நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேசியா நிஷா மரண வழக்கு; விசாரணையைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

14 வயது மாணவி கேசியா நிஷாவின் மரணம் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, மாணவர்களிடையே பகடிவதை, இனவெறி வெறுப்பு போன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மேலும் விரிவான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சினார் காசே டைனமிக் சமூக நல அமைப்பின் தலைவர் டத்தோ என். சிவக்குமார் இதனை கூறினார்.

டானாவ் கோத்தா இடைநிலைப்பள்ளியின் இரண்டாம் படிவ மாணவி சம்பந்தப்பட்ட இந்தத் துயரச் சம்பவம், தற்போதுள்ள அமைப்பானது அபாயங்களைக் கண்டறிந்து, மன அழுத்தம் அல்லது துன்புறுத்தலை எதிர்கொள்ளும் மாணவர்களைப் பாதுகாப்பதில் எந்த அளவிற்குத் திறன் கொண்டுள்ளது என்பது குறித்த பெரிய கேள்விகளை எழுப்புகிறது என்று அவர் கூறினார்.

நேற்று தனது வீட்டில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்ட கேசியா உயிரிழந்தார். இனவெறி உள்ளிட்ட பகடிவதை கூறுகள் குறித்த செய்திகளும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இருப்பினும், அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் ஒரு விசாரணையின் மூலம் கண்டறியப்பட வேண்டும்.

பகடிவதை தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் அவசர முடிவுக்குக் கொண்டுவரக்கூடாது, மாறாக அவற்றுக்குத் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஏனெனில், ஒரு குழந்தையின் உணர்ச்சி மற்றும் சமூக உருவாக்கத்தில் பள்ளியே முக்கியச் சூழலாக விளங்குகிறது.

கல்வியமைச்சு மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட அந்த ஒரு வழக்கில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஆபத்தில் உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிதல், புகாரளித்தல் மற்றும் தலையிடுதல் ஆகிய வழிமுறைகளில் ஏதேனும் பலவீனங்கள் உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset