செய்திகள் கலைகள்
இசைப்பேரரசி எஸ்.ஜானகி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
கடந்த 2013இல் தனக்கு கொடுப்பதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்த பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்த எஸ். ஜானகி, இந்த விருது தனது 55ஆண்டுகால இசை அனுபவத்துக்கு மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது ௭ன்று கூறி வாங்க மறுத்தார்...
மைசூர்:
‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் இசைப்பேரரசி என்றும் வர்ணிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக, நேற்றிரவு 7.30 மணியளவில் மைசூரில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை மைசூரில் கர்நாடக அரசு மரியாதையுடன் நடந்தது.
கடந்த 1938ல் ஆந்திராவிலுள்ள குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா என்ற ஊரில், தெலுங்கு பிராமண குடும்பத்தை சேர்ந்த ராமமூர்த்தி, சத்தியவதி தம்பதியின் மகளாக பிறந்த எஸ்.ஜானகி, சிறுவயதிலேயே பாட தொடங்கிவிட்டார்.
நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றார். வி.சந்திரசேகர் நடத்திய மேடை நாடக இடைவேளைகளில் எஸ்.ஜானகி முதல்முறையாக பாடினார். 1956ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டு போட்டியில் பங்கேற்று 2ஆவது பரிசு பெற்ற அவர், பிறகு சென்னைக்கு வந்தார்.
ஏவிஎம் நிறுனத்தில் 1957இல் வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்தில், ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ’ என்ற பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார் எஸ்.ஜானகி.
முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களை பாடி முடித்த எஸ்.ஜானகி, 1957இல் இருந்து தமிழ் மொழியில் பாட தொடங்கினார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜப்பான், ஜெர்மன், படுகா, பஞ்சாபி உள்பட இன்னும் சில மொழிகளிலும் அவர் பாடியிருக்கிறார்.
17 மொழிகளுக்கும் மேல் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்ற அவர், இது ஒரு பெரிய சாதனை இல்லை என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார். கடந்த 1992ல் இலங்கையில் நடந்த ஒரு விழாவில் அவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பல்வேறு மொழிகளில் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் எஸ்.ஜானகி, நிறைய பாடல்களை தானே எழுதி இசை அமைத்து பாடியுள்ளார். மேலும், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை 4 முறை பெற்றுள்ளார்.
கடந்த 2014ல் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில், நடிகர் தனுஷுடன் இணைந்து, ‘அம்மா அம்மா’ ௭ன்ற பாடலை பாடிய எஸ்.ஜானகி, தொடர்ந்து ‘பேபி’ என்ற படத்தில் பாடினார்.
கடந்த 1986ல் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது, கடந்த 2002ல் கேரள அரசு வழங்கிய சிறப்பு விருது, 4 முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ள எஸ்.ஜானகி, பத்மபூஷண் விருது வாங்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, கடந்த 2013இல் தனக்கு கொடுப்பதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்த பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்த அவர், இந்த விருது தனது 55 ஆண்டு கால அனுபவத்துக்கு மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது ௭ன்று சொன்னார். அவரது கருத்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா திரைப்படங்களில் பாடவில்லை என்றாலும், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். அவரும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனால் எஸ்.ஜானகி மிகவும் கவலையுடன் காணப்பட்டார். இந்நிலையில், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக, நேற்றிரவு 7.30 மணியளவில் மைசூரில் காலமானார்.
மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மைசூரில் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மெல்லிசை ராணி எஸ்.ஜானகியின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும். கர்நாடக அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்க அமைச்சர் டாக்டர் யதீந்திர சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். தனது அற்புதமான குரலால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற அந்த மாபெரும் பாடகிக்கு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. மைசூரிலுள்ள எச்.டி.கோட்டை சாலையில் அமைந்துள்ள கனியனஹுண்டியில் இருக்கும் நவீன் பண்ணை இல்லத்தில், எஸ்.ஜானகியின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடந்தது. முன்னதாக, அவரது உடல் காலை 8 மணி முதல் மைசூர் மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவற்காக வைக்கப்பட்டு இருந்தது.
எஸ்.ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் விஜய், ‘இந்திய திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால், பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரது மறைவு இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக்கலைஞர்கள், உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
