. வங்கியின் உள்கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டதாகக் கூறி, 14 நாட்களுக்குள் இரு கணக்குகளையும் மூடி, தொடர்புடைய அனைத்து சேவைகளையும் நிறுத்தவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், எந்தக் கொள்கை அல்லது வழிகாட்டுதல் மீறப்பட்டது என்பதை RHB வங்கி தெளிவாகக் குறிப்பிடவில்லை என மேரிடைம் நெட்வோர்க் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்குக்கு முந்தைய ஆவண வெளிப்படுத்தல் மனுவை உயர்நீதிமன்றம் 2025 ஜூலை 2-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. 

அதனை எதிர்த்து நிறுவனம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நிறுவனத்தின் மேல்முறையீட்டை அனுமதித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளுக்கான ஆர்எச்பி வங்கியின் குறைந்தபட்ச உரிய ஆய்வு வழிகாட்டுதல்களை 45 நாட்களுக்குள் நிறுவனத்திடம் வழங்குமாறு உத்தரவிட்டது.

வங்கியின் தெளிவற்ற குற்றச்சாட்டுகள் தங்களை நிச்சயமற்ற நிலையில் தள்ளியதுடன், தற்காப்பு விளக்கம் அளிக்கும் வாய்ப்பையும் மறுத்ததாக மேரிடைம் நெட்வோர்க் குற்றஞ்சாட்டியுள்ளது.

வங்கியின் இந்த நடவடிக்கை தமது உரிமைகளைப் பாதிக்கும் அதிகாரத் துஷ்பிரயோகம் என்றும், சட்டபூர்வமான வங்கி நலன்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக நிறுவனத்தை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றும் அந்த நிறுவனம் தனது வழக்கில் கூறியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset