செய்திகள் தமிழ் தொடர்புகள்
வட இந்தியா சுற்றுலா சென்ற திருச்சியைச் சேர்ந்த ஐவர் படகு விபத்தில் சிக்கி மரணம்
திருச்சி:
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் திருச்சியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர், அவரது குடும்பத்தினர் 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே பார்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாலை சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென காற்று பலமாக வீசியதால், படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. சுற்றுலா பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
இதில் 15 பேர் நீந்திச் சென்று தப்பித்தனர். மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாலையில் இருள் சூழ்ந்தால், மீட்புப் பணி சவாலாக இருந்தது. நேற்று காலை வரை 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இவர்களில் திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அடங்குவர். திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் காமராஜ்(39).
இவர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே கமேரியாவில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கார்குழலி. இவர்களது மகன்கள் புவிதரன்(10), தமிழ்வேந்தன்(6).
சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் தாராபுரத்தில் வசிக்கும் கார்குழலியின் அண்ணன் பரிமேலழகன், தனது மனைவி சவுபாக்கியம், மகன் மயூரன், மகள் இனியா(12) உடன் ஜபல்பூர் சென்றிருந்தார். அவர்களை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவாக காமராஜ் அழைத்து சென்றுள்ளார். ஏப்.30-ம் தேதி மாலை 4 மணி அளவில் பார்கி அணைக்கு படகு சவாரி சென்றபோதுதான் அனைவரும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் காமராஜ், அவரது மனைவி கார்குழலி, இளைய மகன் தமிழ்வேந்தன், சவுபாக்கியம், அவரது மகன் மயூரன் உட்பட 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காமராஜின் மூத்த மகன் புவிதரன், உறவினர் இனியா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். காமராஜ், அவரது மகன் தமிழ்வேந்தன் உடல்கள் நேற்று இரவு வரை கிடைக்கவில்லை.
மீட்கப்பட்ட கார்குழலி, சவுபாக்கியம், மயூரன் உடல்கள் இன்று மாலைக்குள் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மீட்புப் படையினர் கூறியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:58 pm
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்ல வேண்டாம்: தவெக வேட்பாளர்களுக்கு விஜய் கட்டளை
April 30, 2026, 4:08 pm
கருத்துக் கணிப்புக்கு பிறகு முதல்வர் ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு
April 29, 2026, 9:32 pm
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்: திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு
April 29, 2026, 1:54 pm
பாவேந்தர் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
April 28, 2026, 3:44 pm
