நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் அதிகரிக்கும் இளையோர் கர்ப்பம்: 21,114 வழக்குகள் பதிவு

கோலாலம்பூர்:

2019 முதல் 2024 வரை 19 வயதுக்கு உட்பட்ட திருமணமாகாத 21,114 இளைஞர்கள் கர்ப்பமாகியுள்ளனர்.

நாட்டின் சுகாதார அமைச்சகம் (KKM) இந்தத் தரவுகளை வழங்கியதாக பெண்கள், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.

இச்சிக்கலைக் களைய பெண்கள், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சகம் (KPWKM) பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

“இனப்பெருக்க, சமூக சுகாதாரக் கல்வி கொள்கை, செயல்திட்டத்தின் (PEKERTI) உருவாக்கம் அவற்றில் முக்கியமான ஒன்றாகும்.

“அனைத்து தரப்பினருக்கும் இனப்பெருக்க சுகாதாரக் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொறுப்புமிக்கச் சமூகத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகின்றது.

“இந்தச் செயல்திட்டங்கள் அதிகாரப்பபூர்வமாக பள்ளிகளிலும் பள்ளிகளுக்கு அப்பாற்பட்டு வெளியிடங்களிலும் நன்முறையில் நடத்தப்படும்,” என்று அவர் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிட்ட எழுத்துப்பூர்வ பதிவில் தெரிவித்திருந்தார்.

மேலும், PEKERTI திட்டம் தேசிய சமூக மன்றத்தின் கீழ் பல அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவும், உயர்கல்விக்கூடங்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும், சமூக மட்டத்தில் விரிவுபடுத்துவதும், இனப்பெருக்க, சமூக சுகாதாரக் கல்வி தொடர்பான செயல்பாடுகள், விளம்பரங்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதும் இதில் அடங்கும் என நான்சி கூறினார்.

அதோடு, KPWKM அமைப்பின் கீழ் இயங்கும் தேசிய மக்கள், குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) மூலம், KafeTEEN இளைஞர் மையங்கள் பள்ளிகளில் செயல்படும் Sahabat KafeTEEN திட்டம் வழியாக இளைஞர்களுக்குச் சிறப்பு ஆதரவு சேவைகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், சமூக நிலைத்தன்மையை உறுதிப்படுத்த புதிய தேசிய குடும்ப கொள்கை, தேசிய குடும்ப செயல்திட்டத்தை அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset