நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்ட 19 யானைகள்

புத்ராஜெயா: 

19 யானைகளைச் சில தரப்பினருக்கு விற்றதாக ‘த்ரெட்ஸ்’ சமூக ஊடகத்தில் வைரலான குற்றச்சாட்டை வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய வனவிலங்கு பூங்கா (பெர்ஹிலித்தான்) மறுத்தது.

பெர்ஹிலித்தான் தலைமை இயக்குநர் அப்துல் காடிர் அபு ஹாஷிம், இந்தக் குற்றச்சாட்டு தவறானது என்றும் இது தவறான புரிதலை உருவாக்குவதாகவும் வலியுறுத்தினார்.

யானைகள் விற்கப்படவில்லை, மாறாக தொடர்ச்சியான பாதுகாப்பு, வனவிலங்கு பராமரிப்பு நோக்கத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

நோய் தொற்று, இயற்கை பேரிடர் அல்லது அசல் வாழிடத்தில் இடையூறு ஏற்படும் போது இனத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இது மனிதன்-வன உயிரினம் இடையேயான மோதல்களைக் குறைக்கவும், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்தவும் நோக்கமாக கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

"இந்த அணுகுமுறை 'மக்கள்தொகை காப்பீடு' போல் செயல்படுகிறது, வெவ்வேறு இடங்களில் சில யானைகளை வைப்பது எதிர்பாராத காரணிகளால் பெரிய அளவில் வனவிலங்கை இழக்கும் அபாயத்தை குறைக்கும்" என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்பு கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்கம், உடல்நல கண்காணிப்பு, உணவு, நவீன வாழிட பராமரிப்பு உட்பட தொழில்நுட்ப மாற்றம், நிபுணத்துவம் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு அளிப்பதாக அவர் மேலும் கூறினார்.
இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து யானைகளும் பெறுனர் தரப்பிடமிருந்து பராமரிப்பு பதிவுகள், உடல்நல கண்காணிப்பு, தொடர்ச்சியான அறிக்கைகள் மூலம் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகம், பெர்ஹிலித்தான் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் தொடர்ந்து இருக்கும்.

இதனிடையே, நாட்டின் பாதுகாப்பு முயற்சிகளில் குழப்பத்தையும் எதிர்மறையான கருத்தையும் உருவாக்கக்கூடிய தவறான தகவல்களைப் பரப்புவதை அமைச்சகம் தீவிரமாகக் கண்டிக்கிறது. தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

துல்லியமற்ற தகவல்களைப் பரப்பாமல், உண்மையான தகவல்களைப் பெற பெர்ஹிலித்தானின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை எப்போதும் பார்க்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset