செய்திகள் மலேசியா
தியாகத்தின் திருவுருவம் அன்னையர்கள்: டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்து
கோலாலம்பூர்:
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்ற வரிகளுக்கு ஏற்ப, உலகில் ஈடு இணையற்ற ஓர் உறவு உண்டென்றால் அது "தாய்" மட்டுமே.
தியாகத்தின் மறு உருவமாகத் திகழும் உலகிலுள்ள அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
தாயின் பாசத்திற்கும், அவரது எல்லையற்ற பொறுமைக்கும், வாழ்நாள் முழுவதும் அவள் செய்யும் தியாகத்திற்கும் இந்த அகிலத்தில் ஈடு இணை ஏதுமில்லை.
உலகில் மற்ற எல்லா உறவுகளும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைந்தவை.
ஆனால், பிரதிபலன் பாராமல், தன் பிள்ளையின் நலம் ஒன்றையே இலக்காகக் கொண்டு இயங்கும் ஒரே இதயம் தாயினுடையது. அவள் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே.
கொண்டு வந்தால் தந்தை... கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்... சீர் கொண்டு வந்தால் சகோதரி...
இந்த வரிகள் சமூகத்தின் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
தந்தை உறவு என்பது பெரும்பாலும் கடமையையும், மற்ற உறவுகள் கொடுக்கல் வாங்கலையும் அடிப்படையாகக் கொண்டவை.
ஆனால், ஒரு பிள்ளை வறுமையில் வாடினாலும், கையில் ஒன்றுமில்லாமல் வந்தாலும், அடைக்கலம் தரும் ஒரே தெய்வம் தாய்.
தன்னலமற்றது தாயின் நெஞ்சம், தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்." கடவுள் அன்பானவர் என்பதற்குச் சான்றாக அவர் படைத்ததுதான் தாய்மை.
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால் தான் தாயைப் படைத்தார் என்பார்கள்.
ஒரு தாய் தன் பிள்ளைகளுக்காகத் தன்னை உருக்கிக் கொள்வது, அந்தப் பரம்பொருளின் கருணைக்குச் சமமானது.
தாயை மதிப்பதும், கொண்டாடுவதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
இன்றைய இயந்திரத்தனமான உலகில், தங்களை ஆளாக்கிய தாயைத் தவிக்க விடும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மனதைக் கலங்கச் செய்கிறது.
அன்பையும் அரவணைப்பையும் மட்டுமே எதிர்பார்த்த அந்தத் தெய்வங்களுக்கு, நாம் கொடுக்கும் "நன்றி" என்பது பணமோ, விலை உயர்ந்த பொருட்களோ அல்ல.
• அவர்களைக் கனிவோடு நடத்துவது.
• மனச்சாட்சியோடு அவர்களுக்குத் துணையாக இருப்பது.
• முதுமையில் அவர்கள் தனிமையை உணராதவாறு பாதுகாப்பது.
இதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உபகாரம்.
இந்த அன்னையர் தினம் என்பது வெறும் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் சடங்காக இல்லாமல் தாயின் தியாகத்தை மனதார உணர்ந்து, அவளுடைய கால்களில் நம் நன்றியைச் சமர்ப்பிக்க வேண்டும். அவளது கண்களில் ஆனந்தக் கண்ணீரும், உதடுகளில் புன்னகையும் வரவழைக்கும் அன்பான சொற்களே நாம் அளிக்கும் சிறந்த பரிசு.
தாயின் பிரிவை எண்ணி வருந்திய பட்டினத்தார் பாடிய இந்த வரிகள், தாய்மையின் வலியை நமக்கு உணர்த்துகின்றன.
எனவே இருக்கின்ற போதே தாயைக் கொண்டாடுவோம். அவரது மனம் குளிர வாழ்வோம். அனைத்துத் தாய்மார்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 10, 2026, 11:23 am
அரசாங்கத் துறையில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உயர வேண்டும்: சுரேன் கந்தா
May 9, 2026, 11:24 pm
