செய்திகள் மலேசியா
மித்ரா ஒதுக்கீடு 150 மில்லியனாக உயர்வு; இந்தியச் சமூகத்திற்கு ஒரு வரலாற்றுத் தருணம்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
மித்ரா நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பது, இந்நாட்டு இந்தியச் சமூகத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்த கூடுதல் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடானது, மித்ரா (முன்னர் செடிக்) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு தசாப்த கால வரலாற்றில் முதல்முறையாகக் கிடைத்துள்ள மிகப்பெரிய உயர்வு.
இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்காகப் பிரதமருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அது செடிக்காக இருந்த காலத்திலிருந்தே, அதன் ஒதுக்கீடு 100 மில்லியன் ரிங்கிட் என்ற அளவிலேயே முடங்கிக் கிடந்தது.
இன்று தான் அந்தத் தடை உடைக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய மாணவர்களுடன் பிரதமர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னர் பிரதமர்துறை அமைச்சின் கீழ் இயங்கிய மித்ரா, தற்போது மனிதவள அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக 'மடானி' அரசு வழங்கி வரும் அர்ப்பணிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
இந்தியச் சமூகத்திற்கான உதவிகள் மித்ராவுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஏனைய அமைச்சுகள் மற்றும் ஏஜென்சிகள் வழியாகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை நினைவு கூர்ந்தார்.
அமானா இக்தியார் மலேசியா மூலம் இந்தியப் பெண்களின் மேம்பாட்டிற்காக பெண் 2.0இன் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, தெக்குன் மூலம் இந்தியச் சமூகத்திற்குச் சிறப்பு நிதியாக 100 மில்லியன் ரிங்கிட்டும், எஸ்எம்இ வங்கி மூலம் இந்தியத் தொழிலதிபர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமது உரையில் மித்ராவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய ரமணன்,
அடுத்த ஆண்டு முதல் இந்தியச் சமூகத்தின் மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார்.
பாலர் பள்ளி முதல் உயர்கல்வி மற்றும் உயர் தொழில்நுட்பப் பயிற்சி வரை அனைத்து நிலைகளிலும் மித்ரா தனது கவனத்தைச் செலுத்தும்.
இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க சர்வதேச ரீதியிலான வியூகக் கூட்டணிகள் உருவாக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 10, 2026, 11:23 am
அரசாங்கத் துறையில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உயர வேண்டும்: சுரேன் கந்தா
May 9, 2026, 11:24 pm
