நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன மகள் விவகாரத்தில் முன்னாள் ஐஜிபி, அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கில் இந்திரா காந்தி செய்த மேல்முறையீடு தோல்வி

புத்ராஜெயா:

2008இல் தனது முன்னாள் கணவரைக் கைது செய்யத் தவறியதாகவும், அவர் கடத்திச் சென்ற மகளை மீட்டுத் தரத் தவறியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் தேசிய போலிஸ் தலைவரையும் அரசையும் பொறுப்பேற்க வைக்கும் முயற்சியில் இந்திரா காந்தி இன்று மீண்டும் தோல்வியடைந்தார்.

இந்திராவின் வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக அவர் செய்த மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமனதாக தள்ளுபடி செய்தது.

ஜைனி மஸ்லான், ஃபைசா ஜமாலுதீன், ராட்ஸி அப்துல் ஹமீத் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, போலிஸ் துறையின் நடவடிக்கைகளுக்கும், அவர் கூறிய இழப்பு மற்றும் துன்பத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு இருந்ததை இந்திரா நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கான முக்கிய காரணங்களை முன்வைத்த ஃபைசா, இஸ்லாமிற்கு மதம் மாறி ரிதுவான் அப்துல்லா என்ற பெயரைப் பயன்படுத்திய அவரது முன்னாள் கணவர் கே. பத்மநாதனின் செயல்களாலேயே இந்திராவின் வலியும் துன்பமும் ஏற்பட்டது என்பதை ஆதாரங்கள் காட்டுவதாகக் கூறினார்.

தற்போது 18 வயதாகும் தனது மகள் பிரசன்னா திக்ஸாவைக் கண்டுபிடித்து மீட்கும் முயற்சிகளில் போலிஸ் துறை விடாமுயற்சியுடன் செயல்படவில்லை என்பதை இந்திரா நிரூபிக்கத் தவறிவிட்டார் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset