நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் பத்திரிகையாளர்கள், ஊடகப் பணியாளர்களின் பங்கிற்கு அன்வார் பாராட்டு

புத்ராஜெயா:

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை (HAWANA) முன்னிட்டு, மக்களின் குரலாகவும், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய தூண்களில் ஒன்றாகவும் செயல்படும் பத்திரிகையாளர்கள், ஊடகப் பணியாளர்களின் பங்கிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பாராட்டு தெரிவித்தார்.

தனது முகநூல் பதிவில், செய்திகளை வழங்குவது மட்டுமல்ல, நேர்மை, நம்பகத்தன்மை, துணிச்சல், பொறுப்புணர்வுடன் உண்மையை நிலைநிறுத்தும் ஒரு பெரும் பொறுப்பையும் ஊடகங்கள் சுமப்பதாக அவர் கூறினார்.

"தகவல் வெள்ளம், எல்லையற்ற செய்திப் பரப்புதலின் சகாப்தத்தில், பொறுப்பான அறிக்கையிடல் மிகவும் முக்கியமானது.

உண்மைகள் துல்லியமாகவும், நெறிமுறையாகவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்காமலும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகும்" என்று அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.

எனவே, பத்திரிகையாளர்களும், ஊடகப் பணியாளர்களும் மக்களின் குரலாகவும், அதிகாரத்திற்குச் சமநிலையாகவும், நாட்டின் மனசாட்சியாகவும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் நம்புவதாகத் தெரிவித்தார்.

HAWANA கொண்டாட்டம் 2018 ஆம் ஆண்டில், நாட்டின் மேம்பாட்டில் பத்திரிகையாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், மே 29 ஆம் தேதி, 1939 ஆம் ஆண்டில் உத்துசான் மெலாயு செய்தித்தாளின் முதல் வெளியீட்டை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டிற்கான HAWANA 'ஒருமைப்பாடுள்ள ஊடகம், நம்பகத்தன்மையின் அடிப்படை' என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது. அடுத்த ஜூன் 20 ஆம் தேதி பினாங்கில் நடைபெறும் உச்சக்கட்ட விழாவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset