நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு ஜொகூர் மந்திரி புசார் வரலாற்றுப்பூர்வ வருகை: 200,000 ரிங்கிட் நிதியுதவி

ஜொகூர்பாரு:

ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு வரலாற்றுப்பூர்வ வருகையை மேற்கொண்ட ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி 200,000 ரிங்கிட் நிதியுதவியை அறிவித்தார்.

பங்சா ஜொகூர் என்ற கொள்கையின்கீழ், இனம் பாராமல் அனைத்து மக்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு உணர்வின் மூலமே ஜொகூரின் வளர்ச்சியை அடைய முடியும்.

2030ஆம் ஆண்டுக்குள் ஜொகூரை ஒரு வளர்ந்த மாநிலமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வை தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் பொருளாதார வளர்ச்சி, தரமான வேலை வாய்ப்புகளை வழங்குதல், ஒட்டுமொத்த பங்சா ஜோகூருக்கும் பயனளிக்கும் விரிவான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

ஜொகூர் குழந்தைகள் மற்ற மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ குடிபெயர வேண்டிய அவசியம் இல்லாமல், தங்கள் சொந்த மாநிலத்திலேயே அதிக வருமானம் தரும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.

இது தொடர்பாக தரமான கல்வி, மனித மூலதன மேம்பாடு, பரந்த பொருளாதார வாய்ப்புகள் மூலம் இளைய தலைமுறைக்கு சிறந்த சூழலை வழங்குவதற்காக பல்வேறு முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்று, ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு வருகைத் தந்த போது அவர் இவ்வாறு கூறினார்.

இந்தப் பள்ளி நிறுவப்பட்டதிலிருந்து ஒரு ஜொகூர் மந்திரி புசார் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இது என்பதால், இந்தப் பயணம் ஒரு வரலாற்றுச் சாதனையையும் படைத்தது.

இதன் மூலம் ஜொகூரில் உள்ள அனைத்து கல்வித் துறைகளின் வளர்ச்சியையும் வலுப்படுத்துவதில் மாநில அரசின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.

இப்பள்ளிக்குப் பெருமை சேர்த்த இரண்டு முன்னாள் மாணவர்களின் வெற்றியையும் மந்திரிபுசார் பகிர்ந்து கொண்டார்.

அதில் ஒருவர் ஏர் ஆசியா விமானி ஆவார். இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர ஜொகூர் இளைஞர் கல்வி உதவித் தொகை பெற்றவர் ஆவர்.

வாய்ப்பு வழங்கப்பட்டு கடினமாக உழைத்தால், ஜொகூர் குழந்தைகள் சர்வதேச அளவில் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு அவர்களின் வெற்றியே சான்று என அவர் கூறினார்.

ஜாலான் யஹ்யா அவால் பள்ளியின் வசதியை மேம்படுத்துவதற்காக ஜொகூர் மாநில அரசு 200,000 ரிங்கிட்  சிறப்பு ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி புசார் அறிவித்தார்.

இருப்பினும், அப் பள்ளியின் அசல் கோரிக்கை 107,000 ரிங்கிட் மட்டுமே ஆகும்.

பள்ளியின் நிலையை நேரில் ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், கவனம் செலுத்தப்பட வேண்டிய பல தேவைகள் அங்கு இருப்பதைக் கண்டறிந்ததாகவும் அவர் கூறினார்.

எனவே, மேம்பாட்டுப் பணிகளை மேலும் விரிவாக மேற்கொள்வதற்காக, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு, பள்ளி மண்டபம், மூடப்பட்ட நடைபாதைகள், குளிரூட்டிகள், துருப்பிடித்த படிக்கட்டுகள், மின் சுவிட்ச் அமைப்புகள், நீர் இறைப்பிகள், வேலி அமைப்புகள் இந்த ஆய்வின்போது கண்டறியப்பட்ட பல வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும்.

பள்ளியில் பயிலும் அனைவருக்கும் மிகவும் வசதியான, பாதுகாப்பான, கற்றலுக்கு உகந்த சூழலை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி ஒதுக்கீட்டை, பள்ளியும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மந்திரி புசார் வருகையின் போது கெமெலா சட்டமன்ற உறுப்பினரும், ஜொகூர் மஇகா  தலைவருமான கே. ரவீன் குமார், கஹாங் சட்டமன்ற உறுப்பினரும் துணை ஆட்சிக் குழு உறுப்பினருமான ருகேந்திரன், ஜொகூர் மாநில கல்வித் துறை அதிகாரி ரவீந்திரன், பள்ளி வாரியக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். கிருஷ்ணன், தலைமையாசிரியர் ப. குணாளன் உட்பட பலர் உடனருந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset