நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பள்ளி ஆசிரியரின் ஒரு நிமிட தாமதம்; நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய 80 மாணவர்கள்: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு

காஷ்மீர்: 

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு, பெருவெள்ளத்தில், சமபந்தி விருந்துக்கு மாணவர்களை அனுப்ப ஆசிரியர் ஒருவர் தயக்கம் காட்டியதால் 80 குழந்தைகளின் உயிர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டது. கடந்த 14ம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பால், ஜம்மு காஷ்மீரின் சசோட்டி கிராமத்தின் மலைப்பகுதி ஓடையான ரஜாய் நள்ளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது. 

பாறைகள், மரங்கள் மற்றும் வீடுகளை அடித்துச் சென்ற இந்த வெள்ளத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர்; 116 பேர் காயமடைந்தனர்; 70 பேரை காணவில்லை.

மீட்புக் குழுவினர் கனரக இயந்திரங்களைக் கொண்டு இடிபாடுகளை அகற்றி மாயமானவர்களை தேடி வருகின்றனர். அன்றைய தினம் சசோட்டி கிராம ஆரம்பப் பள்ளியில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்களுக்கு சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதற்காக பள்ளிக் குழந்தைகளை முன்கூட்டியே அழைத்து செல்ல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆசிரியர் சந்த்தை அணுகினர். ஆனால், அவர் சுதந்திர தின விழா ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால், மாணவர்களை அவர்களுடன் அனுப்ப தாமதித்துள்ளார். 

அன்றைய தினம் காலை 11.40 மணியளவில், பயங்கர சத்தத்துடன் நிலம் அதிர்ந்தபோது, மலையின் ஒரு பகுதி சரிந்து ரஜாய் நள்ளா ஓடையில் விழுவதை அவர் கண்டுள்ளார். உடனடியாக அவர் பள்ளியில் இருந்த மாணவர்களை உயரமான இடத்திற்கு ஓடச் சொன்னார். மேலும் சில மாணவர்களை தன்னுடன் பத்திரமாக பிடித்துக் கொண்டார்.

பெருவெள்ளம் வடிந்த பிறகு, அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக வெளியே வந்தனர். பின்னர் சமபந்தி விருந்து நடந்த இடத்தை நோக்கி ஓடினர். இதுகுறித்து ஆசிரியர் சந்த் கூறுகையில், ‘நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உடல்கள் மிதந்து செல்வதை பார்த்தேன். இடிபாடுகளில் சிக்கியிருந்த 30 பேரை மீட்டேன். இந்த கோர சம்பவத்தில் எனது சகோதரரை இழந்துவிட்டேன். 

இந்த பெருவெள்ளம் சசோட்டி கிராமத்தை அழித்துவிட்டது. எங்களது பள்ளிக்கூடம், ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் தற்காலிக முகாமாக மாறியுள்ளது. சமபந்தி விருந்துக்காக மாணவர்களை உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் அனுப்பி இருந்தால், 80 மாணவர்களை காப்பாற்றி இருக்க முடியாது’ என்று மிரட்சியுடன் கூறினார். 80 மாணவர்களின் உயிரை காத்த ஆசிரியர் சந்த்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset