நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

11 உயிர்களைக் காப்பாற்ற நங்கூரக் கயிற்றை வெட்டி உயிர்நீத்த மீனவர்

கோலா நெருஸ்: 

திரெங்கானு கடற்பரப்பில் கணவாய் பிடிக்கச் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கிய சோகச் சம்பவத்தில், 11 பேரின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் நங்கூரக் கயிற்றை வெட்டிய உள்ளூர் மீனவர் ஒருவர் மரணம் அடைந்தார்.

உயிரிழந்தவர் அஹ்ம்மத் நசாருடின் முஹம்மத் ஜலில் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கம்போங் பாட்டின் பகுதியைச் சேர்ந்த அவர், மீனவராக பணியாற்றி வந்தார்.

படகில் மொத்தம் 12 பேர் கணவாய் பிடிக்கச் சென்றிருந்தனர். மாலை 5.30 மணியளவில் பயணத்தைத் தொடங்கிய அவர்கள், இரவு 8.40 மணியளவில் நடுக்கடலில் இருந்தபோது கடல் அலைகள் காரணமாக படகின் இயந்திர அறைக்குள் தண்ணீர் வேகமாக புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை மோசமடைந்ததை உணர்ந்த அஹ்ம்மத் நசாருடின், அருகிலிருந்த படகுகளின் உதவியை நாடுவதற்காக படகை இயக்கும் வகையில் நங்கூரக் கயிற்றை உடனடியாக வெட்டினார். ஆனால், சுமார் 15 நிமிடங்களில் படகு முழுமையாக மூழ்கியது.

இதையடுத்து, படகின் தலைவர் சுமார் 1.8 கிலோமீட்டர் தூரம் நீந்திச் சென்று அவ்வழியாக வந்த மற்றொரு படகின் உதவியைப் பெற்றார். பின்னர் அந்தப் படகின் மூலம் கடலில் மிதந்துகொண்டிருந்த 12 பேரும் மீட்கப்பட்டனர்.

எனினும், அஹ்ம்மத் நசாருடின் மீட்கப்பட்டபோது மயக்க நிலையில் இருந்தார். கரைக்குக் கொண்டு வரப்பட்ட அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், அவரது உடலில் குற்றச்செயல் தொடர்பான எந்த அறிகுறியும் இல்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தான் சைனல் அபிடின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset