நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாக் பெர்னாமில் சட்டவிரோத குடியேறிகள்: உள்நாட்டு ஆடவர் கைது 

சபாக் பெர்னாம்:

கடந்த திங்கட்கிழமை இங்குள்ள ஜாலான் பெசார் சபாக் பெர்னாம்-கிள்ளான் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற ஒரு பெரோடுவா அல்சா வாகனத்தில் (MPV) சட்டவிரோத வெளிநாட்டுவர்களைக் (PATI) கடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கைது நடவடிக்கை சிலாங்கூர் காவல் துறை தலைமையகத்தின் குற்றம், சூதாட்டம், ஒழுக்கக்கேடு பிரிவால் (D7) காலை சுமார் 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வாகனம், ‘பாக் ஹாஜி’ என அழைக்கப்படும் ஒரு இந்தோனேசிய நபர் நிர்வகித்து வந்த கிள்ளான், மேருவில் உள்ள ஒரு தங்குமிடத்தை நோக்கி சென்று கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனையின் போது, சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநரும், நிலத் தலைவர்  (டெகோங் தராட்) என சந்தேகிக்கப்படும் ஒரு உள்ளூர் நபரும் உட்பட  ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்கிய ஒன்பது இந்தோனேசிய குடியேறிகளும் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பகட்ட விசாரணையில், அந்தக் குடியேறிகள் அனைவரும் முறையான அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக எல்லைதாண்டி சிறிய படகுகளில் பயணம் செய்து மலேசியாவுக்குள் நுழைந்ததாகப் போலிசார் கண்டறிந்துள்ளனர்.

அந்த வெளிநாட்டவர்கள் புறப்படுவதற்கும் பேராக் மாநிலத்தின் பந்தாய் ரெமிஸ் கரையோரப் பகுதியில் கரை இறங்குவதற்கும் முன், படகு இயக்குநருக்கு RM1,500 முதல் RM1,600 வரை ரொக்கமாக செலுத்த வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போலிசார் சம்பந்தப்பட்ட வாகனத்துடன் அதன் சாவிகளையும்  இரண்டு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 2007 ஆம் ஆண்டு ஆட்கடத்தல், புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (ATIPSOM) பிரிவு 26A, 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்காகக் சபாக் பெர்னாம் மாவட்ட காவல் தலைமையகத்திற்கு (IPD) கொண்டுச் செல்லப்பட்டனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset