செய்திகள் தமிழ் தொடர்புகள்
புதுச்சேரியில் ஃபிரெஞ்சு மொழி நீக்கம்: ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு வைகோ கடும் கண்டனம்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தின் இயக்குநர் பிரக்யாசிங், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தக் கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. கல்வி முறையில் இயங்கி வரும் பள்ளிகளில் 6ம் வகுப்பிலிருந்து பிரெஞ்ச் மொழி நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அங்கு சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்று புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், அவசர அவசரமாக இந்த ஆணையை 7 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய பாஜ அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையும், அங்குள்ள தனியார் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் எனும் மும்மொழிக் கொள்கையும் நடைமுறையில் உள்ள சூழலில் அங்குள்ள அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக பெரும்பாலும் மாற்றப்பட்டுவிட்டன.
இப்படிப்பட்ட சூழலில், புதிய மொழிக் கொள்கையைக் காரணமாகக் காட்டி ஒரு வெளிநாட்டு மொழியை மட்டும்தான் படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, ஆங்கில மொழியை வைத்துக் கொண்டு பிரெஞ்ச் மொழியை அகற்றும் பணியில் ஒன்றிய பாஜ அரசு முனைந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு தொடர்புடைய மக்கள் வாழும் மாநிலமாகும். இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் புதுச்சேரியிலும் பிரெஞ்சிலும் இன்னமும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பிரெஞ்ச் மொழி படித்த மாணவர்களின் எதிர்காலம் அங்கு கேள்விக்குறியாகி உள்ளது.
பிரெஞ்ச் மொழி கற்பித்த ஆசிரியர்களின் வேலை குறித்த கவலையும் அங்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஒன்றிய பாஜ அரசின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, மீண்டும் பிரெஞ்ச் மொழியை அங்குள்ள பள்ளிகளில் கற்பிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வை. கோ. தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
