நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள் நூல்; எதிர்காலத் தலைமுறையினருக்கு ஒரு முழுமையான ஆவணமாக இருக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள் நூல் எதிர்காலத் தலைமுறையினருக்கு  ஒரு முழுமையான ஆவணமாக இருக்கும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மலேசியத் தமிழ் ஊடக உலகிற்கும், இந்திய சமுதாயத்திற்கும், அளப்பரிய அரும்பணிகள் ஆற்றி, இந்திய இயக்கங்கள் வழி நாட்டில் தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எழுச்சிமிக்க சேவைகள் ஆற்றியவர் முத்தமிழ் வித்தகர்  முருகு சுப்பிரமணியன், அவர்களை நினைவு கூர்ந்து பார்ப்பதிலும், அவற்றைப் பதிவாக்குவதிலும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

முருகு சுப்பிரமணியன் 'நூற்றாண்டு நினைவலைகள்' நூல் தமிழன் வாழும் வரை வாழும்.

கடந்த ஆண்டு 20 அக்டோபர் 2024-ஆம் நாள் ‘முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு விழா’விற்குத் தலைமையேற்றேன்.

தமிழ் மொழிக்காகவும், தமிழ் ஊடகத் துறைக்காகவும் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஒரு பெருமகனின் நூற்றாண்டு விழா அது.

நிகழ்ச்சியில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த முருகு அவர்களின் பொன்விழா சிறப்பு மலர், பேச்சாளர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான சம்பவங்கள், கடல் கடந்து வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள், இவை அனைத்தும் கண்டு, முருகு அவர்களின் தமிழ்ச் சேவைகளின் விரிவும் பிரம்மாண்டமும்  எனக்கு பிரமிப்பைத் தந்தது.

அவர் குறித்த கூடுதலான தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும். விடுபட்டதை இணைக்க வேண்டும் எனப் பேராவல் கொண்டேன்.

நமது எதிர்காலத் தலைமுறையினரும் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு முழுமையான ஆவணத்தை விட்டுச் செல்ல வேண்டும் என விரும்பியதன் பயனாகத்தான் முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள் என்ற இந்த நூல் இன்று கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் வெளியீடு கண்டது.

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset