நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேம்பாட்டுப் பணிகளைத் தொடர நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் 'பக்கத்தான்' கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்: அன்வார் வேண்டுகோள்

செரம்பான்: 

மக்களின் நலனுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்ய, 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் 'பக்கத்தான் ஹராப்பான்' (PH) கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

'பக்கத்தான் ஹராப்பான்' கூட்டணியின் தலைவருமான அன்வார், இன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், மாநில, மத்திய அரசுகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு பல மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

"மாநில முதலமைச்சர் (மெந்திரி பெசார்) டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் — அல்லது 'டோக் மின்' (Tok Min) — 2018 முதல் நேர்மை, பணிவு, வலுவான பொறுப்புணர்வுடன் நெகிரி செம்பிலானை இறையருளால் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

"மிகவும் பணிவுடன், 'டோக் மின்' தலைமையிலான 'ஹராப்பான்' கூட்டணி மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்குமாறு நெகிரி செம்பிலான் மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 

நாம் இணைந்து கட்டியெழுப்பிய முன்னேற்றம் பாதியிலேயே நின்றுவிட அனுமதிக்காதீர்கள்," என்று அவர் கூறினார்.

"இறைவன் நாடினால், நெகிரி செம்பிலானுக்கு மிகவும் செழிப்பான, முன்னேற்றகரமான எதிர்காலத்தை உருவாக்க, 'ஹராப்பான்' கூட்டணி இந்த நம்பிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கும்," என்று அவர் கூறினார்.

மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமையன்றும், அதனைத் தொடர்ந்து முன்கூட்டியே வாக்களித்தல் ஜூலை 28-அன்றும், வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1-அன்றும் நடைபெறும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset