நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்: கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கோவை:

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிக தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து, தென் தமிழக உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் நேற்று இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை நிலவியது. திருநெல்வேலி, நீலகிரி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்தது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் குமரிக்கடலை அடுத்துள்ள பகுதிகளின் மேல் ஓர் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. 

இதன் காரணமாக, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை முதல் மிக கனமழை பெய்தது. மேலும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை நேற்று பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 

அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் மேற்கண்ட மாவட்டங்களுடன் தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்பதாலும் அங்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை 8ம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியாக இருக்கும். இன்று முதல் 8ம் தேதி வரை மீனவர்கள் வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

தாம்பரத்தில் இடி மின்னலுடன் ஒரு மணிநேரம் கனமழை
சென்னையிலும் புறநகர் பகுதியிலும் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. 

இருப்பினும் பகலில் திடீரென வானிலை மாறியது. இதனால், கருமேகம் சூழ்ந்து சென்னையில் பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து, மாலையில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அதன் சுற்றுவட்ட பகுதிகளில் திடீரென கன மழை பெய்தது. இதனால் தாம்பரம் – வேளச்சேரி சாலை, தாம்பரம் – முடிச்சூர் சாலை, ஜிஎஸ்டி சாலை பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கியது.

இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்ட முடியாமல் தள்ளிச் சென்றனர். கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம் – தாம்பரத்துடன் இணைக்கும் ரயில்வே சுரங்கப் பாலம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset