செய்திகள் தமிழ் தொடர்புகள்
சோனியா, ராகுலை சந்திக்காமல் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்
சென்னை:
டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் நேற்று சென்னை திரும்பினார். முன்னதாக திட்டமிடப்பட்ட சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதால் அரசியலில் அது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார்.
இப்படியான அரசியல் திருப்பங்களுக்கிடையே முதல்வர் விஜய் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். இது அவரது முதல் டெல்லி பயணம் என்பதால், தேசிய அளவில் இது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் 27-ஆம் தேதி மதியம் டெல்லி சென்றடைந்த விஜய்க்கு, தமிழக அரசு விருந்தினர் இல்லத்தில் தமிழக காவல்துறை சார்பில் முறைப்படியான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்தித்துப் பேசினார்.
பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விஜய் சந்திப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த சந்திப்பும் நடைபெறவில்லை.
அதையடுத்து விஜய் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் விஜய் சந்திப்பார் என்ற தகவல் வெளியானது.
இதனால் சோனியாவின் இல்லத்தைச் சுற்றிலும் முதல்வர் விஜய்யை வரவேற்று பிரம்மாண்ட பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் திடீரென காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு ரத்தானது. முன்னதாக கேரளாவின் புதிய காங்கிரஸ் முதல்வராக சதீஷன் பதவியேற்கும் விழாவில் விஜய் பங்கேற்பதாக இருந்த திட்டம் திடீரென ரத்தானது.
இப்படியான சூழலில் நேற்று காலை 10 மணியளவில் டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு தனி விமானத்தில் விஜய் சென்னை திரும்பினார்.
முன்னதாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வழக்கமாக கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் முதல்வர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தால் தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்தது பேசுபொருளானது.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடியுடனான விஜய்யின் சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது நெதர்லாந்தில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை மீட்டுக் கொண்டு வர வழிவகை செய்ததற்காகப் பிரதமருக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த வான்வழி உள்கட்டமைப்புகளை நிறுவக் கோரியும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். அமித் ஷாவுக்கு அவசர அலுவல் பணிகள் இருந்ததால் விஜய்யை சந்திக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியதில் பல்வேறு அரசியல் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தச் சர்ச்சை குறித்து காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் கூறியதாவது: இதனை தமிழக முதல்வர் ஒரு அரசுமுறைப் பயணமாக மட்டுமே வைத்திருக்க விரும்பியிருக்கலாம். அதனால்தான் பிரதமரை மட்டும் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ளார். ஜூன் 11-ம் தேதி முதல்வர் மீண்டும் டெல்லி வரவுள்ளார். அப்போது நிச்சயமாக சோனியா, ராகுலைச் சந்திப்பார்.
தற்போது ஜார்கண்ட் மாநிலங்களவை சீட், கர்நாடகாவில் முதல்வர் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த விவாதங்கள் சோனியா இல்லத்தில் தீவிரமாக நடந்து வருவதால், தமிழக முதல்வருடன் விரிவாக அமர்ந்து பேசுவதற்கான நேரமும் வாய்ப்பும் காங்கிரஸ் தலைவர்களுக்குக் குறைவாக இருந்தது. இதில் யோசிப்பதற்கோ அல்லது எதிர்மறையாக நினைப்பதற்கோ எதுவும் இல்லை. நாங்கள் தவெக கூட்டணியில் நீடிக்கிறோம், அமைச்சரவையிலும் இருக்கிறோம்.
எனவே, நாங்கள் சந்திப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. விஜய் முதல்வராக பதவியேற்றபோது ராகுல்தான் முதல் ஆளாக வந்து பங்கேற்றார். சோனியா காந்தி இல்லத்தில் முதல்வருக்கு விருந்து கொடுக்கத் திட்டமிடப்பட்டிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் தலைமை சில முக்கிய உள்கட்சி முடிவுகளை எடுக்க வேண்டியிருந்ததால், அது அடுத்த முறைக்குதள்ளிவைக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 28, 2026, 3:29 pm
ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தமிழக முஸ்லிம்கள்: தலைவர்கள் வாழ்த்து
May 27, 2026, 8:05 pm
பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: தமிழகக் கோரிக்கைகளை முன்வைத்தார்
May 26, 2026, 5:57 pm
தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்
May 26, 2026, 3:24 pm
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
