
செய்திகள் இந்தியா
மும்பை கனமழையினால் நடுவழியில் நின்ற மோனோரயில்: சிக்கிய 400 பயணிகள் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தனர்
மும்பை:
மும்பையில் கனமழை பொழிந்து வரும் நிலையில் மின் தடை காரணமாக நடுவழியில் மோனோரயில் சேவை செவ்வாய்க்கிழமை மாலை பாதிக்கப்பட்டது. இதனால் அதில் பயணித்த சுமார் 400 பயணிகள் செய்வதறியாது தவித்தனர். நள்ளிரவு முதல் அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர்கள் ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தனர்.
மின் தடை காரணமாக மோனோரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக மும்பை பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் தங்களது பராமரிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
“மழை காரணமாக ஹார்பர் லைன் மூடப்பட்ட நிலையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான மக்கள் மோனோரயிலில் பயணித்தனர். அதன் காரணமாக ரயில் அதன் தடத்தில் இருந்து சாய்ந்தது, மேலும் மின் தடை ஏற்பட்டதாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது” என மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
தீயணைப்பு படையினர் மீட்பு பணியை மேற்கொள்வதற்குள் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பயணிகள் வெளி வந்தனர்.
மாலை 6.15 மணி அளவில் செம்பூர் மற்றும் பக்தி பூங்கா நிறுத்தத்துக்கு இடையில் மோனோரயில் சேவை பாதிக்கப்பட்டு நடுவழியில் நின்றது.
ஏசி இயங்காத காரணத்தால் ரயிலில் இருந்து பயணிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சம்பவம் இடத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பயணிகள் பீதி அடைந்தனர்.
அந்த வகையில் இதுவரை சுமார் 442 பயணிகள் பாதி வழியில் நின்ற மோனோரயிலில் இருந்து பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோனோரயில்: இந்தியாவில் மும்பை நகரில் மட்டுமே மோனோரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த ரயில் சராசரியாக மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இதன் ஒரு பெட்டியில் சுமார் 18 பயணிகள் அமர்ந்தும், 124 பயணிகள் நின்றும் பயணிக்க முடியும். மேல் உயர்ந்த பாதையில் இந்த ரயில் பயணிக்கும்.
மும்பை மழை பாதிப்புகள்: மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இன்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் புரண்டோடியது. மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் காரணமாக மும்பையில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 8:19 pm
யேமன் மரண தண்டனை செவிலியர் நிமிஷா பெயரில் போலி நன்கொடை வசூல்
August 20, 2025, 8:12 pm
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை
August 20, 2025, 3:29 pm
கடந்த ஆண்டு 2,600 கிலோ தங்கம் பறிமுதல்
August 19, 2025, 7:11 pm
கடும் பனிமூட்டம்: கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்
August 19, 2025, 5:03 pm
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி
August 18, 2025, 12:11 pm
ஐதராபாத்தில் கிருஷ்ணர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு
August 18, 2025, 11:21 am