நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

“தலைவர் பதவிக்கு சுல்தானின் அனுமதி தேவையா?”: மலேசியக் கால்பந்து சங்கத் தேர்தலில் எழும் புதிய சர்ச்சை

கோலாலம்பூர்:

மலேசியக் கால்பந்து சங்கத்தின் (FAM) தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள், ஜொகூர் டாருல் தட்சீம் (JDT) அணியின் உரிமையாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற கருத்து, சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தகைய கருத்துகள் சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பான பிஃபாவின் (FIFA) விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் கால்பந்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை வழக்கறிஞர் நிக் எர்மான் நிக் எர்மான் நிக் ரொசெலி, பிஃபா சட்டப்பிரிவு 19-இன் படி, ஒரு நாட்டின் கால்பந்து சங்கம் எந்தவொரு மூன்றாம் தரப்புத் தலையீடும் இன்றித் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 

சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்படாத அல்லது நியமிக்கப்படாத ஒரு நபரின் அனுமதி தேவை என்பது மறைமுகமான தலையீடாகக் கருதப்படும் என்றும், இது பிஃபாவின் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

முன்னதாக, இத்தகைய மூன்றாம் தரப்புத் தலையீடுகள் காரணமாகப் பாகிஸ்தான், இந்தோனேசியா, நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளின் கால்பந்து சங்கங்களுக்கு பிஃபா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மலேசியக் கால்பந்து சங்கம் ஏற்கனவே கடந்த ஆண்டு போலி ஆவணங்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில், தற்போது எழுந்துள்ள இந்த விவகாரம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக ஏழு வீரர்கள் மீது பிஃபா 12 மாத காலத் தடை, அபராதம் விதித்திருந்தது. மார்ச் 5-ஆம் தேதி விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் இத்தடையை உறுதி செய்தது. 

தற்போது தலைவர் தேர்தலிலும் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதால், மலேசியக் கால்பந்து சங்கம் பிஃபாவின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset